வெண்கமலம் மீதினிலே
வீற்றிருக்கும் பூமகளே
பண்ணிசைக்கும் வீணையொடு
பார்புகழும் கலைமகளே
என்மனதின் கோவிலுக்குள்
ஏற்றுகின்றேன் தீபமம்மா
பொன்மின்னும் தாரகையே
போற்றுகின்றேன் உன்னையம்மா
கலையமுது கைசேரக்
கவியணியே காத்திடுவாய்
சிலைவடித்தேன் சொல்கொண்டு
சிறியவளின் பிழைபொறுப்பாய்
நான்முகனின் நாவினிலே
நடமாடும் என்தாயே
கான்குயிலும் உன்னருளால்
கவிபாடக் கண்டேனே
திருவடியைப் பணிந்திடவே
திசையெட்டும் மலர்ந்திடுதே
ஒருகவிதை நான்வடிக்க
உள்ளமெலாம் இனித்திடுதே
சின்னவளும் நானுனக்குச்
சிறுகவிதை மீட்டுகின்றேன்
தேன்தமிழில் கவிபாடத்
தேவதையே நீயருள்வாய்
த . கிருத்திகா