கல்யாணம் – சிறுகதை

வாசுதேவன் வீடு கல்யாணக்களை கட்டி அமர்க்களப்பட்டது.

வாசுதேவன் மற்றும் அவரது மனைவி குடும்பத்தினர், அவரது பெண்கள், மருமகன்கள், பேரன், பேத்திகள் என உறவினர்கள் கூட்டம் நிரம்பி வழிய, அவரது மைத்துனர் வாசுதேவனிடம் கேட்டார்.

“கிரிதர் எப்போ வர்றான் மாமா?”

“பதினைந்து நாளைக்கு முன்பே வரச் சொல்லியிருந்தேன். கம்பெனி ஜி.எம். மூன்று நாட்கள்தான் லீவ் கொடுப்பாராம். டைரக்டர்ஸ் மீட்டிங் கல்யாணம் முடிந்த இரண்டு நாட்களில் இருப்பதால் கல்யாணம் முடிந்ததுமே கிளம்பறான்” வாசுதேவன் சுரத்தையின்றி சொன்னார்.

“சீனியர் பி.ஏ. இல்லையா? அதுதான் பிரச்சினை. என்ன செய்வது? முக்கியப் பதவி ஆயிற்றே!” வாசுதேவனை சமாதானம் செய்த மைத்துனர்,

“எல்லா வேலைகளும் முடிந்து விட்டது மாமா. கேட்டரிங், நாதஸ்வரம், சாஸ்திரிகள் எல்லாமே ஏற்பாடு செஞ்சாச்சி. எல்லாருக்கும் டிரஸ்ஸூம் ரெடி. வீடியோ, போட்டோவுக்கு மட்டுமே சொல்லணும்” என்றார்.

“இன்னும் ஒருவாரம்தான் இருக்கு. உடனே அதற்கும் அட்வான்ஸ் ஏற்பாடு செஞ்சிருப்பா” வாசுதேவன் கேட்டுக் கொண்டார்.

கல்யாணத்திற்கு முந்தைய தினம் அதிகாலை, கிரிதர் வந்து சேர்ந்தான்.

மறுநாள் வெகு சிறப்பாக, அமோகமாகக் கல்யாணம் இனிதே நடந்து முடிந்தது. உறவினர்கள் அனைவரும் கிரிதரிடம் வந்து கல்யாணம் விசாரித்தார்கள்.

“வாசுதேவா, உன் ஒரே பிள்ளை கிரிதர் உன்னோட அறுபதாம் கல்யாணத்தை, மணிவிழாவை ஜமாய்சிட்டான். இப்போ உனக்கு சந்தோஷம் தானே?” எனக் கேட்ட வாசுதேவனின் வயதான தாயார் மணிவிழா தம்பதியரை அட்சதை தூவி ஆசிர்வதித்தார்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: