கல்லூரிக் கனவை நனவாக்கப் போகும் மாணவ கண்மணிகளுக்கு வழிகாட்டல் – I

+2 ரிசல்ட்டை மிக வேகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் என் அன்பு நிறைந்த மாணவ கண்மணிகளுக்கு. வாழ்த்துக்கள்!

கடந்த இரண்டு வாரங்களாக +2 ரிசல்ட்டை நீங்கள் எதிர் கொள்ளும் விதம், உயர் கல்வியை தேர்ந்தெடுப்பது தொடர்பான சில செய்திகளை பார்த்தோம்.

இந்த வாரம், +2 ரிசல்ட் வருவதிலிருந்து நீங்கள் கல்லூரியில் சேருகின்ற வரை என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியலிடுகிறேன்; பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இது எல்லாம் எங்களுக்கு தெரிந்தது தானே என்று அசால்ட்டாக நீங்கள் இருக்கப்போவதில்லை என்று நம்புகிறேன்.

ஒரு காரியத்தை எப்படியாவது செய்து முடிப்பதைவிட, சரியாக சிறப்பாக செய்து முடிப்பதே வெற்றியாளர்களின் அடையாளங்கள்.

நான் உங்களை வெற்றியாளர்களாகத்தான் பார்க்கிறேன்.

ரிசல்ட் வருவதற்கு முன்

+2 ரிசல்ட் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே நீங்கள் எந்த COURSE [BA / B.COM / B.Sc / MEDICAL / PARA MEDICAL / ENGINEERING / ARCHITECTTURE] எடுக்க போகிறீர்கள் என்பதை தீர்க்கமாக தீர்மானித்து விடுங்கள்.

அந்த COURSEற்கான காரணம், அதற்கான செயல் திட்டம், எதிர்கால வாய்ப்புகள், உங்கள் குடும்ப சூழல் அனைத்தையும் மனதில் ஆழமாக பதித்துக் கொள்ளுங்கள்.

எந்தக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதை முடிவெடுத்துக் கொள்ளுங்கள்

குறைந்தபட்சம் மூன்று கல்லூரிகளிலாவது விண்ணப்பம் (APPLICATION) போட்டு வையுங்கள்.

நீங்கள் எந்த கல்லூரியில் சேர விரும்புகிறீர்களோ அந்த கல்லூரிக்கு நேரில் சென்றோ அல்லது இணையதளம் மூலமாகவோ அதன் விஷயங்கள் அனைத்தையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் எந்தத் துறைக்கு (DEPARTMENT) செல்ல இருக்கிறீர்களோ அந்த துறையையும் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பெற்றோர்களிடம் நீங்கள் என்ன COURSE எடுக்க போகிறீர்கள் என்பதை  உங்கள் பெற்றோர்களிடம் சொல்லுங்கள். அதனுடைய சாதக, பாதக, எதிர்கால விளைவுகள் என்ன என்பதை அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.

செல்போனில் GAMES தெரிந்து கொண்ட அளவிற்கு நீங்கள் எடுக்க போகும் COURSE குறித்த செய்திகளையும் தெரிந்து கொள்வதற்கு ஆசைப்படுங்கள்.

எவ்வளவு மதிப்பெண் வரும் என்பதை நீங்களாக யூகித்து உங்கள் மனதை தயவு செய்து துன்புறுத்தாதீர்கள்.

நான் வழிபடுகின்ற என்னுடைய இறைவன் எனக்கு நன்மையை மட்டுமே  செய்தார் / செய்து கொண்டு இருக்கிறார் / செய்வார் என்று நீங்கள் நம்புங்கள். ஏனெனில், அதுதான் உன்மையும் கூட.

ரிசல்ட் வெளிவரும் நாள் அன்று

பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வெளிவரும் நாளன்று மன தைரியத்தோடு இறை நம்பிக்கையோடு இருங்கள். என்ன மதிப்பெண்கள் வந்தாலும் அது நமக்கு நன்மையாகவே இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை உணருங்கள்.

இறைவன் புறத்திலிருந்து வரும் அனைத்தும் நன்மைக்கே என முடிவான பிறகு எந்த மதிப்பெண்கள் வந்தாலும் அதை ஏற்க பழகி விடுங்கள்.

அதிக மதிப்பெண்கள் வந்தால் ஆடுவதையும் குறைவான மதிப்பெண்கள் வந்தால் குமுறுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வெளிவந்த ரிசல்ட்டை PRINT OUT எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

நீங்களும் உங்கள் பெற்றோர்களும் எதிர்பார்த்ததை விட உங்கள் மதிப்பெண் குறைந்தால் உங்கள் பெற்றோர்கள் கோபப்படுவார்கள். அமைதியாக பொறுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் உங்கள் மீது கோபப்படுவதற்கான உரிமை இருக்கிறது. காரணம் அவர்களின் உலகமே நீங்கள் தான்.

நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் குறைந்தால் அதை வெளியில் சொல்வதற்கு உங்கள் ஈகோ உங்களை எப்படி தடுக்குமோ, அது போல் தான் உங்கள் பெற்றோர்களுக்கும்.

ரிசல்ட் வந்த பின் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

ரிசல்ட் வந்த மாலை உங்கள் ஆசிரியர்களுக்கு போன் செய்து பேசிக் கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் பள்ளிக் கல்வியை முடிக்கின்ற தருணம் இது. சிறு வயதிலிருந்து தற்போது வரை சொல்லிக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் போன் செய்து அவர்களின் வாழ்த்துக்களைப் பெற முயற்சி செய்யுங்கள். 

உங்களுக்கு வேண்டுமானால் அவர்களைப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அவர்களின் மன மகிழ்ச்சிக்கு நீங்கள் ஒரு காரணமாக இருந்தால் உங்கள் வாழ்க்கை மாறும் என்று புரியவே சுமார் 10 ஆண்டுகள் தேவைப்படும்.

வாய்ப்புகள் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் யோசிக்கும் போது உங்கள் ஆசிரியர்கள் இல்லாமல் கூட போகலாம். 

விண்ணப்பப் படிவத்தை (APPLICATION FORM) பூர்த்தி செய்யும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்துப் பார்ப்போம். 
           
[அடுத்த வாரம் சந்திப்போம்]

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர்
பொருளாதாரத் துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408

One Reply to “கல்லூரிக் கனவை நனவாக்கப் போகும் மாணவ கண்மணிகளுக்கு வழிகாட்டல் – I”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.