கல்லூரிக் கனவை நனவாக்கப் போகும் மாணவ கண்மணிகளுக்கு வழிகாட்டல் – II

+2 ரிசல்ட்டைக் கையில் வைத்திருக்கும் என் அன்பு நிறைந்த மாணவ கண்மணிகளுக்கு. வாழ்த்துக்கள்!

விண்ணப்ப படிவத்தை (அப்ளிகேசன்) பூர்த்தி செய்யும் போது

விண்ணப்ப செயல்முறை பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக நடைபெறுவதால் விண்ணப்பத்தை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை நடைமுறையாக செய்து பாருங்கள்.


• நீங்கள் உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பு  ஒரு வெள்ளை தாளில் உங்கள் பெயர், தாய் - தந்தை பெயர், முகவரி, பிறப்பின் குறிப்பு, வயது, 10, +1, +2 வகுப்பு மதிப்பெண்கள், அந்தந்த வகுப்புகளின் பதிவு எண்,  தொலைபேசி எண்/மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண் போன்ற அனைத்தையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அவை அனைத்தையும் தனித்தனியாக JPG / PDF முறையில் உங்கள் கம்ப்யூட்டர் / லேப்டாப்/ செல்போனில் வைத்துக் கொள்ளுங்கள்.

• விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் போது அவசரப்படாதீர்கள். அந்த விண்ணப்ப படிவத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கலாம். என்ன கேட்கிறார்கள் என்பதை தெளிவாக புரிந்து பூர்த்தி  செய்யுங்கள். 

• அப்போது வேறு எந்த வேலைகளையும் வைத்துக் கொள்ளாதீர்கள். செல்போன்  பயன்பாடு உட்பட.

• பூர்த்தி செய்த அனைத்தும் நீங்கள் குறிப்பிட்டு இருக்கின்ற உங்கள் மின்னஞ்சலிற்கு வந்து விடும். அதையும் பிரிண்ட் எடுத்து வைத்து ஒரு பைல் போட்டு சேகரித்து வாருங்கள்.

• உங்களுக்கு பிடித்த ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்த மூன்று கோர்ஸ் வரை அப்ளை செய்து வையுங்கள்.

• ஒருவேளை ஒரு கோர்ஸ் மட்டும் விண்ணப்பம் செய்து நிச்சயமாக கிடைக்கும் என்று நம்பலாம். ஒரு வேலை கிடைக்காமல் போனால் மீண்டும் விண்ணப்பிப்பது சாத்தியமற்றது.

• நீங்கள் விண்ணப்பித்த உடன் ஒவ்வொரு கல்லூரிகளுக்குமான அட்மிஷன் நேர காலங்கள் வித்தியாசப்படலாம். நீங்கள் விண்ணப்பித்து செய்த கல்லூரிக்கான அட்மிஷன் செயல்முறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு  நீங்கள் விண்ணப்பித்ததில் இருந்து பத்து நாள் கழித்து அட்மிஷன் ஆரம்பிப்பதாக இருப்பதாக வைத்துக் கொண்டால் நீங்கள் 11 வது நாளே அங்கே சென்று என்ன என்பதை விசாரித்து விட்டு வாருங்கள்.

• நாம் செய்கின்ற தவறு என்ன தெரியுமா? நாம் விண்ணப்பித்து விடுவோம். கல்லூரியில் இருந்து தகவல் வரும் என்று எதிர்பார்ப்போம். காத்திருப்போம். வந்தால் நல்லது. ஒருவேளை உங்களுக்கு தகவல் வரவில்லை என்றால் அல்லது வந்த தகவலை உங்கள் ஈ மெயிலில் நீங்கள் பார்க்கவில்லை என்றால் என்ன செய்வது?

• உங்களை பொறுத்தவரை கல்லூரி வாழ்கை என்பது உங்கள் எதிர்காலம். ஆனால் கல்லூரிக்கு 5000 மாணவர்களில் நீங்களும் ஒருவர். எனவே உங்கள் விஷயத்தை நீங்கள் பின்பற்றி கொள்ளுங்கள். நீங்கள் விண்ணப்பித்த கல்லூரியில் சேர்க்கை செயல்முறை எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

• ஒருவேளை நீங்கள் ஒரு கோர்ஸ் மட்டும் விண்ணப்பித்து அந்த கோர்ஸ் கிடைக்காமல் போனால் நீங்கள் விரும்பாத இன்னொரு துறையை உங்கள் மீது திணிக்க நேரிடலாம். அதனால் உங்களுக்கு பிடித்த ஒன்று இரண்டு மூன்று கோர்ஸ்கள் வரை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

• நீங்கள் கல்லூரி விஷயமாக எங்கு சென்றாலும் உங்கள் பெற்றோர்களிடம் அதாவது உங்கள் தாயிடமும் தந்தையிடம் சொல்லிவிட்டு செல்லுங்கள். 

• இன்டெர்வியூ அன்று நேர மேலாண்மையை பின்பற்றுங்கள்.

• அட்மிஷன் நடக்கின்ற அன்று உங்களுக்கு இன்டர்வியூ கார்டு வந்தால் அதில் என்னென்ன கேட்டிருக்கிறார்கள் என்பதை மூன்று மூன்று நகல்கள் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். வரிசைபடியாக அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

• காலையில் போகிற வழியில் ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்ற மனநிலையை உதறித் தள்ளுங்கள்.

• இன்டெர்வியூ அன்று அழகாக செல்லுங்கள். உங்கள் அழகை கண்ணாடியில் பார்த்து மகிழ்ச்சியோடு சென்று வென்று வாருங்கள்! வாழ்க்கை வாழ்வதற்குத்தான்!!

எனதருமை மாணவர்களே!

பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலம் அது. தேர்வுகள் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒரு கடைக்கு சென்றேன்.

ஒரு வயது முதிர்ந்த பெரியவர் (சுமார் 75 வயது இருக்கும்). கடையின் வாசலில் நின்று கொண்டிருந்தார். கடையில் கூட்டமும் அதிகம் இருந்ததால் அவரால் நிற்க முடியவில்லை.

“தம்பி கொஞ்சம் தள்ளிக்கோப்பா” என்று அந்த கடை அமைந்திருந்த சாலையின் வாசலில் சம்மணங்கால் போட்டு உட்கார்ந்து விட்டார்.

சிறிது நேரத்தில் கடையில் உள்ளிருந்து, “ஐயா! பெரியவரே! உங்கள் வேலை முடிந்து விட்டது. வாங்கிவிட்டு செல்லுங்கள்” என்று சப்தம் கேட்டது.

சப்தம் கேட்டு எழ முடியாமல் எழுந்து கடையின் கல்லா அருகில் சென்றார்.

ஏற்கனவே அதற்கான காசை கொடுத்து விட்ட அந்த பில்லை நீட்டியதும், “இந்தாங்க ஐயா உங்கள் பேத்தியின் புத்தகம்” என்றதும் சுமார் 20 புத்தகங்கள் இருக்கும் தூக்க முடியாமல் தூக்கி சைக்கிளின் பின்னால் அதை கட்டி, சைக்கிளை தள்ளிய படியே வாகன நெரிசலுக்குள் நுழைந்து சென்று விட்டார்.

Ph.D., MBBS, Engineering, Architecture என பல்வேறு படிப்புகளை டிகிரிகளை வாங்கி நான் பெற்ற கல்வி எனது அறிவால் கிடைத்தது அல்ல. என் தாய் தந்தையின் தியாகத்தால் தான் கிடைத்தது என்பதை மீண்டும் ஒருமுறை புரிந்து கொண்டேன்.

இதே புரிதலோடு நீங்களும் பயணியுங்கள். நீங்கள் படித்ததற்கான அர்த்தம் மட்டுமல்ல.. வாழ்விற்கான அர்த்தத்தையும் புரிந்து கொள்வீர்கள்!

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர்
பொருளாதாரத் துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408

One Reply to “கல்லூரிக் கனவை நனவாக்கப் போகும் மாணவ கண்மணிகளுக்கு வழிகாட்டல் – II”

Comments are closed.