கல்வி என்பது முறையான படிப்பு (formal education) என்றும் தாமாக முனைந்து கற்றுக் கொள்ளும் படிப்பு (self education)என்றும் இரு வகையாக கூறப்படும்.
முறையான கல்வி பயில்பவர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் மாணவனாக கற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கும், இன்றைய செயற்கை நுண்ணறிவு கால கட்டத்தில், கல்வி கற்பதில் உறுதுணை புரியும் சில ஏஐ கருவிகள் பற்றி இந்த இரண்டு நிமிடக் கட்டுரையில் காண்போம்
டியோலிங்கோ (Duolingo)
இது மொழியியல் கற்பதற்கான ஒரு தளம். இலக்கணம், உச்சரிப்பு மற்றும் எழுதும் ஆற்றல் ஆகியவற்றை மதிப்பிடுவதுடன், கடினமாக உள்ளவற்றை உரிய பயிற்சிகள் வாயிலாக கற்றுத் தேர்ச்சி அடையவும் இது பெரிதும் உதவுகிறது.
கோர்ஸெரா (Coursera)
உங்கள் ஆர்வம் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில், நீங்கள் முன்பு படித்த படிப்புகளுக்கு ஏற்ப, மேலும் படிக்க வேண்டிய படிப்புகளை இத்தளம் பரிந்துரைக்கிறது . உங்கள் தொழில் மற்றும் பணியில் பயன் அளிக்கும் படிப்புகளை இதன் வாயிலாகக் கற்கலாம்.
கிராமர்லி (Grammarly)
நான் நன்றாக எழுதுவேன். கிராமர் தான்… என்று தயக்கம் கொண்டவர்கள் தங்களை கூர்மைப்படுத்திக் கொள்ள இந்த தளம் உதவுகிறது. ஏஐ ரைட்டிங் அசிஸ்டன்ட் என்பதன் வாயிலாக நீங்கள் எழுதும் வாக்கியங்கள், இலக்கணம் மாறாமல், தேர்ச்சி பெற்ற மொழி ஆளுமை உடையவர் எழுதியது போல் இருக்கும்.
கியூஸ்லெட் (Quizlet)
ஸ்மார்ட் ஃபிளாஷ் கார்டுகள் மற்றும் பல கற்றல் கருவிகள் கொண்ட தளம் இது. இதில் மெஷின் லேர்னிங் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள்படித்ததை நன்கு கற்றவை, சற்றே பின் தங்கியவை எனப் பகுத்துக் காண்பித்து மேம்படுத்திக் கொள்ள வழிகாட்டுகிறது.
இதில் உள்ள மதிப்பாய்வு பகுதி (review section), படித்தவற்றை நன்றாக நினைவில் இருத்திக் கொள்ள உதவுகிறது.
ஸ்கிரைப்சென்ஸ் (Scribe Sense)
படித்தவற்றை, படித்ததில் இன்றியமையாத அம்சங்களைக் குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். ஸ்கிரைப்சென்ஸ் கருவி விரிவுரை, பேச்சு, உரை ஆகியவற்றை ட்ரான்ஸ்க்ரைப் செய்து பிழிவாக ஆக்கித் தருவதால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் படித்து கற்றுக் கொள்ள ஏதுவாகும்.
பள்ளிகளில், கல்லூரிகளில் பயில்பவர்களுக்கும் படிப்பை முடித்த பின் பணிக்குச் சென்ற பின்னரும் கல்வி ஆர்வம் தணியாமல் இருப்பவர்களுக்கும் இந்த ஏஐ கருவிகள் புதிய உயரங்களை எட்ட உதவும்.
மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!