கடற்கரை அழகினைப் பாடிடுவோம் – கடற்
காற்று தரும்சுகம் நாடிடுவோம்
படர்மணற் பரப்பினில் கால்பதித்தே – பிணி
பறந்திட உடல்வளம் கூடிடுவோம்
வானகம் கடல்தொடும் தனியழகும் – கடல்
வாழ்ந்திடும் மீன்களின் களிப்பழகும்
மீனவர் படகிடும் துடுப்பழகும் – நிறை
வேடிக்கைக் காட்டும் கடற்கரையே
முதியவர் இளையவர் சிறுவர்களும் – அவர்
உடன்வரும் துணையுடன் வலம்வருவார்
புதுமணல் வடிவுற வீடமைத்தே – இன்பம்
பொங்கிட மழலையர் ஆர்ப்பாரிப்பார்
தோண்டி மணற்கிண றமைத்திடுவார் – சிலர்
சோர்வறப் பந்துகள் வீசிக்கொள்வார்
தாண்டிடும் அலைகளின் தலைமேலே – நின்று
தாண்டவம் ஆடிட சிலர்முனைவார்
கரைதனில் ஏறிடக் கைநீட்டும் – அலை
காளையின் வேகத்தில் பாய்ந்துவரும்
நுரையெனும் படமெடுத் தாடிவந்தே – அலை
நொடியினில் பாம்பெனச் சீறிவிடும்
நீந்திடும் குழந்தைபோல் தவழ்ந்துவந்தே – அலை
நெருங்கிட அடிமணல் கிளர்ந்திழுக்கும்
ஊர்ந்து நகர்ந்திங்கு வருவதுபோல் – அலை
மோதி இடித்து வியப்பளிக்கும்
இமயவரம்பன்
மறுமொழி இடவும்