கள்ளச்சாராயமும் கண்ணீரும்!

எங்க அப்பா
கூலிவேலைக்கு போனவரு
குடிக்கு அடிமை ஆனவரு!
பாக்கெட்டுல சாராயம்
பாதிவிலை விற்கிதுன்னு
வாங்கி குடிச்சாரு
வராமல் போனாரு!

விடிய காலையில
வேலைக்கு போகையில
பென்சில் கேட்டதற்கு
வரும்போது வாங்கி வாரேன் என்று
சொல்லிவிட்டு போனவரு…
பென்சிலு வாங்காம
பெட்டியில வந்தாரு!

எத்தனையோ நாளு
குடிச்சிட்டு வந்து
அம்மாவை அடிச்சிருக்காரு!
அம்மாவும் அழுதுருக்கு….
இனி அடிக்கக்கூட ஆளுமில்ல!
நாங்க அனாதையா இந்த பூமியில…

வேலை விட்டு வந்தவுடன்
தண்ணீரில் குளிப்பாரு!
இன்று மட்டும் எங்க அப்பா
பன்னீரில் குளித்தாரு!

கைகாலு நோகுதுன்னு
கள்ளச்சாராயம் நீ குடிச்ச!
பச்ச தண்ணி குடிச்சிருக்கோம்
பார்த்து அழுக வேண்டும் – என்று
இன்று மட்டும் கள்ளச்சாராயம் உங்களுக்கு!
என்றுமே உங்கள் நினைவுடன் கண்ணீர் எங்களுக்கு……..

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி:  9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com