புலனைந்தும் பொன்றும் புகழ்மங்கும் சேர்த்த
நலனழியும் நாநாய்போல் தள்ளும் – விலங்கனைய
ஈமொய்த்(து) இளஞ்சிறார் நாண இழிவடையும்
தீமொந்தைக் கள்ளுண்பார் வாழ்வு
மாதர் முகம்நாண மானம் பறந்தோட
வாதநோய் வந்தார்போல் வாய்க்கோண – ஏதமிகு
கள்ளைஎஞ் சான்றுங் களித்துண்டு வீழ்வார்க்குப்
பிள்ளைமனை பெற்றோர்வீண் பீடு
உணவும் உடையும் உறையுளும் மின்னு
மணியணி செய்திலன்என் றாலும் – அணுவளவும்
அன்னை யெனுந்தெய்வம் ஆர்ப்பரிக்காள் கள்ளுண்டால்
முன்னைமுகம் நோக்காள் முனிந்து
நொந்துப் பொருள்சேர்த்து நோய்நுகரும் செய்கைபோல்
வெந்துக் குடலழிய வேட்பதுவோ – செந்தணலில்
துஞ்சி யிருப்பதுவும் உண்டாகும் கள்ளுண்டே
எஞ்சி இருப்ப தெவன்?
கண்மங்கும் காது குறைபடும் நாக்குழறிச்
சொன்மங்கும் மூப்புவரும் சோர்வுதரும் – உண்மங்கி
ஊனுடல் குன்றும் ஒளிபொன்றும் எந்நொடியும்
சானுழையுங் கட்குடிப்ப வர்க்கு
மதுவிற் றொடங்கி வகைதொகை யானப்
புதுப்புதுப் போதையில் மூழ்கி – அதுவி(து)
எனப்பல ஆளழி பாதையில் சென்று
தினமழி மாந்தர்கள் நூறு
கொலைகளவு பொய்க்காமம் போதையான் உண்டே
நிலைகுலையு முன்னரே நிற்க – அலைபகையான்
வையத் திறந்தார் அளவினும் மேற்றேஇப்
பையக்கொல் நஞ்சின் தொகை
ஆடவர்க்குப் பெண்ணிங் கடிமையிலை என்றெண்ணி
ஈடெவரோ என்ப இவர்குடிக்கக் – காடவிழ்
முல்லையரும் பொத்த முளையினரும் தான்குடிக்கும்
எல்லை யடைந்தனரே இன்று
இளமகவைக் கைம்பெண்டிர் ஈடின்றித் தோன்றுங்
களமெதிர்ப்பீர் தன்னாட்டைக் கண்டு – வளங்கொழிக்குங்
கள்ள மதுவாற் கடிதிறந்தார் கண்டபின்னும்
உள்ளந் திருந்தாதர் உண்டு
மறதியெனும் பொய்விளக்கம் மங்கா தெரிய
நறவுநெய் ஊற்றே மதுவாம் – இறகிருந்தும்
வானளக்கச் செல்லா வளக்கோழி தான்மக்கள்
யானுரைத்தும் என்ன பயன்?
பேரினப் பாவலன்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574