கழறிற்றறிவார் நாயனார் சுந்தர மூர்த்தி நாயனாருடன் இணைந்து கிடைக்கதற்கரிய சிவனடியை பெற்றவர். இவர் சேரமான் பெருமாள் நாயனார் என்று சிறப்பிக்கப்படுகிறார்.
இவர் சிவனடியார் மேல் கொண்டிருந்த பேரன்பினால், உவர்மண் சிந்திய மேனியை உடையவரை சிவனடியாராக நினைத்து வணங்கியவர்.
சிவனடியாரான பாணபத்திரரின் வறுமையைப் போக்க, இறைவனார் திருமுகம் எழுதி பாணபத்திரரிடம் கொடுத்து, கழறிற்றறிவார் நாயனார் இடத்து சேர்ப்பிக்கச் சொல்லி, பொருள் பெற்றுக் கொள்ளுமாறு அனுப்பிய பெருமையை உடையவர்.
சிற்றுயிர்களின் பேச்சு மொழியையும் பிறர் கூற இருப்பதையும் செய்ய இருப்பதையும் உணரும் ஆற்றலை, இறையருளால் பெற்றிருந்த சிறப்பினை உடையவர் கழறிற்றறிவார் நாயனார்.
இவர் இறைவன்பால் கொண்டிருந்த பேரன்பால், தம்முடைய வழிபாட்டின் முடிவில் தில்லை ஆடலரசனின் காற்சிலம்பொலியை கேட்கும் திறனை இறைவனால் அருளப்பட்டிருந்தார்.
முடிசூடா மன்னர்
பண்டைய சேர நாட்டின் தலைநகர் வஞ்சி. அதனுடைய மற்றொரு பெயர் கொடுங்கோளுர். அவ்வூருக்கு அருகே திருவஞ்சைக்களம் என்னும் தலம் ஒன்று இருந்தது. கொடுங்கோளுர் மகோதை என்றும் அழைக்கப்பட்டது.
தற்போது கொடுங்கோளுர் கொடுங்கல்லூர் என்றும், திருவஞ்சைக்களம் திருவஞ்சிக்குளம் என்றும் அழைக்கப்படுகிறது.
சேரர் குலத்தில் பிறந்த பெருங்கோதையார் சிவபெருமானிடம் தீரா அன்பு கொண்டிருந்தார். ஆதலால் திருவஞ்சைக்குளத்தில் வீற்றிருந்த அஞ்சைக்களத்தப்பரை வணங்கி, அக்கோயிலில் உரிய தொண்டுகள் செய்து சிவனடியையே நினைத்து வாழ்ந்து வந்தார்.
அப்போது வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட சேர மன்னன் செங்கோற்பொறையன் என்பான், நிலைத்த இன்பமாகிய வீடுபேற்றினை வேண்டி, அரச பதவியைத் துறந்து துறவறம் மேற்கொண்டு சென்று விட்டான்.
அரசர் இல்லாததால் அமைச்சர்கள் நூல்கள் பல ஆராய்ந்து அரச மரபில் தோன்றிய பெருமாக்கோதையாரை அணுகி சேர அரச பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினர்.
‘அரச பதவியை ஏற்றால் அது சிவனாரை வழிபடவும், அடியார்களுக்கு தொண்டு செய்யவும் தடையாக அமைந்துவிடும்’ என்று எண்ணி மனதில் வருத்தம் கொண்டார்.
பல்வாறு சிந்தித்து இறுதியில் ‘சிவானாரின் திருவுள்ளம் விரும்பினால் மட்டுமே அரசபதவியை ஏற்பது’ என்ற முடிவினைக் கொண்டவராய் அஞ்சைக்களத்தப்பரிடம் தம்முடைய வேண்டுகோளை விண்ணப்பமாக வைத்தார்.
அஞ்சைக்களத்தப்பர் பெருமாக்கோதையாருக்கு அரசாட்சியை ஏற்றுக்கொள்ளும்படி ஆணையிட்டதோடு, சிற்றுயிர்களின் பேச்சு மொழியை அறியவும், பிறர் கூற இருப்பதையும், செய்ய இருப்பதையும் அறிந்து கொள்ளும் (கழறுதல்) ஆற்றலையும் திருவருளாக வழங்கினார்.
இறைவனின் திருவருளால் பெருமாக்கோதையாருக்கு கிடைத்த கழறுதல் (அறிந்து கொள்ளுதல்) ஆற்றலால், அவர் கழறிற்று அறிவார் என்று அழைக்கப்பட்டார் என்றும் சொல்லுவர்.
இறைவனின் ஆணை கிடைத்தபின், அவர் முடிசூடா மன்னராகவே சேரமான் பெருமாள் என்னும் திருப்பெயருடன் சேரநாட்டை ஆட்சி செய்தார்.
திருநீற்றை மெய்ப்பித்தீர்
கழறிற்றறிவார் ஒருநாள் வஞ்சி நகரை வலம் வரும்போது, வண்ணான் ஒருவன் உவர்மண்ணைத் தலையில் சுமந்து சென்று கொண்டிருந்தான்.
உவர்மண்ணானது வண்ணானின் உடலில் மழைநீரால் சிந்தி உடலெங்கும் வழிந்து காய்ந்து நீறு பூத்திருந்தது.
ஆனால் கழறிற்றறிவார் நாயனார் அவ்வண்ணானை திருநீறு பூசிக் கொண்டிருக்கும் அடியாராகக் கருதி யானையில் இருந்து இறங்கி அவனைப் பணிந்தார்.
அரசபெருமான் தம்மை வணங்குவதைக் கண்ட அவ்வண்ணான் “அடியேன், அடிவண்ணான்” என்றான்.
அதற்கு சேரமான் பெருமாள் “அடியேன் அடிச்சேரன். நீவிர் திருநீற்றை மெய்ப்பித்தீர்” என்று கூறி மகிழ்ந்தார். இதுகண்ட எல்லோரும் மன்னனின் அடியார் பக்தியை வியந்து போற்றினர்.
கொடுப்பதின் இலக்கணம் பெறுவதின் இலக்கணம்
மதுரையில் பாணபத்திரர் என்னும் சிவனடியார் நாள்தோறும் யாழினை மீட்டி பாடல்கள் பாடி, ஆலவாய் அண்ணலைப் போற்றி தொண்டு செய்து வாழ்ந்து வந்தார்.
அவர் வறுமையால் வாடியதைக் கண்ட சொக்கேசர் பாணபத்திரரின் வறுமையைப் போக்க எண்ணம் கொண்டார்.
ஆதலால் ‘மதிமலி புரிசை’ என்ற பாடலை ஓர் திரைச்சீலையில் எழுதி, ‘இத்திருமுகத்தை சேரமான் பெருமாளிடம் சேர்ப்பித்தால் பரிசில் வழங்குவான்’ என்று குறிப்பித்தார்.
இறைஆணைக்கு இணங்க பாணபத்திரர் அத்திருமுகத்தைப் பெற்றுக் கொண்டு, சேர நாட்டை அடைந்து சேரமான் பெருமாளிடம் சேர்ப்பித்தார்.
அதில் ‘மதுரையில் இருக்கும் ஆலவாயரனாகிய நான் சேரமானுக்கு எழுதுவதாவது, இதனைக் கொணர்பவன் உன்னைப் போல் என்னிடம் பேரன்பு உடையவன். இவனுக்கு வேண்டியதைக் கொடுத்தனுப்புக’ என்ற செய்தி பாடல் வடிவில் இடம்பெற்றிருந்தது.
திருமுகத்தைப் படித்ததும் சேரமான் பெருமாள் அதனை தலையில் வைத்துக் கொண்டு ‘எம்பெருமானின் திருமுகம் பெறும்பேறு எனக்குக் கிடைத்ததே’ என்று ஆனந்தக் கூத்தாடினார்.
அமைச்சர்களை அழைத்து தமக்குரிய செல்வங்கள் யாவற்றையும் ஒன்றுவிடாமல் எடுத்துக் கொண்டு வரச் செய்தார்.
பின்னர் பாணரைப் பணிந்து, “இவையாவும் தங்களுடையதே. இந்த அரசாட்சியும் தங்களுடையதே!” என்றார் கழறிற்றறிவார் நாயனார்.
அதனைக் கேட்டதும் அஞ்சி நடுங்கிய பாணர், தமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு, “இறைவர் ஆணையின்படி தாங்களே அரசாட்சி புரிய வேண்டும்” என்றார்.
இறையாணை என்றதும் அரசாட்சியை தம்மிடமே வைத்துக் கொண்டு, பாணபத்திரர் வேண்டிய பொருட்களை மட்டும் அவருக்கு கொடுத்து, பாணரை யானைமீது அமர்த்தி அன்புடன் வழியனுப்பி வைத்தார் சேரமான்.
இச்செய்தியை திருவிளையாடல் புராணத்தில் திருமுகம் கொடுத்த படலம் விளக்கிக் கூறுகிறது.
இந்நிகழ்வின் மூலமாக கொடுப்பதின் இலக்கணமாக சேரமானும், பெறுவதின் இலக்கணமாக பாணபத்திரரும் திகழ்கிறார்கள்.
கால் சிலம்பொலி கேட்டல்
சேரமான் பெருமாள் இறைவன்பால் கொண்டிருந்த பேரன்பினால், தினசரி செய்யும் வழிபாட்டின் முடிவில் வழிபாட்டினை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக, தில்லை நடராசப் பெருமானின் கால்சிலம்பு ஒலியை கேட்கும் திறனை இறைவனார் அவருக்கு அருளியிருந்தார்.
இறையருளால் காற்சிலம்பொலி கேட்கும் திறனைப் பெற்றிருந்ததால், சேரமான் பெருமாள் நாயனார் கழறிற்று அறிவார் என்றழைக்கப்பட்டதாக பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு ஒருநாள் சேரமான் பெருமாள் நாயனார் செய்த வழிபாட்டின் இறுதியில் ஆடலரசனின் காற்சிலம்பொலி கேட்கவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் ‘நாம் செய்த வழிபாட்டில் ஏதோ தவறு நேர்ந்து விட்டது. ஆதலால்தான் இறைவனாரின் கால் சிலம்பொலி கேட்கவில்லை’ என்று எண்ணி உடைவாளால் குத்திக் கொள்ளப் போனார்.
அப்போது ஆடலரனின் சிலம்பொலி கழறிற்றறிவார் நாயனார் காதில் ஒலித்தது. “இறைவனே, இன்று இந்த ஒலி தாழ்த்தற்கு காரணம் என்ன?” என்று வருத்திக் கேட்டார்.
“இன்று தில்லையில் சுந்தரன் வந்து திருப்பதிகம் பாடினான். அதனைக் கேட்டுக் கொண்டிருந்தமையால் தாமதமாயிற்று.” என்றார் இறைவனார்.
சுந்தரரையும், சேரமானையும் நண்பர்களாக்க வேண்டும் என்பதே இறைவனாரின் திருவுள்ளம். ஆதலாலே சிலம்பொலியை காலம் தாழ்த்தி ஒலிக்கச் செய்தார்.
இறைவனாரின் கூற்றைக் கேட்டதும் ‘அவ்வளவு சிறந்தவராகிய சுந்தரரை தரிசிக்க வேண்டும்’ என்ற எண்ணம் சேரமான் பெருமாளுக்கு ஏற்பட்டது. ஆதலால் தில்லையை நோக்கிப் புறப்பட்டார்.
ஆனால் சேரமான் பெருமாள் நாயனார் தில்லையை அடைவதற்கு முன், சுந்தரர் தில்லையை நீங்கி திருவாரூரை அடைந்தார்.
தில்லை சென்ற கழறிற்றறிவார் நாயனார் ஆடலரசனை வணங்கி ‘பொன் வண்ணத் தந்தாதி’ என்ற நூலைப் பாடினார்.
பின்னர் சுந்தரர் திருவாரூரில் இருப்பதை அறிந்து திருவாரூர் சென்று அவரை வணங்கி நட்புக் கொண்டார். இருவரும் உள்ளம் கலந்த பெரும் நண்பர்களானார்கள்.
திருவாரூரில் இருக்கும் புற்றிடங் கொண்ட நாதரை இருவரும் வழிபட்டனர். சிலகாலம் திருவாரூரில் தங்கி இருந்த சேரமான் பெருமாள் தியாகேசரைப் போற்றி ‘திருவாரூர் மும்மணிக் கோவை’ என்ற நூலைப் பாடியருளினார்.
அதன்பின் சுந்தரமூர்த்தி நாயனாரோடு சேர்த்து சோழ நாடு மற்றும் பாண்டிய நாடு தலங்களை வழிபட்டு திருவஞ்சைக்களத்தை அடைந்து அஞ்சைக்களத்தப்பரை சுந்தரரோடு இணைந்து வழிபட்டார் கழறிற்றறிவார் நாயனார்.
நகர் முழுவதும் சிறப்பாக அலங்கரித்து சுந்தர மூர்த்தி நாயனாரை வரவேற்று சிலகாலம் தம்முடன் இருக்கச் செய்தார். பிறகு சுந்தரர் திருவாரூர் சென்றார்.
சிவகணமான சேரமான் கழறிற்றறிவார் நாயனார்
அதன்பிறகு ஒருமுறை வஞ்சி நகரத்திற்கு வந்தார் சுந்தரர். அப்போது திருவஞ்சைக்களம் சென்று வழிபாடு செய்யும் போது, சுந்தரருக்கு ‘உலக வாழ்வு போதும்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனை குறிப்பால் இறைவனிடம் விண்ணப்பித்தார்.
சுந்தரரின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட இறைவனார் அவரை அழைத்துவர வெள்ளை யானையை அனுப்பினார். இறையாணையை ஏற்று சுந்தரர் வெள்ளை யானையின் மீது ஏறிச் சென்றார்.
இச்செய்தியைக் கேள்வியுற்று அரண்மனையில் இருந்த சேரமான் பெருமாள் குதிரையின் மீதேறி திருக்கோவிலுக்குச் சென்றார்.
அதற்குள் சுந்தரர் யானைமீது கயிலை சென்றதை அறிந்ததும் அக்குதிரையின் காதில் சிவமந்திரத்தைக் கூறவும், குதிரை காற்றில் பறந்து கயிலையை நோக்கிச் செல்லலாயிற்று.
சுந்தரரின் யானைக்கு முன்பாக குதிரையில் கயிலை சென்ற கழறிற்றறிவார், நாயனார் வாயிலில் தடைபட்டு உள்ளே செல்ல இயலாது வெளியே நின்றார்.
சுந்தரர் கயிலை அடைந்து இறைவனாரையும் உமையம்மையையும் வழிபட்டு, சேரர் பெருமான் வெளியில் காத்திருப்பதை இறைவனிடம் தெரிவித்தார்.
உடனே சிவனார் அவரை அழைத்துவரப் பணித்தார். கயிலையினுள் சென்று இறைவனாரை சேரர் பெருமான் வணங்கியதும் “யாம் அழைக்காமல் நீ ஏன் வந்தாய்?” என்று கேட்டார்.
“அடியேன் சுந்தர மூர்த்தி நாயனாரின் திருவடிகளை வணங்கி அவர் யானைக்குமுன் சேவித்து வந்தேன். இறைவனாரின் கருணையால் இங்கு வரப்பெற்றேன்.” என்றார்.
பின்னர் இறைவனாரிடம் “மற்றொரு விண்ணப்பமும் கேட்டருள வேண்டும். அடியேன் தேவரீர்மேல் உலா ஒன்று பாடியுள்ளேன். அதனைத் திருச்செவி சாய்த்து அருள வேண்டும்.” என்றார்.
இறைவனாரும் தமது சம்மதத்தை தெரிவிக்க, ‘திருக்கையிலாய ஞான உலா’ என்பதைப் பாடினார்.
அதனைக் கேட்ட இறைவனார் மகிழ்ந்து தம்முடைய சிவகணங்களுக்குள் ஒன்றாக கழறிற்றறிவார் நாயனாரை சேர்த்துக் கொண்டார்.
தமிழில் உலா என்ற இலக்கிய வகையை தோற்றுவித்ததன் காரணமாக, சேரமான் பெருமாள் இயற்றிய திருக்கையிலாய ஞான உலாவானது ‘ஆதி உலா’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
கழறிற்றிவார் நாயனார் குருபூஜை ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.
கொடைப்பண்பில் சிறந்து, சுந்தரருடன் கிடைத்தற்கரிய வீடுபேற்றினைப் பெற்ற கழற்றறிவார் நாயனாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்’ என்று போற்றுகிறார்.