கழற்சிங்க நாயனார் சிவ வழிபாட்டிற்கான மலரை எடுத்து முகர்ந்த தன்னுடைய மனைவியின் கையினை வெட்டிய பல்லவ மன்னர். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
கழற்சிங்க நாயனார் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டினைக் கோலோச்சிய பல்லவ மன்னர் ஆவார்.
பெரும் வீரரான இவர் வடநாடு சென்று போர் புரிந்து தம் எல்லையை விரிவுபடுத்தினார்.
வீரத்தில் சிறந்த இவர் சிவனாரிடம் பேரன்பு கொண்டிருந்தார். இதனால் சிவனடியார்களுக்கும் சிவாலயங்களுக்கும் தொண்டுகள் பல புரிந்தார்.
அவ்வப்போது சிவாலயங்களுக்குச் சென்று சிவவழிபாடு மேற்கொள்வதை கடமையாகக் கொண்டிருந்தார்.
ஒரு சமயம் திருவாரூருக்கு தம்முடைய பட்டத்தரசியுடன் சென்று இறை வழிபாடு செய்ய சென்றார்.
திருவாரூர் திருக்கோயில் அளவில் மிகப் பெரியது. புற்றிடங் கொண்ட நாதரைத் தொழுத கழற்சிங்கர் தியாகேசரையும் மனமார வழிபட்டு இன்புற்றார்.
அவருடைய பட்டத்தரசியோ திருகோவிலின் ஒவ்வொரு பகுதியையும் கண்டு மகிழ்ந்து கொண்டு வந்தாள்.
மிகப்பெரிய கோவிலாதலால் மெல்ல பல மண்டபங்களையும் சந்நிதிகளையும் ரசித்து கொண்டு வந்தாள்.
அப்போது அவள் இறைவனாருக்கு பூக்களைத் தொடுக்கும் பூ மண்டபத்திற்குள் பிரவேசித்தாள்.
அங்கே பலர் மிக்க அன்போடும் அக்கறையோடும் பலவண்ண மணமிக்க பூக்களை இறைவனுக்காக மாலைகளாகத் தொடுத்துக் கொண்டிருந்தனர்.
மாலை கட்டுபவர்களின் கைவண்ணத்தைப் பார்த்த பல்லவ அரசி சற்று நேரம் தன்னை மறந்து நின்றாள்.
அப்போது ஒரு பூ மண்டபத்தில் இருந்து கீழே விழுந்தது. அதனைக் கண்ட அரசி அதனை எடுத்து முகர்ந்தாள்.
இறைவனின் வழிபாட்டிற்கு வைத்திருக்கும் மலரை முகர்வது தவறு. பெரும்பாலான இடங்களில் இறைவழிபாட்டிற்கான பூக்களைப் பறிப்பவர்களும் மாலை தொடுப்பவர்களும் மூக்கையும் வாயையும் மறைத்து கட்டியே பணியைச் செய்வார்கள்.
இதனை எல்லாம் மறந்த அரசி இறைவனுக்கான பூவை எடுத்து முகர்ந்தாள்.
அப்போது அங்கே செருத்துணை நாயானார் என்பவர் வந்தார். அவர் சிவ அபராதம் செய்பவர்களைக் கண்டால் கண்டிப்பார். சிலநேரங்களில் தண்டிக்கவும் செய்வார்.
பட்டத்தரசி பூவினை முகர்வதற்கும் அவர் அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது.
‘இறைவனுக்கான பூவினை இப்பெண் என்ன துணிச்சல் இருந்தால் முகர்வாள்’ என்று எண்ணி அரசியைப் பற்றி இழுத்து முகர்ந்த அவளின் மூக்கினை அரிந்தார்.
சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்தாலும் வலியின் வேதனை தாங்காமலும் அப்பெண் கீழே விழுந்து அரற்றினாள்.
அரசியின் அரற்றலைக் கேட்டு அங்கு வந்த கழற்சிங்க நாயனார் அவளின் துன்பத்தைக் கண்டு துடித்தார்.
“அரசி என்றும் பாராமல் இத்துணிச்சலான செயலினை நிகழ்த்தியது யார்?” என்று வினவினார்.
அப்போது செருத்துணை நாயனார் அங்கே வந்து “நான்தான் இதனைச் செய்தேன். இறைவனுக்கான பூவினை முகர்ந்ததால் மூக்கினை அரிந்தேன்.” என்றார்.
செருத்துணை நாயனாரின் சிவனடியார் தோற்றத்தைக் கண்டதும், அவர் கூறியதைக் கேட்டதும் மன்னனுக்கு அரசியின் மேல் கோபம் உண்டானது.
‘மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பர். மன்னனின் செயலுக்கு முன்நின்று உதவி செய்ய வேண்டியது பட்டத்தரசியின் கடமை. இங்கோ இவள் தவறு செய்து விட்டாள். இவளுக்கு தக்க தண்டனை தருவதே சரி’ என்று எண்ணினார்.
உடனே செருத்துணை நாயனாரை நோக்கி “நீங்கள் இவளுக்கு தக்க தண்டனை வழங்கவில்லை. பூவினை முகர்வதற்கு முதலில் எடுத்தது இவளின் கையல்லவா? முதல் குற்றத்தைச் செய்த இவளின் கையை அல்லவா முதலில் தண்டித்திருக்க வேண்டும்?” என்றபடி உடைவாளை உருவி அரசியின் கையை வெட்டினார்.
கழற்சிங்கரின் சிவபக்தியைக் கண்டு எல்லோரும் வியந்தனர். இறையருளால் பட்டத்தரசியின் மூக்கும் கையும் முன்போல் ஆனது.
தன் வாழ்நாள் முழுவதும் சிவதொண்டு புரிந்த கழற்சிங்க நாயனார் இறுதியில் நீங்கா இன்பமான இறைவனின் திருவடியை அடைந்தார்.
பல்லவ அரசனாகிய கழற்சிங்கர் தன்னுடைய மனைவி என்றும் பாராமல், தவறு செய்த அவளுடைய கரத்தினை துண்டித்தால் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராக வைக்கும் பேறு பெற்றார்.
கழற்சிங்க நாயனார் குருபூஜை வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.
கழற்சிங்க நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்‘ என்று புகழ்கிறார்.