அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. சட்டென எழுந்தேன். சுவர் கடிகாரம் மணி 5.10 எனக் காட்டியது.
′காலைல யாரா இருக்கும்?!′ என்று எண்ணியபடியே விரைவாக சென்று அலைப்பேசியை பார்த்தேன்.
எண்கள் தான் தெரிந்தன. யாரென தெரியவில்லை. அலைபேசி அழைப்பை ஏற்றேன்.
″சார், கழிவு நீர் வண்டி வருது″ எனக் கூறி வீட்டிற்கு வருவதற்கான வழியைக் கேட்டார் அந்த நபர். நானும் வழி சொன்னேன்.
″சார் இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவோம்″ என்றார் அவர்.
சிறிது நேரத்தில் அவர்கள் வந்தார்கள். தொட்டியிலிருந்து கழிவு நீர் முழுவதுமாக வண்டி மூலம் எடுக்கப்பட்டது.
பின்னர் கழிநீர் தொட்டியைச் சுற்றி நீர் ஊற்றி கழுவினேன். அதன்பிறகு ஒரு வாளியில் நீரைப் பிடித்தேன். கைகால் கழுவுவதற்காக.
″என்ன சார் பண்ணீங்க?″ நீர் கேட்டது.
நீர் தான் கேட்கிறது என்பதை சட்டென உணர்ந்துக் கொண்டேன்.
″கழிவு நீர்த் தொட்டி நிரம்பிடிச்சு. அத எடுக்கறதுக்குத் தான் வண்டி எடுத்துக்கிட்டு வந்தாங்க.″
″கழிவு நீரா?″
″ஆமாம்″
″அப்படீன்னா?″
உண்மையில் எனக்கு கழிவு நீருக்கான வரையறை தெரியாது.
உடனே, ″திடீர்னு இப்படி கேட்டா?″ என்றேன்.
″சார் நீங்க தான் சொன்னீங்க, கழிவு நீர்னு. அதான் கேட்டேன்.″
″ஆ..ஆம்.. வீட்டுல இருந்து வரும் வீணான நீர் தான் கழிவு நீர்.″
″நீர் வீணா வருதா?″
″ஆமா, சாப்பாடு சமைக்கவும், துணிகள சலவை செய்யவும் நீர் பயன்படுது. இந்த செயல்களுக்கு அப்புறம், வரும் நீர பயன்படுத்தரது இல்ல. அதனால் இத கழிவு நீருன்னு சொல்றோம். இதேபோல, கழிவறை மற்றும் குளியல் பயன்பாடுட்டுக்கு பிறகும், கழிவு நீர் உருவாவுது.″
″என்ன சார். உங்க செயல்களுக்கு நீர் பயன்படுதுன்ணு சொல்றீங்க. ஆனா, அந்த செயல்கள் முடிஞ்சதும் நீர, கழிவு நீருன்னு சொல்றீங்க. அப்ப உங்க வேல முடிஞ்சா நான் வீணா?″
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நின்றேன். நீர் என்ன நினைத்ததோ? எனக்கு தெரியாது. ஆனால் எனது அமைதியைக் கண்டவுடன் சட்டென அதன் பேச்சை மாற்றிக் கொண்டது.
உடனே, ″சரி சார். அப்ப வீட்டுல இருந்து மட்டும் தான் கழிவு நீர் வருமா?″ எனக் கேட்டது.
பின்னர், ″இல்ல இல்ல. தொழில்துறை மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பிறகும் கழிவு நீர் வெளியேற்றப்படுது. அத்தோட சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் கூரைகளை கழுவுவதல் போன்றவற்றாலும் கழிவு நீர் உருவாகுது″ என்றேன்.
″ஓஓ… சரி, கழிவு நீருல என்ன இருக்கும்?″
″இம்ம். கழிவு நீருல இருக்கும் பகுதிப் பொருட்கள திட்டவட்டமா சொல்ல முடியாது. பல காரணிகளப் பொறுத்து அவை மாறும். ஆனா, கழிவு நீரில் 99.9% நீரும் 0.1% கழிவுகளும் இருக்கலாம். கழிவுகளாக கரிமப் பொருட்கள், கனிம சேர்மங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் இருக்கலாம்.″
″சரிங்க. கரிம கழிவுக் பொருட்கள பத்தி சொல்லுங்க.″
″கழிவு நீருல புரதம், கொழுப்பு, சர்க்கரை, சோப்பு உள்ளிட்ட பலவகையான கரிம பொருட்கள் இருக்கும். இதுல சில கரிமப் பொருகள் நீரில் கரைந்திருக்கும். சில கரையாமல் துகள்களாக இருக்கும்.″
″நல்லது சார். கனிமக் கழிவுச் சேர்மங்கள பத்தி சொல்லுங்க.″
″சொல்றேன். சோடியம், கால்சியம், தாமிரம், மற்றும் துத்தநாகம் போன்றவற்றோட சேர்மங்கள் கழிவுநீருல இருக்கும். கழிவு நீர் எங்கிருந்து வருதுங்கறது பொறுத்து அதிலிருக்கும் கனிமக் கழிவுகளோட தன்மை மாறும்.
குறிப்பா, குரோமியம், பாதரசம், ஆர்சனிக் உள்ளிட்ட கனிமக் கழிவுகள் அபாயகரமானவை. பொதுவா சொல்லணும்னா, பெரும்பாலான கனிம பொருட்கள் நிலையானவை. அதாவது அவற்றைக் கழிவுநீரில் இருக்கும் நுண்ணுயிரிகளால எளிதில் சிதைக்க முடியாது. இதனால நீருல கனிமக் கழுவுகள் இருந்தா, அவற்றை முறையா சுத்தம் செய்யணும்.″
″ஓஓ, அப்ப கரிமக் கழிவுகள நுண்ணியிரிகள் சிதைக்குமா?″
″உம்ம்… கரிமச் சேர்மத்தோட பண்ப பொருத்து அவை நுண்ணியிரிகளால சிதைவடையும். இயற்கையில கரிமச் சேமத்தோட சிதைவு ஒளி உள்ளிட்ட பிற காரணிகளப் பொருத்தும் அமையும். இன்னொரு செய்தியும் சொல்லணும். பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் போன்ற அதிகப்படியான ஊட்டச்சத்துக்களும் கழிவு நீருல இருக்கலாம்.″
″ஊட்டச்சத்துகள் இருந்தா நல்லது தானே?″
″அதுதான் இல்ல. அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நீருல இருந்தா, அது யூட்ரோஃபிகேஷனை ஏற்படுத்தும். அதாவது ஊட்டச்சத்துக்கள் தொடக்கத்துல அதிகப்படியான தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனால, முதல்ல தாவரங்கள் அதிகப்படியா பெருகும். பிறகு, அவற்றிற்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காம போகும். அந்த நீர்ச் சூழல்ல ஆக்ஸிஜன் அளவும் வெகுவாக குறையும். சூரிய ஒளி ஊடுறவலும் நீருல குறையும். இதனால படிபடியா அங்கிருக்கும் சில உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். ஒரு கட்டத்துல அந்த நீர்ச் சூழலே அழியும் நிலைக்கு போயிடும்.″
″அடடே! அப்ப எல்லாத்துக்கும் ஒரு அளவுன்ணு இருக்கு.″
″ஆமா சரியா சொன்ன″
″சரி, நுண்ணியிரிகளும் கழிவுகளா இருக்கும்ணு சொன்னீங்களே?″
″ஆமா, கழிவு நீருல பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் போன்ற நோயை உண்டாக்கும் நோய்க் கிருமிகளும் இருக்கும். அதேசமயத்துல சில தீங்கிழைக்காத நுண்ணியிரிகளும் கழிவு நீருல இருக்கும்.″
″ஓஓ. ஆமா கழிவு நீர் எங்க போவும்?″
″கழிவு நீர் உருவாகும் இடத்துல இருந்து ஏரிகள், ஓடை மற்றும் ஆறுன்னு போய் கடைசியில கடல்ல போய் கலந்துடும்.″
″சார், கழிவு நீர் கலந்துச்சுன்னா, அந்த நீர் சூழல் பாதிக்கப்படும்ல?″
″ஆமாம். அதனாலத்தான் நீர் மாசுபாட்ட குறைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருது. அதுல ஒன்னுதான், கழிவு நீரை மறுசுழற்சி செஞ்சு மீண்டும் பயன்படுத்துவது.″
″நல்லது சார்.″
″சரி நான் வேலைக்கு புறப்படணும். அப்புறம் சந்திக்கலாமா?″
″சார் நாம ரொம்ப நாட்களா பேசிக்கிட்டு இருக்கும்ல?″
″ஆமா என்னாச்சு தீடீர்ணு இத சொலற?″
″ஒன்னுமில்ல சும்மாதான்″
″சரி″
″உம்ம் அவசரமா போகணுமா?″
நீர் ஏதோ பேச நினைக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். எனினும் வேலைக்கு நேரம் ஆகிவிட்டது. வேறு வழியின்று ″பிறகு பேசலாமா?″ என்றேன்.
உடனே, ″சரி சார். நான் அப்புறம் வர்றேன்″ என்று கூறி நீர் சென்றது.
நான் அவசர அவசரமாக வீட்டிற்குள் சென்றேன்.
(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!