கழுதைப் பொதி என்ற கதை, ஏமாற்றுக்காரர்களின் நிலை என்னவாகும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
கருப்பூரில் முத்தன் என்ற வியாபாரி ஒருவன் இருந்தான். அவன் நகரத்தில் இருந்து சர்க்கரையை வாங்கி, பக்கத்து ஊர்களுக்குச் சென்று விற்று வந்தான்.
சர்க்கரை மூட்டையை சுமப்பதற்கு கழுதையைப் பயன்படுத்தி வந்தான். நகரத்தில் இருந்து கருப்பூருக்குச் செல்லும் வழியில் ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.
வியாபாரியும், கழுதையும் பொதி மூட்டையுடன் ஆற்றினைக் கடந்து கருப்பூருக்குச் செல்வதே வழக்கம்.
ஆற்றில் விழுந்த கழுதை
ஒரு நாள் சர்க்கரை மூட்டையை கழுதையின் முதுகில் ஏற்றிக் கொண்டு ஆற்றினைக் கடக்க வியாபாரி முயன்றான். அப்போது கழுதையின் கால் தடுமாறியது. இதனால் கழுதை ஆற்றுக்குள் விழுந்தது.
ஆற்றின் நீரில் சர்க்கரை கரையத் தொடங்கியது. பின்னர் கழுதை முயற்சி செய்து எழுந்த போது அதனுடைய முதுகின் பாரம் பாதியாகக் குறைந்தது. இதனால் கழுதை பெரும் மகிழ்ச்சி கொண்டது.
மறுநாளும் வியாபாரியும் கழுதையும் சர்க்கரை மூட்டைப் பொதியுடன் ஆற்றினைக் கடக்க முயன்றனர். அப்போது கழுதை வேண்டும் என்றே ஆற்று நீரில் விழுந்தது.
வழக்கம் போல் சர்க்கரை நீரில் கரைந்தது. கழுதையின் பாரம் குறைந்தது. இவ்வாறு அடுத்து வந்த ஐந்து நாட்களுக்கு கழுதை வேண்டுமென்றே ஆற்றில் விழுந்து சர்க்கரையைக் கரைத்தது.
கழுதையின் இச்செயல் வியாபாரிக்கு நட்டத்தை உண்டாக்கியது. இதனால் வியாபாரி கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுவதாக எண்ணினான். கழுதைக்கு சரியான பாடம் புகட்ட எண்ணினான்.
எடை கூடிய மூட்டை
ஆதலால் வியாபாரி மறுநாள் பஞ்சு மூட்டையை வாங்கி கழுதையின் முதுகில் ஏற்றினான். வழக்கம் போல் ஆற்றினைக் கடக்க வியாபாரியும் கழுதையும் முயன்றனர்.
கழுதை வேண்டுமென்றே ஆற்றில் விழுந்தது. பஞ்சும் தண்ணீரில் நனைந்ததால் எடை அதிகரித்தது. இதனை அறியாத கழுதை வழக்கம் போல் மகிழ்ச்சியாக ஆற்றில் இருந்து எழுந்தது.
தண்ணீரை உறிஞ்சிய பஞ்சுப் பொதி கழுதைக்கு மலை போல் கனத்தது. கழுதை மிகவும் அதிர்ச்சி அடைந்தது.
வியாபாரியோ வேகமாக நடக்குமாறு கழுதையை அடித்து விரட்டினான். கழுதையும் செய்வது அறியாமல் எஜமானனின் கட்டளைக்கு அடி பணிந்தது.
கழுதைப் பொதி கதையின் கருத்து
பிறரை ஏமாற்ற நினைப்பவன் ஒரு நாள் தானும் ஏமாந்து போவான். ஏமாற்றாதே, ஏமாறாதே ஆகியவற்றை கழுதைப் பொதி என்ற கதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மறுமொழி இடவும்