செவ்வூர் என்ற ஊரில் செல்வேந்திரன் என்ற பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் தன்னுடைய வீட்டில் பொதி சுமப்பதற்குக் கழுதை ஒன்றை வளர்த்து வந்தார்.
அவர் தன் வீட்டினைக் காவல் காக்க ஒரு நாயை வளர்த்து வந்தார்.
கழுதையை வேலை செய்யும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் வீட்டிற்கு வெளியே கட்டி வைத்திருந்தார். கழுதை உண்ண வயிறார தீனிகள் அளித்தார்.
வீட்டைக் காக்கும் நாயோ, வீட்டிற்குள்ளும் வெளியேயும் சுற்றி சுற்றி வரும். செல்வேந்திரன் நாயினை அன்போடு தடவிக் கொடுப்பார்.
எஜமானரின் அன்பில் மகிழ்ந்த நாய்க்குட்டி அவரிடம் துள்ளிக் குதித்து விளையாடும்.
எஜமானர் அமர்ந்திருக்கும் போது நாய்க்குட்டி அவரது மடியில் ஏறி அமர்ந்து கொள்ளும். எஜமானரும் அதனைக் கொஞ்சி மகிழ்வார்.
எஜமானரும் நாய்க்குட்டியும் கொஞ்சி விளையாடுவதைப் பார்த்ததும் கழுதைக்கு மிகவும் பொறாமையாக இருக்கும்.
எஜமானர் நாய்க்குட்டியைப் போல் தன்னைக் கொஞ்சாததை நினைத்து கழுதை வருந்தும். அவ்வப்போது தன்னுடைய தலையெழுத்தை எண்ணிப் புலம்பும்.
“நான்தான் காட்டிலிருந்து விறகு கொண்டு வருகிறேன். செக்கு சுற்றுகிறேன். வயலிலிருந்து தானியங்களைச் சுமந்து வீட்டிற்குக் கொண்டு வருகிறேன்.
ஆனால் என்னால் என்றாவது இந்த எஜமானரின் வீட்டிற்குள் நுழைய முடிகிறதா? எஜமான்தான் என்னிடம் அன்பாக பேசுகிறாரா? ஒருநாளாவது என்னைக் கொஞ்சுகிறாரா?” என்று நினைத்து மனம் புழுங்கி வந்தது கழுதை.
நாயைப் போல
நாமும் நாயைப் போல இருந்து பார்ப்போமே என்று கழுதை ஒருநாள் நினைத்தது.
வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டிருந்த கழுதை கயிற்றை அறுத்துக் கொண்டது. அது நேராக எஜமானரின் வீட்டிற்குள் ஓடியது. கால்களை அப்படியும், இப்படியுமாகத் தூக்கிக் கொண்டு துள்ளியது. குதித்தது.
பிறகு எஜமானரின் அறைக்கு ஓடியது. நாய்க்குட்டி எஜமானரின் மடியில் தாவி ஏறுவதைப் போல, கழுதையும் எஜமானரின் மடியில் தாவி ஏற முயற்சி செய்தது.
அப்போது அருகில் இருந்த மேசையின்மீது கழுதையின் கால்கள்பட்டு மேசை கீழே விழுந்தது. மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எல்லாம் நொறுங்கின.
திடீரென வீட்டிற்குள் கழுதை நுழைந்ததைக் கண்ட எஜமானர் திகைத்தார். அவர் தன்னுடைய வேலையாட்களை அழைத்து கழுதையை அப்புறப்படுத்தச் சொன்னார்.
வீட்டிற்குள் ரகளை பண்ணிக் கொண்டிருந்த கழுதையைப் பார்த்த வேலையாட்கள் பெரிய தடிகளைக் கொண்டு அடித்து வீட்டிற்கு வெளியே விரட்டினர்.
வலியால் துடித்த கழுதை வீட்டிற்கு வெளியே ஓடியது. வேலையாட்கள் கழுதையைப் பிடித்து கயிற்றால் கட்டி கொட்டிலில் அடைத்து வைத்தார்கள்.
தடியால் அடி வாங்கிய கழுதைக்கு உடலெல்லாம் வலித்தது. உடனே அது ‘இதெல்லாம் என்னால் வந்த வினை. வழக்கம்போல என்னுடைய வேலையை மட்டும் பார்த்து கொண்டிருந்திருக்கலாம்.
அதைவிட்டு விட்டு நாய்க்குட்டியின் மீது பொறாமை கொண்டு அதனைப் போலவே நடந்து கொள்ள ஆசைப்பட்டு அடி வாங்கியது தான் மிச்சம்.’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டது.
பிறர்மீது பொறாமை கொள்பவர்கள் தமக்கு தாமே தீமையை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்பதை, கழுதையின் பொறாமை என்ற கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.