கவலை கொல்லும் மருந்து!

கண்முன்னே விரும்பியவைக் கிடைக்கா விட்டால்
கனவெல்லாம் தூளாகிக் காற்றாய் ஆனால்
உண்ணற்குப் பொருளின்றிப் பசியில் வாடி
உலகத்தில் உறவின்றி உலர்ந்து போனால்
தண்ணீரே இல்லாத வறுமை வந்து
தான்பிறர்கை எதிர்பார்த்தே மாந்து போனால்
கண்ணீரே கவலகற்றும் மருந்தாம் என்றும்
கரைந்தோடும் உப்பன்றோ விருந்தாம் இன்றும்

கவலைகளின் துறைமுகமாய் நம்மின் வாழ்க்கைக்
கணமிகுக்க நோயாகி மனதைத் தின்னும்
கவலைகளே அச்சமாகும் அச்சம் தாழ்வைக்
கணப்பொழுதில் உருவாக்கும் இயக்கங் கொல்லும்
கவலைகட்கும் நம்மைப்போல் முதுமை உண்டு
கடிமணமும் மழலையொடு முடிவும் உண்டு
கவலையெனும் கடுஞ்சுமையில் நசுங்கும் போது
கலைமடியில் இலக்கியத்தில் இளைப்பா ருங்கள்!

வாழ்நாளில் கவலைபற்றி யறியா மன்னன்
வகுப்பெடுக்கச் சொன்னான்தன் அமைச்சர் மன்றில்
தாழ்வான எண்ணமிது வேண்டாம் என்று
தடுத்தார்கள் மன்னவனோ கேட்டா னில்லை
ஊழ்வினைதான் என்றயர்ந்த ஒருவன் வந்தே
ஒளிப்படமாய் கவலைதனை வரைந்தே காட்ட
ஆழ்ந்துவிட்டான் அவ்வரசன் கவலைச் சேற்றில்
அப்படியா முதுமையில்யான் இருப்பேன் என்றே

கவலுவதால் கவலையென்ன தீர்ந்தா போகும்
கவலையென்னும் சிதலைவாய்க்கு விருந்தா காதீர்
கவலைகளை நொடிநொடியும் சுமந்து வந்து
கள்வனெனத் தன்வீட்டில் குடியேற் றாதீர்
கவைமிகுந்த மரமிலையை உதிர்க்க வந்தால்
கவலையின்றி உதிர்த்துவிடும் நோக்கம் கண்டுக்
கவலைதனைக் கைப்பிடிக்குள் அடக்கிக் கொண்டால்
காரிருளில் பொன்வெளிச்சம் தோன்ற லாமே!

பேரினப் பாவலன்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி:  8667043574