கவிதை

கவிதை பாடுவேன்

கவிதை பாடுவேன் நான்

கவிதை பாடுவேன்

காலம் என்ற சக்கரம் சுழன்று

கைகளில் எழுது கோலினை எடுத்து

கன்னித் தமிழின் எழுத்தில் வடித்து (கவிதை)

 

கைகளால் வேலை செய்த பொழுதினில்

கருவி ஒன்றைக் கொண்டு வந்தவன்

பைப்பையாக பொருட்களைக் குவித்ததை

பைந்தமிழ் பாட்டில் பாங்காய் வடித்து (கவிதை)

 

வில்லோடு அம்பும் வேலும் கொண்டு

வெற்றியை இங்கே பெற்றவர் தம்மை

வெடிகுண் டொன்றால் வென்றே நாட்டை

அடிமை செய்த கதையினை எழுத (கவிதை)

 

நேற்றைய திருடன் இன்றைய நண்பன்

இன்றைய நண்பன் நாளைய தலைவன்

என்றே சிலபேர் மாறிடும் நிலையை

இனித்திடும் தமிழில் கணக்கென வடித்து (கவிதை)

 

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் தாமே

அடிமை விலங்கினில் சிக்கிய கதையும்

வீட்டுச் சிறையில் இருந்தவர் பின்னர்

வியப்புற நாட்டை ஆண்டதை எழுதி (கவிதை)

 

மக்கள் தம்மை பிரித்திட என்றே

மதங்கள் என்றொரு மயக்கம் கொடுத்து

பக்குவ மாகவே பகைமையை வளர்த்து

பாதகம் செய்வதை பாட்டினில் வடித்து (கவிதை)

 

மதுவொடு மங்கை சூது – என்றே

மயங்கிட பலப்பல வழிகளைத் தந்து

பதுங்கிப் பாயும் புலியென மக்களை

பாய்ந்து அழிப்பதை பாட்டினில் வடித்து (கவிதை)

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)