கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 1

கவிப்பேரரசு வைரமுத்து தமிழ் திரைப்படப் பாடல்களுக்குத் தேசிய விருது என்று உச்சத்தில் நிறுத்தியவர்.

மனித வாழ்க்கையின் குறியீடுகள் என்றால் நிலம், மொழி, பண்பாடு, பராம்பரியம் என்று கூறலாம்.

மாற்றம் என்பது காலத்தின் கையிலிருந்து மனிதர் வாழ்க்கையில் குழைந்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தமிழ்த்திரை இசையில் பாடல் எழுத எத்தனையோ பேர் வந்தார்கள்; சென்றார்கள்; முத்திரை பதித்தவர் சிலர்.

அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த வையகம் உள்ள வரை அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவர் வைதாரையும் வாழ வைப்பவர்; தன்னைத் தூற்றுவோருக்கும் வாழ்த்துச் சொல்பவர்.

தமிழ் திரைப்பட பாடல்களுக்குத் தேசிய விருது என்று உச்சத்தில் நிறுத்தியவர். தமிழர் அச்சத்தைப் போக்கியவர். அவர்தான் தெற்கே உதித்த கருப்புச் சூரியன் கவிப்பேரரசு வைரமுத்து. பல கவிஞர்கள் சென்ற இடத்தை விஞ்சிச் சென்ற கருப்பு முத்து அவர்தான்.

கவிப்பேரரசு வைரமுத்து இளைஞர்களுக்கு ஒரு சலவை நிலா. முதியவர்களுக்கு அழியாச் சூரியன். அவரின் பாடல்கள் காயத்துக்கு மருந்தாகும்; பசிக்கு விருந்தாகும் என்பது மறுக்க முடியாத உண்மை.

கனாக் காணும் இளைஞன் இயற்கையை எவ்வாறு நேசிப்பான் என்பதை

நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க

நலம் பெற வேண்டுமானால் நன்மை செய்க

நம் பூமியின் மேலே புதுப்பார்வை கொள்க

நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க

கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்துத் தூக்கம் கொள்க

பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க

என்ற வரிகளால் எதிர்கால இளைஞருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார் கவிப்பேரரசர்.

இளைஞனின் மொழியில் அவனோடு, சிநேகிதத்தோடு சில வார்த்தை அற்புதமாகப் பேசும் மகாகவிஞன்தான் கவிப்பேரரசர்.

வைரமுத்து எழுதிய சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் புத்தகத்தை பெற்றோர்களும், குழந்தைகளும் வாசிக்க வேண்டும்.

இளைஞர்கள் சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் என்ற புத்தகத்தை வாசித்து நேசிக்க வேண்டும். இதுவரை யாரும் நம்மைத் தொடாத வார்த்தைகளால் தொட்டுப் பேசியவர் கவிப்பேரரசு வைரமுத்து.

ஒரு மொழியை ஒருவர் படிக்கிறார் என்றால் அந்த இனத்தின் வரலாற்றை அவர்கள் படிக்கிறார்கள் என்பது அர்த்தம். ஆங்கிலேயர்களின் ஆட்சிமுறையை நாம் வெறுத்ததாக வரலாறு கூறுகிறது.

ஆனால் ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்கள் மற்றும் வில்லியம் வேர்ட்வொர்த்தின் கவிதைகள் நம் இரத்தத்தோடும், நரம்புகளோடும், எலும்புகளோடும், சதைகளோடும் கவிப்பேரரசின் கவிதையைப் போல உறவாடுகிறது.

மெல்லத் தமிழ் இனிச் சாகுமா? வில்லங்கமான சமஸ்கிருதம் தமிழை அழிக்குமா? என்ற பயம் வரும்போது ‘அஞ்சேல் வருகிறேன்’ என்று உதயமானதுதான் கவிப்பேரரசின் தமிழாற்றுப்படை.

தமிழ் தாத்தா உ.வே.சா.வைத் தன் தாத்தா பொன்னையாவைப் போலக் கொண்டாடியவர் வைரமுத்து.

‘அந்தணக் கிழவன் சந்தனமாகத் தான் தேயா விட்டால்

செம்மொழி என்ற பெயர் தமிழுக்கு வருமா?’ என அவர் வியந்தார்.

‘வேப்பமரத்தை வெட்ட வெட்டத்தான் விரசா வளரும்’ என்ற பொன்னையா தாத்தாவின் வார்த்தையையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

தமிழ் தாத்தா உ.வே.சா ஏட்டுக் கல்வியைப் படித்தவர்.

கவிப்பேரரசுவின் தாத்தா வாழ்க்கைக் கல்வியைப் படித்தவர்.

முன்னோர்கள் வாக்கு இளைய தலைமுறைக்கு வரமாகும். தமிழ் நிலத்துக்கு என்றும் உரம் ஆகும்.

மனிதன் யார் என்ற கேள்விக்கு ஞானிகளும், ரிஷிகளும் பதில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நமக்குப் புரியும்படி சொன்ன பெருமை கவிப்பேரரசுவைச் சாரும்.

மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்

வாழும் போது செத்து செத்துப் பிழைப்பவன் மனிதா?

வாழ்ந்த பின்பு பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா?

பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்

சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன்! மனிதன்!!

தன்மானம் காக்கவும் பெண்மானம் காக்கவும்

துடிப்பவன் எவனடா? அவனே மனிதன்!

மனிதன் மனிதன் அவன்தான் மனிதன்!

தந்தைப் பெரியாரின் சிந்தனையை இதைவிட எளிமையாக யாரும் எழுதியதும் இல்லை எழுதப் போவதும் இல்லை.

மனித வாழ்க்கை மிகவும் விசித்திரமானது தான். அதை முறையாகத் திட்டமிடக் கற்பித்தவர் கவிப்பேரரசு

முதல் எட்டில் விளையாட்டு

இரண்டாம் எட்டில் கல்வி

மூன்றாம் எட்டில் திருமணம்

நான்காம் எட்டில் குழந்தைகள்

ஐந்தாம் எட்டில் செல்வம் சேர்த்;தல்

ஆறாம் எட்டில் சுற்றுலா

ஏழாம் எட்டில் ஓய்வு

எட்டாம் எட்டில் புதிய உலகம்

என்று வாழும் மற்றும் வளரும் தலைமுறைக்கு வாழ்வியல் சித்தார்ந்தத்தைத் தந்தவர் வைரமுத்து.

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்

நித்திரை போவது நியதி என்றாலும்

யாத்திரை என்பது தொடர் கதையாகும்.

(வரும் வாரமும் வைரமுத்து வருவார்)

முனைவர் சொ.சிதம்பரநாதன்
பொருளாதாரத் துறைத்தலைவர்
இராச‌பாளையம் ராஜுக்கள் கல்லூரி
இராச‌பாளையம்
9486027221

One Reply to “கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 1”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.