கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள் – மருத்துவ பயன்கள்

கஸ்தூரி மஞ்சள் எனப்படுவது காய்ந்த கிழங்குகளே ஆகும். கத்தூரி மஞ்சள் என்றும் கூறப்படும். கஸ்தூரி மஞ்சள் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது.

கஸ்தூரி மஞ்சள் பெரும்பாலும், வெளி உபயோகத்திற்கான மருந்தாகப் பயன்படுகின்றது. அரைத்துப் பசையாக்கி தேய்த்துக் குளிக்க கரப்பான், கிருமிநோய்கள் போன்றவற்றைப் போக்கும். தோல் பளபளப்பாகும்.

புண்ணுங் கரப்பானும் போகாக் கிருமிகளும்…. கஸ்தூரி மஞ்சளுக்குக் காண் என்கிறது அகத்தியர் குணபாடம். மேலும், தொடர்ந்து உபயோகித்துவர, அறிவையும் ஆண்மைத் தன்மையையும் ஆற்றலையும் மிகுதியாக்கும்.

கஸ்தூரி மஞ்சள் மலைப் பகுதிகளில் இயல்பாக வளர்ந்தாலும் இதன் மருத்துவ மற்றும் வாசனை பண்புக்காக பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. செடியின் கிழங்குகள் காய வைக்கப்பட்டு மணமுள்ள கஸ்தூரி மஞ்சளாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன.

அழகு, நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள், வாசனைப் பொருட்கள், சோப்புகள், தைலங்கள் ஆகியவை தயாரிக்கப்படுவதில் கஸ்தூரி மஞ்சள் முக்கிய இடம் பெறுகின்றது.

தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

கஸ்தூரி மஞ்சளை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, அப்போது ஏற்படும் புகையை மூக்கின் வழியாக உள்ளே இழுக்க காசநோயின் போது ஏற்படும் இரைப்பு கட்டுப்படும்.

கஸ்தூரி மஞ்சளை தூள் செய்து 100 முதல் 250 மிகி வரை வெந்நீரில் சாப்பிட்டு வர சொறி சிரங்கு குணமாகும்.

½ லிட்டர் தேங்காய் எண்ணெயில், 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் தூளைப் போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, மேல் பூச்சாகக் பூசி வர உடல் வலி தீரும்.