வாசலெங்கும் வண்ணத்தோரணம்
அதில் உயிரும் இல்லை உணர்வும் இல்லை
வாடா மலராய் வருகை புரிந்திருக்கிறாய் வையத்தில்
வாடிய கைம்பெண்ணின் கார் கூந்தலில்
குடியேறும் வாடா மல்லியும் நீதான்
மேடை அலங்கரிப்புகளின் அணிவகுப்பும் நீதான்
விதையின்றி விளைந்த விரிசுடரும் நீதான்
மகரந்தச் சேர்க்கையின்றி மலர்ந்த மலரினமும் நீதான்
மலர் ஏற்க மறுத்த கருவிழி நிறத்தையும்
நீயேற்று நாணில் ஏறி நின்றாய்
எப்போதும் அசலுக்குத் தான் ஆயுள் அதிகம்
போலிக்கு ஆயுள் குறைவே
ஆனால் உந்தன் படைப்பில்
இது முரணாய் போனதோ?
நீரின்றி வேரின்றி முற்றத்தில்
மொட்டவிழ்த்தாய் வண்ணமிகு தோரணமாய்
காகிதத்தில் மலர்ந்த மலருக்கு மஞ்சத்தில் இடமில்லை
“கா” அகத்தில் மலர்ந்த மலருக்கு
நெடுநாள் தஞ்சத்தில் இடமில்லை
கட்டுண்டும் காயாத காகித
பூக்களாய் புன்னகைத்திருப்போம்…
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!