தன் தகுதிக்கு மீறி நடந்து கொண்டால் என்னவாகும் என்பதை காக்கை கழுகு ஆகுமா? என்ற இக்கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
முன்னொரு காலத்தில் மலர்வனம் என்றொரு காடு இருந்தது. அந்த காட்டின் அருகில் பர்வத மலை என்றொரு மலையும், மலையடி வாரத்தில் மரங்கள் நிறைந்து எங்கும் பசுமையாகக் காட்சி அளித்தது.
அக்காட்டில் காக்கை கருங்காலி வசித்து வந்தது. அது எப்போதும் தன்னைப் பெருமையாகவே எண்ணிக் கொள்ளும்.
ஒருநாள் காக்கை கருங்காலி பரந்து விரிந்த சமவெளியில் இருந்த மரத்தில் அமர்ந்திருந்தது.
அங்கே செம்மறி ஆடுகள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன.
அப்பொழுது கழுகு ஒன்று தனது பெரிய இறக்கைகளை விரித்து பறந்து வந்தது.
மேய்ந்து கொண்டிருந்த செம்மறி ஆடுகளுக்கு இடையே நின்றிருந்த செம்மறி ஆட்டுக் குட்டியை, தனது கூரிய நகங்களால் பற்றிக் கொண்டு வேகமாகப் பறந்தது.
நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த காக்கை கருங்காலி ‘ஏன் கழுகு மட்டும்தான் பலசாலியா? அதற்கு மட்டும்தான் பெரிய இறக்கைகளும், கூரிய நகங்களும் இருக்கிறதா?
நானும் பலசாலிதான். எனக்கும் இறக்கைகளும், கூரிய நகங்களும் இருக்கின்றன. நான் கழுகு தூக்கிய செம்மறி ஆட்டினைவிட பெரிய ஆட்டையே தூக்குவேன்’ என்று மனத்திற்குள் கர்வமாக எண்ணியது.
உடனே தன்னுடைய எண்ணத்தை செயலாக்கும்படி, வேகமாக செம்மறி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்திற்கு மேலே பறந்தது.
கூட்டத்தில் இருந்த பெரிய செம்மறி ஆட்டின் மேல் அமர்ந்து, தன்னுடைய கால்களால் செம்மறி ஆட்டின் தோலைப் பற்றி தூக்க முயற்சித்தது.
ஆனால் காக்கை கருங்காலியால் செம்மறி ஆட்டினைத் தூக்க முடியவில்லை. மாறாக செம்மறி ஆட்டின் அடர்த்தியான ரோமங்களுக்குள் காக்கை கருங்காலியின் கால்கள் மாட்டிக் கொண்டன.
காக்கை கருங்காலி எவ்வளவோ தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சித்தது. ஆனால் அதனால் முடியவில்லை. கால்களை எடுக்கும் முயற்சியில் தன்னுடைய இறகுகளை வேகமாக அடித்தது.
காக்கை கருங்காலி எழுப்பிய சத்தத்தைக் கேட்டதும் ஆட்டிடையன் வேகமாக வந்து காக்கை கருங்காலியை பிடித்துக் கொண்டு சென்றான்.
அப்போதுதான் தன்னுடைய பலவீனத்தை எண்ணி காக்கைக் கருங்காலி வருந்தியது.
காக்கை கழுகு ஆகுமா? என்று தனக்குள் கேட்டுக் கொண்டது.
தன்னுடைய தகுதிக்கு மீறி நடந்து கொண்டால் அழிவு நிச்சயம் என்பதை காக்கை கழுகு ஆகுமா என்ற கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.