காசிம் குறும்படம் விமர்சனம்

நண்பனின் உண்மைத்தன்மை எப்படிப்பட்டது என விளக்குகின்ற, நட்பின் இலக்கணம் கூறும் மிக அற்புதமான படம் காசிம் குறும்படம் ஆகும்.

சினிமா வாய்ப்புத்தேடி சென்னை செல்லும் ஒரு சராசரி இளைஞர் தான் நாகராஜ்.

அவர் தங்குவதற்கும் உணவுக்கும் கஷ்டமில்லாமல் இருக்க‌, ஒரு உணவகத்தில் வேலை பார்த்துக் கொண்டே சினிமா வாய்ப்பைத் தேடுகிறார்.

அந்த உணவகத்தில் பாத்திரங்கள் கழுவுவதற்கும், காய்கறிகள் வெட்டுவதற்கும் கல்கத்தாவிலிருந்து வந்த காசிம், அவரிடம் நட்பாய் பழகுகிறான்.

இருவரும் அந்த உணவகத்தில் வேலை முடித்தவுடன் பேசுவதும், தங்களுக்குள் உதவி செய்து கொள்வதுமான நிலையில் நட்பைப் பெரிதாய் வளர்த்துக் கொள்கின்றனர். நாகராஜ் சினிமா வாய்ப்பையும் தேடுகிறார்.

காசிம் ஒரு முறை உணவகத்திற்கு வந்தவரின் கேமராவைத் திருடி விட்டான் எனப் பொய்யாகத் தண்டிக்கப்படுகின்றான். இதனால் உணவகத்திலிருந்து யாரிடமும் சொல்லாமல் சென்று விடுகிறான் காசிம்.

ஊருக்குச் சென்றிருந்த நாகராஜ் திரும்பி வந்து பார்க்கும் போது, காசிம் இல்லாதது அறிந்து மனம் பெரிதும் வேதனைப்படுகிறார். அவரைத் தேடி அலைகிறார். இதில் பெரிதும் நாகராஜ் மனம் நொந்து போய் விடுகிறார்.

ஒரு நண்பர் அவரைக் கண்டு பிடித்து விட்டதாகக் கூறுகிறார். ஆவலுடன் சென்ற நாகராஜ் கணினியில் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் பேச வேண்டியதாயிற்று.

கணினி மூலம் அவர் கண்ட காட்சி துயரத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. மனநலம் குன்றிய நிலையில் சுயநினைவின்றி இருப்பதை அறிந்து அழுது புலம்புகிறார்.

பிறகு, தன் படிப்பைக் கொண்டு ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொஞ்சம் பணம் சேர்ந்ததும் காசிம் நட்பையே கதையாகக் கொண்டு ஒரு திரைப்படம் எடுக்கிறார்.

குறும்படத்தின் பின்னணி

சொன்னால் நம்ப மாட்டீர்கள். இது ஒரு உண்மைக்கதை. அதை விட மனதை சுக்கு நூறாய் உடைக்கும் ஒரு செய்தி.

சினிமா மோகத்தோடு சென்னைக்கு வந்தவர்; நிறையப் படித்தவர்; புதிய பல கண்டுபிடிப்புக்களுக்கான ஆய்வுக் கட்டுரைகளை எல்லாம் எழுதியவர்; பேராசிரியராகப் பணி புரிந்தவர்; அவற்றை எல்லாம் விட்டு விட்டுத் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் சாலையோரத்தில் சன்னியாசியாய் இன்று இருப்பவர் தான் இந்தக் குறும்படத்தின் நாயகன் நாகராஜ்.

தான் சம்பாதித்த பணத்தில் வாங்கி இருந்த வீட்டை, யாரென்றே தெரியாத ஒருவருக்கு ஒரு ரூபாய்க்குக் கொடுத்த இவர், முற்றிலும் துறந்து அதீதத் துறவுத் தன்மையுடன் இன்று காட்சி தருகிறார்.

எதார்த்தமாய் கதையின் ஓட்டத்தில் இவரின் இளமைக்காலத்தில் எல்லோரையும் போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று தான் வந்திருக்கிறார்.

பொறியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற இவர், சினிமாவின் மேல் அதிகம் ஆசை வைத்திருந்தார். ஆனால், யாரிடமும் சினிமாவைக் கற்றுக் கொள்ள வில்லை. தானே ஒரு படம் எடுத்துச் சாதனை செய்திருக்கிறார்.

குறும்படத்தில், தன்னை மாற்றிய நண்பனின் வார்த்தைகள் தனக்குள் ஏதோ செய்ததை உணர ஆரம்பிக்க, நண்பனே வெளியே தெரியாத ஆன்மீகக் குருவாகின்றான்.

குறைந்த‌ பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட காசிம் குறும்படம், கைதேர்ந்த இயக்குனர்களின் படைப்பைப் போலவே எடுக்கப்பட்டுள்ளது. இவரின் பெருமுயற்சியையும், சுயமான கலை அறிவையும், திறமையையும் எப்படிப் பாராட்டுவது?

திறமையாகக் கொண்டு வரப்பட்டுள்ள இப்படத்திற்குப் பின் அடுத்த முயற்சியை நாகராஜ் எடுக்கவில்லை. அப்படமே ஞானத்தைத் தந்தது. நண்பனின் இழப்பு அவரை மிகுதியாகப் பாதித்திருக்கிறது.

குறும்படத்தின் நேர்த்தி

குறும்படத்தின் நேர்த்தியாகக் கதையம்சத்தைக் கூறலாம். தொடக்கம், வளர்ச்சி, உச்சம், பிரச்சனை ஒவ்வொன்றாய் தீர்தல், முடிவு என்ற கதை கூறும் அம்சம் சரியான கதை அமைப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இடையிடையே பாடல்கள் கருத்தோடு அமைந்து இருக்கின்றன. கேமரா வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்திருக்கிறது.

பேருந்தில் பின்னோக்கு பார்வையில் தன் முழுக்கதையையும் விளக்கியுள்ள பாங்கு பாராட்டக்கூடியதாகும். பேருந்தில் அமர்ந்ததும், காசிம் எனும் நண்பனைத் தேடி மனம் செல்லுகிறது.

அப்போது, ஏறிய ஒரு இஸ்லாமியப் பெண்மணி தன் குழந்தையான காசிமைக் கூப்பிடுவதாகவும், அதைக் கேட்ட நாகராஜ் திரும்பிப் பார்ப்பதும் மகிழ்வதும் கதையின் அலாதியான தொடல்கள் ஆகும்.

நட்புக்கு விளக்கம் கூறுவது, பணம் பெரிதில்லை என்பது, வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவது என நண்பன் கதாபாத்திரம் மிக உன்னதமான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மனம் சார்ந்த விரிசல்கள் வரும்போது, நண்பர்கள் எப்படி அதை சரி செய்து தன் நட்பை விடாதிருந்தார்கள் என விளக்க அமைக்கப்பட்ட காட்சிகள் நெகிழ வைத்து விடுகின்றன.

நண்பனுக்கு ஆடை வாங்கித் தருவதும், கஷ்டத்திற்குப் பணம் கொடுத்து உதவியதும், அவன் இல்லை எனும் போது பித்துப் பிடித்ததைப் போல் அழுவதும் நட்பின் உயரத்தைக் காட்டி விடுகிறது.

வசனங்கள் எல்லா இடங்களிலும் நச்சென்று இருக்கின்றன. ஆழமான வரிகள் அவை. உள்அர்த்தங்கள் ஆன்மீகத்தை நோக்கிப் பயணப்பட வைக்கின்றன. இசை மனதை உருக்குகின்றது; அருமையாக இசையமைத்துள்ளனர்.

குறும்படத்தின் குறை

மிக நீளமான கதையமைப்பும், பின்னோக்கு உத்தியைக் காட்டப் படத்தைக் கருப்பு- வெள்ளையாகக் கொண்டு வந்திருப்பதும் நெருடலாக இருக்கின்றன. சிறுசிறு கிளைக்கதைகளும் வருவதால் படத்தின் ஓட்டம் தடைப்படுகிறது.

கடைசியாக நாகராஜின் பேச்சு இப்படத்தின் பின்னணியை அலசினாலும், அங்கு தேவையில்லை என்றேபடுகின்றது.

காரணம் கதை எல்லாவற்றையும் உள்ளுணர்ந்து கொள்ள வைத்து விட்ட பொழுதில் அதை விவரித்து இருக்க வேண்டாம் என்றே தோன்றுகின்றது.

குறும்படத்தின் சிறப்பு

சிறந்த நட்புக்கு இலக்கணமாக இனி இவர்களையும் (நாகராஜ், காசிம்) பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். நட்பு போனபிறகு மனம் வெறுத்து இன்று துறவியாய் இருக்கும் நமது நாகராஜ் போற்றப்பட வேண்டியவர் ஆகிறார்.

படக்குழு

படத்தொகுப்பு: ரா.சேதுராமன்

ஒளிப்பதிவு : மயில்வாகனன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- நாகராஜன்

காசிம் குறும்படம் பாருங்கள்

(குறும்படம் விரியும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.