அகல்யாவும் ஷர்மிலியும் கலைக் கல்லூரி ஒன்றின் கணினிப் பிரிவு பேராசிரியைகள்.
விழித்திருக்கும் 90 சதவிகித நேரத்தை பணி இடத்திலேயே செலவிடுபவர்களுக்கு, சக பணியாளர்களே சொந்தமாக உறவாக மாறிப் போகிறார்கள்.
அப்படிதான் அகல்யாவும் ஷர்மிலியும் நட்பாகி, உறவாகி, தங்கள் சுகம், துக்கம், மகிழ்ச்சி, குடும்பம், வேலை என எல்லா சங்கதிகளையும் பரிமாறிக்கொண்டு வாழ்பவர்கள்.
கல்லூரியில் பாடம் எடுப்பது மட்டும் வேலை இல்லை. அது சார்ந்த நிறைய பணிகள் இருந்து கொண்டே இருக்கும். அந்த பணிச்சுமை தீராத அழுத்தத்தை தந்து கொண்டே இருக்கும்.
அந்த அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தங்கள் பணிகளை முடிக்க இவர்களின் நட்பு, நட்பின் வழி கொண்டாட்டம் பெரிதும் உதவியது.
அவர்கள் ஏதேனும் ஒரு பணியை இனிதே முடித்து விட்டால் அப்புறம் ‘ஸ்வீட் எடு கொண்டாடு தான்’.
அந்தக் கொண்டாட்டத்தில் சாப்பாடு தான் பிரதானம்.
எதையாவது வாங்கி அல்லது எதையாவது வீட்டிலிருந்து செய்து எடுத்துக் கொண்டு வந்து, சக தோழிகளுடன் பகிர்ந்து பரிமாறி உண்டு கழிப்பது தான் அவர்களின் அதிகபட்ச கொண்டாட்டம்.
இந்தச் சமயத்தில் அகல்யா விரும்பி கேட்பது வட இந்திய இனிப்பான காஜு கத்லி. எப்போதும் காஜு கத்லி ரசிகையகவே அகல்யா இருந்து வந்தாள்.
அப்படிதான் ஒரு சனிக்கிழமை. பெரிய ரிப்போர்ட் ஒன்றை தயார் செய்யும் வேலை வந்து விட்டது. கடினமான வேலைதான்.
ஞாயிற்றுக் கிழமை விடுமுறைச் சோம்பல் வேறு சனிக்கிழமையே அவர்களுக்கு தொத்திக் கொண்டது.
முக்கியமான வேலை என்பதால் முடித்து விட்டுத்தான் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.
இன்று வேலை சீக்கிரம் முடிந்து விட்டால் நாம் ‘காஜு கத்லி’ இனிப்பு வாங்கி சாப்பிடலாம் என ஷர்மி சொன்னதால், அகல்யா ஒரு சிறு குழந்தையைப் போல் உற்சாகமாக எல்லா வேலைகளையும் வேக வேகமாக செய்ய ஆரம்பித்தாள்.
வேலை நீண்டு கொண்டே போனது; மாலை இருட்டும் வரை நீண்டது. எப்படியோ சொன்ன வேலையை ஒரு வழியாக செய்து முடித்து விட்டார்கள்.
ஆனால் அவர்கள் கொண்டாட்டம் மட்டும் நின்று விட்டது. வீட்டுக்குப் போகிற அவசரத்தில் ‘காஜு கத்லி’ பார்ட்டி திங்கள் கிழமைக்கு மாற்றப்பட்டு விட்டது.
திங்கள் கிழமை காலை, ஷர்மி சொன்னபடி ஒரு கிலோ காஜு கத்லியுடன் கல்லூரிக்கு வந்து விட்டாள்.
ஆனால் அகல்யா மட்டும் வரவில்லை.
எட்டரை மணி கல்லூரிக்கு வர வேண்டிய அகல்யா, பத்து மணி ஆகியும் வரவில்லை. மாணவர்களும் சக ஆசிரியைகளும் அகல்யாவை தேடிக் கொண்டிருந்தார்கள்.
ஷர்மிக்கு கோபம் கோபமாக வந்தது. ‘ஒரு போன் செய்து கூட சொல்லவில்லையே’ என்று திட்டி கொண்டிருந்தாள்.
காஜு கத்லி வேறு காத்துக் கிடக்கிறது. அவள் வந்தால்தான் அதை திறக்க முடியும்.
பொறுக்க முடியாமல் அகல்யாவுக்கு போன் செய்தாள்.
வீட்டிலிருந்து போனை எடுத்தவர்கள் சொன்ன பதில் காதில் இடியாய் இறங்கியது.
சனிக்கிழமை இரவு அகல்யா திருப்பதிக் கோயிலுக்குப் போகும் வழியில், கார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாள் என்ற செய்தி கேட்டவுடன் எல்லோரும் மிரட்சியில், பயத்தில், மயங்கி உறைந்தே போனார்கள். சிலருக்கு கண்கள் இருண்டன.
தேவதை போல் வலம் வந்த அகல்யா, காஜூ கத்லியயை விட இனிமையானவள். ஒரு இரவில் இந்த உலகத்தை, அவளுக்கு பிடித்தமான, நண்பர்களை, உறவுகளை விட்டு மறைந்து விட்டாள்.
யாராலும் நம்ப முடியவில்லை; ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.
பெரும் இருட்டும் சூன்யமும் எல்லோரையும் கவ்விக் கொண்டது.
கடைசிவரை அந்த காஜூ கத்லி டப்பாவை யாரும் திறக்கவே இல்லை. அப்படியே தூக்கி குப்பையில் போட்டார்கள்.
அதன் பின் இன்று வரை ஷர்மிலியும் மற்ற தோழிகளும் காஜு கத்லி வாங்குவதை, சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்கள்.
காஜு கத்லி வாங்கவோ சாப்பிடவோ இப்பவும் ஷர்மிலிக்கும் மற்ற தோழிகளுக்கும் பயமாகவே இருக்கிறது.
இந்த கதையைக் கேட்ட பின்பு மிட்டாய் கடையில் காஜு கத்லியை பார்க்கும் போதெல்லாம் என் கண் முன் அகல்யா நிழலாடுகிறாள்; இனிப்பும் கசக்கிறது.
முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849
Comments
“காஜு கத்லி – சிறுகதை” அதற்கு 8 மறுமொழிகள்
வாழ்க்கை மரணத்தோடு சம்பந்தமுடையது.
மரணம் நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டது.
நிகழ்ச்சி நம் உள்ளத்தோடு சம்பந்தம் உடையது.
தூய அன்பும் பாசமும் உள்ளுக்குள் உள்ளாக கலந்து இருக்கிற ஒருமைப்பாடும் இறப்பை கொஞ்சமும் எதிர்பார்ப்பதில்லை.
அவர்கள் நினைவாக ஏதாவது ஒன்றை இவ்வுலகில் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு மரணத்தின் பின்னும் நினைவு அலைகள் நம்மைச் சுற்றி அலைந்து கொண்டே இருக்கின்றன என்பதை இக்கதை மிக ஆழமாக உணர்த்திச் செல்கிறது.
கதை எடுத்து கூறுவதற்கு முதலில் ஆழமான நட்பையும் வேலைப் பளுவையும் கூறி, பின்பு ஏதாவது நிகழ்வில் அந்த இனிப்பின் உடைய இடம் குறித்து முடித்து இருப்பது உண்மையில் அழகாகக் கதையை கூறுகிற முறையாகும்.
சிறுகதை ஆசிரியர் கை தேர்ந்தவராக இனம் காணப்படுகிறார்.
Nice story
கதையை படித்து முடித்தவுடன் என்னை அறியாமல் கண்கள் கலங்கின. மிகவும் அருமையான கதை.
சில வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் இக்கதை படித்த யாராலும் அந்த வலியை உணராமல் இருக்க முடியாது…
இனிப்பு பரிமாற்றம் என்பது சந்தோஷத்தின் அடையாளம். ஆனால் சில சமயங்களில் இது ஒரு துன்பத்தின் தூண்டுகோலாக மாறுகிறது… இழப்பு என்னும் மாபெரும் வலி அதுவும் நட்பில் ஏற்படும் இழப்பு இனிமையானவைகளைக் கூட கசப்பாக மாற்றவல்லது.
இனி நான் எப்போது காஜு கத்லியை பார்த்தாலும் இக்கதையே ஞாபகம் வரும்…
கதாசிரியருக்கு என் வந்தனங்கள்….
Super sir.
வீரமணி அப்பாவுடைய எழுத்துக்களை தொடர்ந்து வாசித்துவருகிறேன். அப்பாவுடைய படைப்புகளின் முடிவில் எனக்கு நா. முத்துக்குமாருடைய கவிதைகளும், சிறுகதைகளும் நினைவுக்கு வருகிறது.
பெரிய கதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் ஏன் கவிதைகளுக்கு கூட ஒரு பூரணமான – முற்றுப்பெற்ற முடிவு அவசியம்.
அது இக்கதையில் அப்பா வழக்கம் போல் அமைத்துள்ளார்.
“இனிப்பும் கசக்கிறது” இதுவே காஜு கத்லி கதையின் சாரமாக பார்க்கப்படுகிறது.
மேலும் தங்களுடைய பல படைப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் உங்கள் அன்பு வாசகனும் – மகனுமான
– சஞ்ஜெய்.க
Superb story…..
Very nice sir….i just travelled in the story becoz am also one of the lover of kaaju kaathili 😋