நமக்கு தூய காற்று, நீர், உணவுப் பொருட்கள் மற்றும் உறைவிடம் ஆகியவற்றைக் காடுகள் வழங்குகின்றன. காடின்றி நாடியில்லை என்ற கூற்று முற்றிலும் உண்மையே.
காடுகள் என்பவை மரங்களால் சூழப்பட்ட பகுதியாகும். உலக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு உள்ள காடுகள் பூமத்திய ரேகைப் பகுதியிலிருந்து துருவப் பகுதிகள் வரை பரவியுள்ளன.
காடுகள் காற்றிலிருக்கும் பல்வேறு வாயுக்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை. மேலும் நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாவதால் காற்று மண்டலத்தில் நீராவியின் செறிவு அதிகரித்துள்ள காற்றை தடுத்து மழையைத் தருகின்றன.
காடுகளில் உள்ள பல்வேறு பொருட்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன. மருந்து மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்பயன்படும் மூலப் பொருட்களை வழங்குகின்றன. இனி காடுகளின் பயன்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
இயற்கைக் காற்றை சுவாசிக்கும் நாம் பிராணவாயு எனப்படும் ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கரியமிலவாயு எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறோம். ஆனால் காடுகளில் உள்ள தாவரங்கள் நாம் வெளி விடுகின்ற கரியமிலவாயுவை எடுத்துக் கொண்டு நமக்கு தேவையான ஆக்ஸிஜனைக் கொடுக்கின்றன. எனவே காடுகளை இயற்கைக் காற்றை சுத்திகரிக்கும் தொழிற்சாலைகள் என்றே கூறலாம்.
ஒரு நன்கு வளர்ந்த இலைகளைக் கொண்ட மரமானது ஒரு வருடத்தில் நாற்பது மனிதர்கள் ஓர் ஆண்டிற்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயுவைத் தருகின்றது.
காடுகள் உலகின் தட்ப வெப்ப நிலையைச் சமன்படுத்த உதவுகின்றன. தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை உட்கொள்வதனால் உலக வெப்பமயமாதலின் தன்மையை குறைக்கின்றன. இதனால் பூமி குளிர்ச்சியடைந்து தட்ப வெப்ப நிலை சீராகின்றது. இவ்வாறு அவை உலகத்தின் நுரையீரல்களாகச் செயல்படுகின்றன.
காடுகள் தூசி, புகை மற்றும் நச்சுப் பொருட்கள் நிரம்பிய காற்றை மரத்தின் இலை தழைகள் வடிகட்டித் தூய்மைப் படுகின்றன. மரங்களின் தழைகள் காற்றிலிருக்கும் ஓசோன் கலவையை 80% உள்ளிழுக்கும் தன்மை கொண்டவை.
காடுகள் வானிலையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை மேகங்களைத் திரட்டி, குளிர்ச்சியூட்டி மழைபொழிய வைக்கின்றன. காடுகள் இருக்கும் பகுதிகளில் அடிக்கடி மழை பொழிவதன் காரணம் இதுதான். அவை அழிக்கப்பட்டால் மழை இல்லாமலும், மழையின் அளவும் குறைந்தும் போகும்.
பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கும் வங்கிகளாக அவை செயல்படுகின்றன. மரங்களே இல்லாத சாதாரண நிலப்பரப்பில் மழை பெய்யும் போது மழை நீரில் மூன்று விழுக்காடே பூமியினுள் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள 97 விழுக்காடு நீர் உடனடியாக ஓடி விடுகின்றது. ஆனால் காடுகளில் பெய்யும் மழை நீரில் 33 விழுக்காடு உள்ளிளுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.
காடுகளின் மேற்பரப்பில் அடுக்கடுக்காக விழுந்து கிடக்கும் இலை தழைகள் மக்கிய நிலையில் நீரை உறிஞ்சிப் பாதுகாத்து வைக்கும் மிருதுவான பஞ்சாகச் செயல்படுகின்றன. இவ்வாறு உள்ளிழுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் நீர் பஞ்சியிலிருந்து உறிஞ்சப்பட்ட நீர் வெளிவருவது போல மெதுவாக வெளி வருகின்றது.
இவ்வாறு பல இடங்களிலிருந்து வெளிவரும் நீர் ஒன்றிணைந்து என்றுமே ஓடிக் கொண்டிருக்கும் அருவிகள் மற்றும் நீரோடைகளாக மாறுகின்றன. அதனால் தான் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் அருவிகளும், ஓடைகளும் நிறைந்து இருக்கின்றன.
மேலும் காடுகள் மழைநீர் பெருமளவில் கழிவு நீரோட்டமாக செல்வதைத் தடுத்து தரை கீழ் நீராக உள்ளிழுக்கப்பட்டு நிலத்தடி நீரின் அளவையும் வளம்பட வைக்கிறது. வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன. காடுகளின் அழிப்பே நாட்டில் வெள்ளத்திற்கும் வறட்சிக்கும் வழிவகுக்கின்றன.
மரங்கள் செய்யும் இன்னும் ஒரு மகத்தான சேவை மண்ணரிப்பைத் தடுப்பது. மரங்களின் வேர்கள் பரந்து விரிந்து கிடப்பதால் அவை அவைகளைச் சுற்றியுள்ள மணற்பரப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றன. மரங்கள் இல்லையெனில் சத்துள்ள நிலப்பரப்பு மண் எளிதில் பெய்யும் மழையால் அடித்துச் செல்லப்படும்.
சத்துள்ள மண் அரித்துச் செல்லப்படுவதால் பயிர் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மண் அரிப்பு, மண்படிதல், நிலநடுக்கம், நிலச்சரிவு புழுதிப் புயல் போன்றவை ஏற்படாதிருக்க காடுகள் பெரிதும் பயன்படுகின்றன.
காடுகளில்லாத பகுதியில் ஒருமுறை அடிக்கும் புயலால் ஒரு ஹெக்டேரிலிருந்து 150 டன்கள் மேல் மண் அடித்துச் செல்லப்பட்டு விடும். காடுகளதிகமுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். இதனால் புயல், சூறாவளின் தாக்கம் குறைவாக இருக்கும்.
காடுகளினால் உயிரியல் பன்மை வளம் பாதுகாக்கப்படுகின்றது. காடுகளில் அரிய மூலிகைகள் கிடைக்கின்றன. விலங்குகள், பறவைகள் ஆகியவற்றிற்கு புகலிடங்களாக விளங்குகின்றன. வனப் பொருட்கள் கனிவளங்கள் காடுகளிலிருந்து கிடைக்கின்றன.
மழைக்காடுகளில் புற்று நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் கிடைக்கின்றன. மரக்கட்டைகள், ரெசின்கள், காகிதம், வீட்டு உபயோகப் பொருட்கள் செய்வதற்கான மூலப்பொருட்கள் ஆகியவை காடுகளிலிருந்து கிடைக்கின்றன.
சுமார் 160 கோடி மக்கள் காடுகளின் மூலம் வேலை வாய்ப்பினைப் பெறுகின்றனர்.
ஆண்டுதோறும் மார்ச் 21ம் நாள் உலக காடுகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாமும் காடுகளின் பயன் கருதி அவற்றை பேணி பாதுகாத்து வளர்ப்போம்.
Comments
“காடுகள்” அதற்கு 3 மறுமொழிகள்