அந்த வனத்தில் சிங்கராஜாவின் அறிவிப்பு அணிலாரால் காடு முழுவதும் அறிவிக்கப்பட்டது.
“காட்டிலுள்ள விலங்குகளே
கவனத்துடன் கேளுங்களேன்
இக்காட்டை ஆளும் நம் மன்னர்
கருணை மிகுதி கொண்டதனால்
வாட்டி வதைக்கும் நோய் நீங்க
வழிவகை ஒன்று செய்துள்ளார்
பிள்ளைகளுடன் பெரியவரும்
பிணிகளை தீர்த்திட வழியுண்டாம்
குரங்கு டாக்டர் தன்
குழுவினரோடு வருவாராம்
மருந்துகள் நமக்கு தருவாராம்
பறவைகளோடு விலங்குகளும்
பலப்பல நோய்களை குணமாக்கி
குறைகளை நீக்கி நலமாக
கூடி வாழ்வை அமைப்பாராம்.”
என்று தன் வாலை ஆட்டிக்கொண்டு அந்தக் காடு முழுவதும் அறிவித்தார் அணிலார்.
“ஆமா இங்க இருக்குறவங்கள மனுசன்கிட்ட இருந்து காப்பாற்ற வழியில்லை. அவங்களோட தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகமாகி கிட்டே இருக்கு. அதை நிறுத்த தைரியம் கிடையாது. அதெல்லாம் முடியாததால மருத்துவ முகாம் அது இதுன்னு நம்மள ஏமாத்த பாக்குறாரு போலும்” – சில விலங்குகள் அலுத்துக் கொண்டன.
“இது வரைக்கும் இந்தக் காட்டுல எத்தனையோ ராசாக்க ஆட்சி செஞ்சிருக்காங்க இது மாதிரி யாருதான் செஞ்சிருக்கா” என்றது நரி.
“என்னதான் இருந்தாலும் மந்திரியான உம்மால அரசரை விட்டுக்கொடுத்து பேச முடியுமா?” என்று யானையார் கேட்டார்.
“சரி சரி எப்படி இருந்தாலும் நாளைக்கு நடக்குற முகாம்ல எல்லாருக்கும் நல்லது நடக்கும்ன்னு நம்பி வந்து கலந்துக்கோங்க” என்று கூறிவிட்டு நகன்று சென்றது நரி.
முகாம் நாள் காலையில் இருந்தே விலங்குகள் காட்டின் மத்தியில் இருந்த அந்தப் பெரிய மரத்தடியில் கூட்டம் கூட்டமாக வந்து நின்று கொண்டிருந்தன. குரங்கு டாக்டர் தன் குழுவினரோடு வந்தார். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்ற நரி அவரை மேடைக்கு அழைத்துச் சென்றது.
மேடையில் இருந்த சிங்கராஜா வணக்கம் சொல்லி வரவேற்றார். “எல்லோரும் அமைதியா இருங்க நம்ம ராஜா பேசப் போறாரு” என்று மந்திரியான நரி கூறியதும் மன்னரான சிங்கராஜா விலங்குகளை பார்த்து கூறியது.
“இந்தக் காட்டின் விலங்குகளே
இனிய வணக்கம் உங்களுக்கு
உங்கள் உடலின் நோய் தீர
உருவான மருத்துவ முகாம் இதுவே
உங்களுக்குள்ள குறைகளையே
உரிய மருந்தால் குணமாக்க
குரங்கு டாக்டர்
குழுவினரோடு வந்துள்ளார்
குறைகளை அவரிடம் தெரிவித்து
குணமாகியே நீங்கள் செல்லுங்கள்
பணமோ பொருளோ தரவேண்டாம்
பலனை மட்டும் அடைவீராம்”
சிங்கராஜன் அறிவிப்பைத் தொடர்ந்து முகாம் துவங்கியது.
முதலாவதாக காக்கை வந்தது. அதனைக் கண்ட குரங்கு டாக்டர் என்னவென்று விசாரித்து
“காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு
காட்டில் பழமொழி உண்டாச்சு
காக்கை என் நிறம் கருப்புதான்
ஏக்கம் எனக்கும் உண்டுங்க!
பொன்னா மாறிட ஆசைங்க
என் நிறம் மாறிட வழியுண்டா
ஏற்ற மருந்தும் இதற்குண்டா? என்று காகம் தன் குறையை கூறியது.
அடுத்ததாக நின்று கொண்டிருந்த நாய் தன் குறையை கூறலானது.
“குரங்கு டாக்டரய்யா
கோடி வணக்கமய்யா
குரைக்கும் நாயினம் நானய்யா – மனக்
குறைதான் எனக்கும் உண்டய்யா!
நாயின் வாலை நிமிர்த்திடவே
நாடும் இயலாது என்கிறதே
அதனை நேராய்க் கொண்டுவர
அன்புடன் மருந்தும் தருவீரா!
நாயின் கோரிக்கையை கேட்ட குரங்கு டாக்டர் பதிலேதும் கூறாமல் அடுத்ததாக நின்று கொண்டிருந்த எலியின் குறையைக் கேட்டது.
“அய்யா! எங்கள் இனமே பூனைகளைக் கண்டு பயப்பட வேண்டியதாகின்றது. அதற்கு மாற்றாக ஏதேனும் மருந்து கொடுத்து எங்களின் வலிமையை அதிகமாக்கி இனி வரும் காலத்தில் எலி இனத்தைக் கண்டவுடன் பூனைகள் பயந்து ஓடும்படி செய்வதற்கு ஏதேனும் மருந்து உண்டா?” என்றது.
இவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த குரங்கு டாக்டரிடம் அடுத்ததாக கொண்டைச் சேவல் வந்தது
“இந்தக் காட்டின் பொலிவினையே
எடுத்துக் கூறும் சேவல் நான்
எங்கள் இனத்தார் பலர் கூடி
இனிய குயிலின் குரல்பெறவே
உங்களை நாடி வந்துள்ளோம்
அதற்கு மருந்தைத் தருவீராம்” என்று சேவல் கூறியது.
இப்படியாக ஆந்தை தனக்கு பகலில் கண் தெரிய வேண்டும் என்றும் குயில் தனக்கு மயில் போல் தோகை வேண்டும் என்றும் பலவும் பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டு வந்தன.
இவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு அமைதியாக இருந்த குரங்கு டாக்டர் இறுதியாக கூறியது.
“காக்கைத் தம்பியே
கருப்பே உனக்கு அழகே
குரைக்கும் நாயே
குனிந்த வாலிங்கு உனக்கெதற்கோ?
சின்ன எறும்பே
சிறிய உருவே உன் பலமாம்;
கொண்டைச் சேவல் உன் இனத்தான்
கனத்த குரலே தேவையிங்கு
ஆந்தை பகலில் உறங்கிடவே
அதற்கு கண்ணொளி எதற்காமோ?
குயிலுக்கு மயில்போல் தோகையெனில்
குரலின் இனிமை போய்விடுமே!”
என்று அவர்களைப் பார்த்து கூறியதும் அனைவரும் தலை குனிந்தவாறு நின்று கொண்டிருந்தனர்.
“ஒவ்வொரு விலங்கும்
ஒவ்வொரு வகையில்
உலகில் உயர்ந்து
உள்ளவராம்!
இந்த நிலை மாறிவிட்டால்
எங்கும் குழப்பம் நேரிடுமாம்
அன்பு கொண்ட விலங்குகளே
அனைவரும் மகிழ்வுடன் செல்லுங்கள்
இந்தக் காட்டில் வாழ்கின்ற
அனைவரும் சமமென உணர்ந்திடுங்கள்”
என்று மந்திரியான நரி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைக்க காட்டில் நடந்த மருத்துவ முகாம் நிறைவு பெற்றது.
– இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942