காட்டுக்குள்ளே தீபாவளி
கண்டு செல்ல வாருங்கோ!
கை நிறைய பட்டாசுகள்
கொண்டு நீங்க வாருங்கோ!
வன ராஜா சிங்கத்துக்கு
வண்ணச் சட்டைத் தாருங்கோ!
கரடி மாமா ஓடி வர்றார்
கைகுலுக்கி மகிழுங்கோ!
குதிச்சு வரும் முயலுக்குக்
குட்டித் தொப்பித் தாருங்கோ!
கொஞ்ச வரும் கிளிக்குஞ்சுக்கு
கழுத்தில் மாலைப் போடுங்கோ!
சுட்டிப் பயல் அணிலிடம்
சுடர் தீபம் தாருங்கோ!
சுற்றிச் சுற்றி கானகத்தில்
சுகமாய் ஏற்றச் சொல்லுங்கோ!
எட்டி ஓடும் மான் பயலை
கிடுக்கிப் போட்டுப் பிடியுங்கோ!
எல்லோருக்கும் பலகாரம்
எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்கோ!
பெரிய அண்ணன் யானையிடம்
பட்டாசுப் பையைத் தாருங்கோ!
சண்டையின்றி எல்லோருக்கும்
சமமாய்ப் பிரிக்கச் சொல்லுங்கோ!
வாலாட்டி ஓடும் குரங்கை
வளைச்சு விரட்டிப் பிடியுங்கோ!
வட்டமாகக் கோடு போட்டு
வரிசையில் நிற்கச் சொல்லுங்கோ!
தித்திக்கும் தீபாவளியில்
தீமை அழிய வேணுங்கோ!
இறைவனிடம் வேண்டிக் கொண்டு
இனிதே வீடு திரும்புங்கோ!
– இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!