காட்டுக்குள்ளே தேர்தல்

இண்டங் காட்டை ஆட்சிசெய்ய

இனிய தேர்தல் நடக்குது

நண்டு கூட்டம் நடனமாட

நரிகள் ஓட்டுக் கேட்குது

 

சுண்டெலிகள் தாளம் போட

சுற்றி மயில்கள் ஆடுது

வண்டு முழங்கும் வாத்தியத்தால்

வனம் முழுக்க அதிருது

 

என்றும் இந்த காட்டையாள

ஏற்ற தலைவன் தானென

குன்றிலேறி சிங்கம் முழங்கும்

குரலும் நமக்கு கேட்குது

 

நான் தின்பதற்கே நீங்களென

நேற்று சொன்ன சிங்கமே

தான் ரெம்பசாது என்பதுபோல்

தயங்காது பொய் சொல்லுது

 

கன்னங்கருத்த யானை முதல்

காட்டிலுள்ள அனைவரும்

நெஞ்சம் நிமிர நேர்வரிசை

நின்று ஓட்டுப் போட்டனர்

 

இன்றுமாலை வாக்கு எண்ணி

இனிய முடிவு தெரிந்தபின்

நன்மைதரும் மாற்றம் வரும்

நமக்கு என்று எண்ணியே

 

கண்மூடி கனவு கண்ட

கருங்குருவி கத்திட

சீ சீ நீ தூங்கென

தாய்குருவி அடித்தது

 

சின்னவன் நான் கண்டதெல்லாம்

சிறுகனவா? என்றபடி

கண்விழித்த கருங்குருவி

கண்ணில் நீர் வழிந்தது

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)