காட்டுக்குள்ளே போட்டி தேர்வு

காடு

அந்த காட்டில் மந்திரியாக இருந்த நரியார் நரசிம்மனுக்கு வயதாகிவிட்டபடியால் புதிய மந்திரியை தேர்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மன்னர் சிங்கராசாவுக்கு தோன்றியது.

‘என்ன நரசிம்மரே! உமக்கு வாரிசாக ஒருவரை இப்போதே நியமித்து அவருக்கும் நீரே பயிற்சியளித்து உம்மை போலவே உருவாக்க வேண்டுமல்லவா?’ என்று சிங்க ராசா கேட்டதும்

‘ஆம் மகாராசா! அது நம் கடமையல்லவா! எதிர்காலத்தில் இக்காட்டு மிருகங்களை காப்பாற்ற இப்போதே புத்திசாலியான ஒருவரை மந்திரியாக்கி பயிற்சி அளிப்பது இப்போது அவசியமே’ என்றது.

சரி! உடனடியாக நமது காடு முழுவதும் உள்ள எல்லா விலங்குகளுக்கும் இது குறித்து அறிவிப்பினை வெளியிடுங்கள். அது கேட்டு வருபவர்களில் போட்டி வைத்து ஒருவரை தேர்வு செய்து புதிய மந்திரியை நியமனம் செய்யலாம்’ என கூறிவிட்டு மன்னர் சென்றது.

மந்திரி நரசிம்மன் நரி அங்கு நின்று கொண்டிருந்த சேவகன் கழுதை காங்கேயனை அழைத்து ‘நீ சென்று நமது அரண்மனை அறிவிப்பாளரான அணில் அய்யாச்சாமியை அழைத்து வா!’ என்று கட்டளையிட்டது.

சேவகன் காங்கேயன் கழுதையும் அணில் அய்யாச்சாமியின் வீட்டிற்கு சென்று அதனை கையோடு அழைத்து வந்து மந்திரியின் முன்னே நிறுத்தியது.

‘மாண்புமிகு மந்திரியாருக்கு எனது தாழ்மையான வணக்கங்கள்’ என்றபடி கைகளை கட்டியபடி அணில் அய்யாச்சாமி மந்திரியான நரசிம்மன் நரியின் முன்னால் நின்றது.

‘என்ன! அணிலாரே! நலம் தானே?’ என்று விசாரித்த மந்திரியின் கேள்விக்கு ‘ உங்கள் தயவாலும் மன்னரின் கருணையாலும் நலமாக இருக்கிறேன்’ என அணில் அய்யாச்சாமி பதில் கூறியது.

‘சரி மன்னரின் அறிவிப்பு ஒன்றை இந்தக்காடு முழுவதும் அறிவிக்க வேண்டும்’ என்று கூறிய மந்திரியிடம் தங்களின் கட்டளைபடியே செய்கிறேன்’ என அணிலார் கூறியது.

இந்த வனத்தில் இன்று வரை மந்திரியாக இருந்து வரும் எனக்கு வயதாகிவிட்டதால் காட்டின் எதிர்கால நிலையினை கருதி புதிய ஒருவரை மந்திரியாக நியமனம் செய்ய மன்னர் விரும்புகிறார்.

நமது காட்டு வாழ் விலங்குகளில் இளையோரில் புத்திசாலியான ஒருவரை போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்ய மன்னர் நினைப்பதால் கலந்து கொள்ள விரும்பும் இளைய விலங்குகள் நாளை காலை இங்கு வந்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம். வெற்றி பெறுபவர் எதிர்கால மந்திரியாக நியமனம் செய்யப்படுவர்’ என்ற செய்தியை இக்காடு முழுவதும் அறிவிக்க வேண்டும் என்று நமது அரசரின் ஆணை என மந்திரியான நரசிம்மன் விசயத்தை கூறிவிட்டு அய்யாச்சாமி அணிலுக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தது.

உடனடியாக அங்கிருந்து வெளியேறிய அணிலார் தமது அறிவிப்பு பணியினை உடனே தொடங்கியது.

‘வனத்தில் வாழும் விலங்குகளே!

வந்து என்முன் நில்லுங்களேன்

மனதால் உயர்ந்த நம் மன்னர்

மக்கள் உங்கள் அனைவருக்கும்

இனிப்பாய் சொன்ன செய்தியொன்று

இங்கே என்னிடம் இருக்கிறது – நம்

காட்டின் மந்திரி நரசிம்மர்

சில நாட்களில் ஓய்வு பெறுவதால்

இளைஞர் ஒருவரை இக்காட்டின்

எதிர்வரும் காலத்தின் மந்திரியாய்

நியமனம் செய்திடும் போட்டிகளை

நடத்திட மன்னர் விரும்புகிறார்

வெல்பவர் எவரோ அவரேதான்

விரைவில் மந்திரி ஆவாராம்

திறமையுள்ள இளையோரே

நாளை போட்டிக்கு வாருங்கள்’ என்று அறிவித்தது.

 

அப்போதே காட்டு விலங்குகள் அது குறித்து பேசலாயின. ‘என்ன போட்டியோ?’ எப்படி வெல்வதோ?’ என தங்களுக்குள் பேசியபடி கலைந்து சென்றன.

அரசனின் அறிவின்படி பல இளைய விலங்குகள் மறுநாள் காலை அரண்மனை வாசலில் குவியத் துவங்கின.

கூட்டமாக இருந்த விலங்குகளிலிருந்து உடற்தேர்வு செய்து பாதி விலங்குகளை வெளியேற்றிவிட்டு மீதமுள்ளவர்களிடம் ஓட்டபோட்டி வைத்து முதலாவதாக வரும் நால்வரை மட்டும் தேர்வு செய்து முதற்கட்ட தேர்வினை மந்திரியான நரசிம்மன் நரியார் நிறைவு செய்தார்.

அதன்படி முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்ற காட்டெருமை கார்வண்ணன் பூனை பொன்னையன், கரடி காளி, நரி நந்திவர்மன் நால்வரும் நாளை காலை மீண்டும் வேறொரு போட்டிக்கு அழைக்கப் பெற்றனர்.

தேர்வு பெறப்பட்ட நால்வரும் மறுநாள் காலை அரண்மனையின் உள்ளே மன்னரின் முன்னே அழைத்து வரப்பட்டனர். அரசர் அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது குடும்பத்தினரை பற்றி விசாரித்தார்.

பின்னர் நான்கு பேருக்கும் பொதுவான ஒரு போட்டி வைத்து ஒருவரை மட்டும் தேர்வு செய்யுங்கள். போட்டி அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் விதமாக இருக்க வேண்டும் என மந்திரி நரசிம்மனுக்கு சிங்கராசா உத்தரவிட்டார்.

மந்திரியான நரி நரசிம்மனும் அவர்களின் முன்னே நின்றபடி,

‘என் முன் நிற்கும் இளைஞர்களே

எந்தன் வாழ்த்து உங்களுக்கே

இன்று உங்களில் ஒருவர்தான்

இந்தக்காட்டின் மந்திரியாய்

வந்திட போட்டிகள் பலவுண்டு

வலியவர் ஜெயித்திட வழியுண்டு’ என்று வாழ்ந்து கூறிவிட்டு போட்டியை அறிவித்தது.

இதோ என் கையில் ஒரு கைத்தடி உள்ளதல்லவா? இதில் தலைப்பாகம் எது? வேர் பாகம் எது? என சரியாக கண்டுபிடிப்பவரே வென்றவராக கருதப்படுவார் என முதல் போட்டியினை அறிவித்தது.

முதலாவதாக வந்த காட்டெருமை கார் வண்ணன் அந்தக் கைத்தடியை கையில் எடுத்து சுவைத்துப் பாhத்து விடை சொல்ல முயன்றது. அது கூறிய விடைக்கு பதிலினை மந்திரியார் குறித்து வைத்துக் கொண்டார்.

பின்னர் கரடி காளி அந்தக் கைத்தடியினை கைகளில் வாங்கியது. அதை தரையில் தட்டிப் பார்த்து அதன் தன்மையை கண்டறிய முயன்றது. அது கூறிய பதிலினையும் மந்திரியார் குறித்து வைத்துக் கொண்டார்.

பின்னர் பூனை பொன்னையன் அந்த தடியினை தனது கைகளில் வாங்கியது. அதை அருகிலிருந்து அறைக்குள் எடுத்துச் சென்றது. சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தது. அது கூறிய பதிலையும் மந்திரியார் குறித்து வைத்துக் கொண்டார்.

இறுதியாக அந்த தடியினை கையில் எடுத்த குட்டி நரி நந்திவர்மன் சபையோரை பார்த்து பேச ஆரம்பித்தது.

‘காட்டில் வாழும் பெரியோரே

கனிந்த உள்ளம் கொண்டோரே

இந்தப் போட்டியின் விடைகாணும்

வழிதனை நானும் கூறுகிறேன்

சரிதான் என்றால் நீவீரே

எனக்கு வெற்றியை தருவீரா’ எனக் கேட்டதும் அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

 

‘இந்தத்தடியினை நீரினுள்

இட்டு வைத்துப் பார்த்திட்டால்

வேரின் பாகம் சற்று மூழ்கிடுமாம்

சரியாய் இருந்தால் நீவீரே

எனக்கே வெற்றியை தந்திடுவீர்’ என்று விடைகாணும் வழிமுறையினை நரி நந்திவர்மன் கூறியதும் அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

ஆனாலும் சற்று முன்னர் போட்டியில் கலந்து கொண்டவர்களில் பூனை பொன்னையன் கூறிய பதிலும் நரி நந்திவர்மனின் வழிமுறைப்படி கண்டறிந்த பதிலும் ஒன்றாக இருந்ததினால் மந்திரியான நரசிம்மன் நரியார் இருவரும் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

இந்த போட்டியில் இருவரும் வென்றதனால் இருவருக்கும் மற்றொரு போட்டியினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புதிய போட்டியினை அறிவித்தது. யாரும் அடிக்காமலேயே ஒலி வரும் மேளம் ஒன்றை செய்பவர் எவரே அவரே வென்றவராவார் எனவும் இரு நாட்களில் மேளத்தை சபைக்கு கொண்டு வரவேண்டும் எனவும் கூறிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தது.

உடனடியாக அங்கிருந்து வெளியேறிய நரி நந்திவர்மன் அருகிலிருந்த நகரபகுதிக்கு சென்று அங்கு மேளம் செய்யும் ஒருவரை அணுகியது.

‘ஐயா! பெரியவரே! எனக்கு யாரும் அடிக்காமலேயே ஒலி வரும்படியான மேளம் ஒன்றை செய்து தாருங்களேன். உங்களின் உதவியால் நான் காட்டில் மந்திரியாகிவிடுவேன்’ என்று கெஞ்சியது.

அதற்கு அவரும் மேளம் செய்யலாம். யாரும் அடிக்காமலேயே ஒலி வரச் செய்ய என்னால் இயலாது. தொந்தரவு செய்யாமல் சென்று விடு என நரி நந்திவர்மனை விரட்டிவிட்டார்.

பூனை பொன்னையனோ யோசனை செய்தபடியே மெல்ல அரண்மனையை விட்டு வெளியே வந்தது. அருகிலிருந்த ஒரு பெரிய மரத்தில் சாய்ந்து யோசித்தது. திடீரென ஒரு துள்ளலோடு எழுந்து நாட்டு பகுதிக்கு ஓடத் தொடங்கியது.

நகரப்பகுதிக்குள் நுழைந்த பொன்னையனோ அந்த மேளம் செய்பவரை அணுகியது.

‘ஐயா பெரியவர் நல்லவரே!

அடியேன் பூனை பொன்னையன்

காட்டில் எனக்கு போட்டியொன்று

வென்றிட எனக்கும் ஆசையுண்டு

எனக்கென சிறிய மேளம் ஒன்றை

செய்தே நீவி; தந்திட்டால்

நானே வெல்லவும் வழியுண்டு

நன்மைகள் பெறவும் வழியுண்டு’ என்றது.

 

அவர் ஏற்கனவே நரியின் கோரிக்கையை கேட்டு கோபத்துடன் விரட்டியவர் அல்லவா?

தானே ஒலிக்கும் மேளம் தானே

என்னால் செய்திட இயலாதே

வீணே எனக்கு தொல்லைகள்

தந்திடாது விலகிச் செல்’ என்று கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டார்.

பூனை பொன்னையன் மீண்டும் அவரிடம் கெஞ்சியது. எனக்கு மேளம் மட்டும் செய்து தாருங்கள் அதன் ஒரு பகுதி திறந்தபடி இருக்குமாறு தாருங்கள் அது போதும் என்றதும்
அவரும் உடனடியாக ஒரு புறம் திறந்த நிலையில் ஒரு மேளத்தை செய்து அதனிடம் கொடுத்தனுப்பினார்.

 

ஒரு புறம் திறந்த நிலையிலிருந்த மேளத்தை பெற்றுக் கொண்ட பூனை பொன்னையன்

காட்டுக்குள் சென்றது. ஒரு பெரிய மரத்தினுள் ஏறி அந்த மேளத்தினுள் எதையோ

போட்டு அதன் பின் அதன் திறந்த பகுதியை மூடி கையில் எடுத்துக் கொண்டு

அரண்மனைக்கு விரைந்து சென்றது.

‘யாரும் அடிக்காது ஒலியெழுப்பும்

அற்பத மேளம் பாருங்கள்

வாருங்கள் வந்து பாருங்கள்

வெற்றியை எனக்கே தாருங்கள்’ என அனைவரையும் அழைத்தது.
ஆம்! அது கூறியபடியே அந்த மேளம் யாரும் அடிக்காமலேயே ஒலியை தந்து கொண்டிருந்தது.

மன்னர் முதலாக அனைவரும் வியந்தபடியே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த நரி நந்திவர்மன் தனது தோல்வியை ஒப்புக் கொண்டது.எனவே பூனை பொன்னையன் அக்காட்டின் வருங்கால மந்திரியாக தேர்வு செய்யப்பட்டது.
மேலும் எப்படி செய்தாய் என்பதை அனைவருக்கம் தெளிவாக கூறு என அரசர் ஆணையிட்டார்.

பூனை பொன்னையன் தான் நகரத்தினுள் சென்று மேளம் செய்பவரிடம் ஒரு புறம் திறந்தபடி இருந்த மேளம் பெற்றதையும் அதன் வழியாக தேன்கூடு ஒன்றை போட்டு மெழுகால் அதனை அடைத்ததையும் கூறியது.

தேன் மெழுகால் அடைக்கப்பட்ட கூட்டினை தேனீக்கள் தட்டி தட்டி பறப்பதால் தான் தானே ஒலிக்கும் மேளம் உருவானது என பூனை பொன்னையன் கூறியதும்
அனைவரும் அதனை பாராட்டியது வருங்கால மந்திரிக்கு ஏற்ற ஆள்தான் என எல்லோரும் ஒத்துக்கொண்டனர்.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.