நாட்டுக்குள்ள தீபாவளி நாளு வருதாம் – அதில்
நம்மளோட பேரெல்லாம் சேர்ந்து வருதாம்
வேட்டைக்கார நரிவந்து சொல்லி போச்சுதென – அந்த
வேங்கை மகன் வரிப்புலி சொல்லி சிரிச்சான்
குட்டியானை உன்பேரால் ஒருவெடியாம் -அது
குண்டாக தும்பிக்கையோட இருக்காம்
எட்டியந்த கையில் தீயை பத்த வச்சாக்க –அது
எட்டு ஊரு கேக்கும்படி சத்தம் போடுமாம்
கொத்தும் பாம்பே உன்பேரால் ஒருவெடியாம் -அது
கோபத்தோட உன்போல சீறிஎழுமாம்
கட்டை குரல் தவளையே உனக்கொன்றாம் -அது
கச்சிதமாய் தாவித்தாவி செல்லும் வெடியாம்
கூட்டுடனே வாழுகின்ற நத்தை மாமாவே – உங்க
கூடுபோல வாலுடனே சக்கர வெடியாம்
சேட்டை செய்யும் குரங்கிவன் வாலைப்போலவே – அந்த
சாட்டை யெனும் வெடியும் செஞ்சிருக்குதாம்
புட்டுபுட்டு உள்ளதையே சொன்ன வேங்கையை – சில
போதும் போதும் நிறுத்துஎன கோபம் கொண்டன
காட்டெருமை கூட்டம்கூட கோபம் கொண்டது – அதை
கண்டவுடன் மான்களெல்லாம் ஓட்டமிட்டது
காட்டுக்குள்ள வாழுகின்ற நம்ம பேரால –அங்க
கண்டபடி வெடிக்கிற வெடி எதுக்காம்
ரெட்டைவாலுக் குருவியும் மேலே சொன்னதாம் – அதை
ரெண்டுல ஒன்னு பார்த்திடத்தான் வேண்டுமென்றதாம்
விட்டுடுங்க அதையெல்லாம் மறந்திடுங்க –என
வெள்ளைமுயல் அப்போது பேசலானது
குட்டிசெல்லம் வெல்லக்கட்டி போல பிள்ளைங்க –நம்ம
பேரைக் கொண்ட வெடிகளை விரும்புறாங்க
மொட்டுபோல சிரிக்கும் சுட்டிப்பிள்ளைங்க – மனம்
முழுதாய் மலர்வதும் நம்ம பேராலே
நட்டநடு காட்டில் வாழும் நம்மினத்திற்கே –அது
நன்மையென்று தீமையதில் இல்லை உண்மையே
குட்டிமுயல் சொல்லக்குட்டி எல்லாம் மகிழ – அவை
கொண்டாட நினைத்தன தீபாவளியை
கூட்டிவாங்க குழந்தைகள் கூட்டத்தினையே –சேர்ந்து
கொண்டாட வேண்டும் இந்த தீபாவளியை
பாட்டுப்பாடி ஆட்டத்தோட காடே அதிர –நரி
பற்றவைத்த சரமொன்று வெடிவெடிக்க
ஓட்டுடனே அங்கு வந்த ஆமை பதற
ஓவென்ற சத்தத்தோட நாமும் சிரிப்போம்.
–இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942