காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 2

வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். நம் கல்விமுறையும் நிறைய மாறி விட்ட்து. எப்படி மாறி இருக்கிறது நம் கல்விமுறை?

நோக்கம் மாறிய கல்வி முறை

கல்வி கற்கின்ற ஒரு மாணவனின் தந்தையிடம்

“நீங்கள் ஏன் உங்கள் மகனை படிக்க வைக்கிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்டாலும்,

கல்வி கற்கின்ற அந்த மாணவனிடம்

“நீ ஏன் படிக்கிறாய்?”

என்ற கேள்வியைக் கேட்டாலும் இருவரின் பதிலும்

ஒரு நல்ல வேலைக்கு சென்று கை நிறைய பணம் சம்பாதிப்பதற்கு தான்” என்று வரும்.

“சரி! வேறு ஏதேனும் நோக்கங்கள் இருக்கிறதா?” என்று கேட்டால் அந்த காரணத்தையேதான் மீண்டும் சொல்வதை நாம் கேட்டிருப்போம்; கவனித்திருப்போம்.

ஒரு மாதத்திற்கு எவ்வளவு அதிகம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்ற சூழல் இருந்தாலும், பணத்தை மையப்படுத்தி மட்டுமே கல்வியின் நோக்கம் மாறியது ஏன் என்று தெரியவில்லை.

பணத்தை மட்டுமே மையப்படுத்தி நகர்த்தப்படுகின்ற இன்றைய மாணவர்களின் (நாளைய தலைவர்களின்) எதிர்காலம் எப்படி அமையும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

நமது வாழ்வியல் நடைமுறைக்கும் நாம் படிக்கின்ற கல்வி முறைக்குமான தொடர்பில் சிக்கல் என்றால், நமது எதிர்காலம் எதை நோக்கி பயணிக்கிறது என்பதை யோசியுங்கள்.

பள்ளிக் குழந்தைகளுக்கு A for Apple, B for Ball என்று சொல்லிக் கொடுத்து வருகிறோம். நல்லது தான்.

ஆனால்

A for Attitude,

B for Bold,

C for Courage

என்று எப்போது நாம் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?

என்று நமது மழலை கண்மணிகள் அழகாய் படித்த சமூகம் காத்த வரிகளுக்கும் அதன் அர்த்தத்திற்கும்,

என்று முடியும் என்ற இந்த பாடலுக்கான தமிழ் அர்த்தத்தையும் நாம் ஆழ்ந்து கவனித்தால், நமது முன்னோர்கள் சமூக மேம்பாடு குறித்து எப்படி யோசித்து இருக்கிறார்கள் என்பது நன்றாகவே புரியும்.

நோக்கம் மாறிய செலவு முறை

‘ஏன் படிக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் பதில் ‘கை நிறைய பணம் சம்பாதிப்பதற்கு’ என்று ஏற்கனவே கூறினேன் அல்லவா?

நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதிகம் சம்பாதிக்க வேண்டும். ஆனால், அந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதில் தான் வாழ்க்கையின் தத்துவங்கள் அமைந்திருக்கின்றன.

உங்கள் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் உள்கட்டமைப்புகள் போன்ற அனைத்திற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டப்பட்டு இருக்கும்.

ஆனால், அந்த இடத்தை பொதுப் பயன்பாட்டிற்கு தானமாக கொடுத்தது யார்? என்று கேட்டுப் பாருங்கள்.

பெரும்பாலும் அதற்கான பதில் கிடைக்காது.

தான் சம்பாதித்த பணத்தை தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் போக, சமூக பயன்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் நமது முன்னோர்கள் செலவு செய்திருக்கிறார்கள்.

அவர்களின் உயர்ந்த சிந்தனையில் வெளிப்பட்ட தாக்கத்தில்தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

‘இன்று நாம் சம்பாதிக்கும் பணம் பணம் எப்படி? எதற்காக? செலவு செய்யப்படுகிறது’ என்று யோசிப்போம்.

பணம் சம்பாதிப்பதின் நோக்கமும் அதை செலவு செய்யும் முறைகளின் தத்துவங்களும் முற்றிலுமாகவே மாறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

வரவு – செலவு – சேமிப்பு – சிக்கனம் என்பது வாழ்வின் தாத்பரியம்.

என்பது தான் நமது யதார்த்தம். அப்படிதான் நமது சமூக கட்டமைப்பும் இருந்தது.

செலவுகளின் மையமாக கருதப்படுகின்ற வீட்டு கஜானாவின் கொத்துச் சாவியை வைத்திருந்த பாட்டி, தனது முதல் மருமகளிடம் கொத்துச் சாவியைக் கொடுத்து ‘எனது பொறுப்பை முதல் மருமகளாகிய உன்னிடம் ஒப்படைக்கிறேன்’ என்ற சூட்சமத்தின் பின்னணியை நாம் மறந்து விட்டோம்.

அத்தகைய நடைமுறைகள் மாறியதால் செலவுகளின் கோட்பாடு ஒவ்வொரு குடும்பத்திலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு நீங்களும் நானும் மிகப்பெரிய உதாரணம்.

இதை தனியாக என்றாவது ஒருநாள் யோசிக்கும் போது, சிறுவயதில் நமது பாட்டியின் சேமிப்பும் சிக்கனமும் நம் நினைவுக்கு வருகிறது. அனைவரையும் அரவணைத்துச் சென்ற அவரது அன்பும் மனதை வருடிச் செல்கிறது.

[அடுத்த வாரம் சந்திப்போம்]

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408