நோக்கம் மாறிய நீர் இயல் கட்டமைப்பு
12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் வைகை ஆற்றங்கரையில் காணப்படுகின்றன. பாண்டிய மன்னர்கள் வகுத்த திறமையான நீர் மேலாண்மை முறை பற்றி பேசுகின்றன.
நீரின் பயனுள்ள பாதுகாப்பு, விநியோகம் மற்றும் மேலாண்மை குறித்து வரும்போது, காவிரி நதிக்கு குறுக்கே 1 ஆம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணையின் சிறப்பை என்னவென்பது?
பண்டைய தமிழ் ஆட்சியாளர்கள் பயனுள்ள நீர் மேலாண்மை அமைப்புகளைக் கொண்டிருந்தனர் என்பதை நிரூபிக்க பல வரலாற்று சான்றுகள் உள்ளன.
பழைய நாட்களில், நீர்நிலைகளின் பராமரிப்பிற்காக பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டன. இவை ஏரி வாரியம் (ஏரி பலகை) மற்றும் கலிங்கு வாரியம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தன.
கோடைகாலத்தில் நீர் பற்றாக்குறை பற்றி நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே கவலைப்படுகிறோம். ஆனால் நமது முன்னோர்கள் நீரை எவ்வாறு பயன்படுத்தினார்கள், நிர்வகித்தார்கள், பாதுகாத்தார்கள் என்று நாம் எப்போதாவது யோசித்து இருக்கிறோமா?
நீர் மேலாண்மையை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்கள் நமது முன்னோர்கள். ஆனால் அதை சரியாக பாதுகாத்து பயன்படுத்தி வருகிறோமா என்பது நமக்கு முன் நிற்கின்ற கேள்வி?
நமது முன்னோர்கள் விட்டு சென்ற சுமார் 34 நதிகள், 39,000 ஏரிகள், இரண்டு லட்சம் ஓடைகள் மற்றும் குளம், குட்டை, கண்மாய்கள் எல்லாம் எங்கே போயின?
20-ஆம் நூற்றாண்டு, எண்ணெய் வள பிரச்சனையை எதிர் கொண்டது போல் 21-ஆம் நூற்றாண்டு தண்ணீர் பிரச்சனையை எதிர் கொள்ளும் என்ற ஆராய்ச்சியாளர்களின் முழக்கம் இன்றாவது நமது காதில் விழுகின்றதா இல்லையா என்று தெரியவில்லை.
‘நீரின்றி அமையாது உலகு’ என்று உரத்துச் சொன்ன வள்ளுவனின் நினைவு சின்னமான வள்ளுவர் கோட்டம் நீர் நிலையை அழித்து அதன் மேல் தான் கட்டப்பட்டு இருக்கிறது என்ற வேதனையை யாரிடம் சொல்லி புலம்புவது?
கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான தண்ணீரை பெறுவது நமது கடமை. அதே நேரத்தில் நமது தமிழகத்தின் தண்ணீரை சரியாக பயன்படுத்துகிறோமா என்ற கேள்விக்கான பதிலை யாரிடம் இருந்து எதிர் பார்ப்பது?
தண்ணீர் – மனித பயன்பாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஆடு, மாடு, கோழி என அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான நீரை ‘மனிதனுக்கு மட்டும்’ என்ற கோட்பாடை யார் உருவாக்கியது?
அனைத்து அறிவியல் வல்லுநர்கள், பொருளாதார மேதைகள், சமூகவியல் சிந்தனையாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என் எல்லா அறிவு ஜீவிகளும் ஒன்றிணைந்து ஒரு டம்ளர் தண்ணீரை உருவாக்க முடியுமா?
ஏரிகளின் இருப்பிடத்தை அழித்து வேளச்சேரி, பொத்தேரி என மனித இருப்பிடமாக மாற்றியது சுற்றுசூழலுக்கு நாம் செய்யும் துரோகம் அல்லவா?
பல நாடுகள் உருவாகுவதற்கு முன்பே, மனிதனை மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலையும் நேசித்த, பாதுகாத்த பரம்பரையில் வந்தவர்கள் தமிழர்களாகிய நாம் என்பதை மறந்து விடக்கூடாது.
காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்றும்
ஓடி விளையாடு பாப்பா வரிகளில்
கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா – என்றும் சொன்னவன் பாரதி.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை”
என்ற திருக்குறளுக்கான பொருள்
‘இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்’.
“எனது நோய்க்கு மரத்தின் இலைகளும், காய்களும் பழங்களும் மருந்து என்றால் கொண்டு வாருங்கள். மரத்தை அழித்துத்தான் எனது நோய் குணமாக வேண்டும் என்றால் மரம் இருக்கட்டும்; நான் இறந்து போகிறேன்.” என்ற பொருள் பொதிந்த சங்க கால இலக்கிய பாடல்களின் வரிகள் இன்றைய தலைமுறையினருக்கு சொல்லப்பட்டாக வேண்டும்.
[அடுத்த வாரம் சந்திப்போம்]
முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408