ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் நெல்லூர் நகரின் புறநகர்ப் பகுதியில் மைய சாலையில் அமைந்திருந்த ‘அன்னபூர்ணா’ ஆசிரமத்தில் அன்று காலை கதிரவன் வானில் உதித்ததிலிருந்து அனைவரும் பரபரப்புடன் காணப்பட்டனர்.
நுழைவாயிலில் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆசிரமத்தில் இருக்கும் பெண்மணிகளும் பணிபுரியும் பெண்மணிகளும் வாசலிலும் கேட்டிற்கு வெளியேயும் பெரிய பெரிய கோலங்களைப் போட்டு அவற்றின் மீது வண்ணப் பூக்களைப் பரப்பி வைத்தனர்.
அந்த ஆசிரமத்தின் பொறுப்பாளர் ஒற்றை நாடி உருவம் கொண்ட பெரியவர் கோவிந்தன், கோலங்களைப் பார்த்து முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை .
ஆந்திரத்தில் புதிதாகப் பதவி ஏற்ற அமைச்சரவையின் அமைச்சர்களுள் ஒருவரான ‘பாபு ராவ்’ காரு அந்த ஆசிரமத்திற்கு சற்று நேரத்தில் வருகை தர உள்ளார் என்பதால் தான் இத்தனை ஏற்பாடுகளும் .
காலை எட்டு மணியளவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்கள் புடை சூழ , வாட்டசாட்டமான தேகம் கொண்ட நடுத்தர வயது நபரான அமைச்சர் பாபு ராவ் பாரம்பரிய உடை அணிந்து அங்கு வந்தார்.
பெரியவர் கோவிந்தன் ஆசிரமத்தின் தோட்டத்தில் பூத்த பூக்களைத் தொடுத்து உருவாக்கப்பட்ட மலர்மாலையை அமைச்சருக்கு அணிவித்து அவரை வரவேற்றார்.
அமைச்சர் மலர்ந்த முகத்துடன் “வணக்கம் எப்படி இருக்கீங்க!” என்று தமிழில் அவரிடம் பேசினார்.
ஆசிரமத்தின் உள்ளே சென்ற அமைச்சர் பாபு ராவ், அங்கு உள்ள சிறுவர் சிறுமியர் உடன் ‘கலகல’வென்று உரையாடினார்; பெரியவர்களுடன் அளவளாவினார்; பதின் பருவ சிறுவர் சிறுமியர் உடன் பேசிக் கொண்டே கேரம் போர்டு ஆடினார்.
அவருடைய கைபேசி ஒலித்துக் கொண்டே இருந்தது.
ஆரவாரத்தின் இடையே பேச முடியாத நிலையில் அவர் இருப்பதை அறிந்த பெரியவர் கோவிந்தன் அவரிடம் மாடியில் உள்ள அறைக்குச் சென்று பேசி விட்டு வரும்படி கூறினார்.
அமைச்சர் மாடிப்படி ஏற முற்பட்டபோது அவர் உடன் வந்த அவருடைய சகாக்களை அங்கேயே இருக்குமாறு கூறி விட்டு அவர் படிகளில் ஏறிச் சென்றார்.
சில நிமிடங்கள் கழித்து கீழே வந்த அமைச்சருக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் பத்திரிகை டி.வி. நிருபர்களுக்கும் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. காபி, தேனீர், பானங்கள் வழங்கப்பட்டன.
ஆசிரமத்தின் பிரார்த்தனைக் கூடத்தில் அந்த ஆசிரமத்தில் உள்ளவர்களும் உள்ளூர் மக்களில் சிலரும் பார்வையாளர்களாக குழுமி இருந்தனர்.
மேடையின் நாற்காலிகளில் பெரியவர் கோவிந்தனும் அமைச்சர் பாபு ராவும் அமர்ந்து இருந்தனர்.
உரை மேசை அருகே நின்று ஆசிரமத்தின் மூத்த பெண்மணி ஒருவர் அமைச்சரை தெலுங்கில் வரவேற்றுப் பேசினார்.
அமைச்சரை ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அழைத்தார். அமைச்சர் உரையாற்ற எழுந்து செல்லும் போது அந்தப் பகுதியின் ஆளும் கட்சிப் பிரமுகர் கே.ஆர்.நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தார்.
மேடையில் ஏறி அமைச்சருக்கு சால்வை அணிவித்து விட்டு அவரிடம் ஏதோ முணுமுணுத்தார்.
அமைச்சரின் முகம் மாறியது. கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கே.ஆரின் தோள்களில் தட்டிக் கொடுத்து விட்டு அமைச்சர் உரையாற்றச் சென்றார்.
அமைச்சர் ஒலி வாங்கி முன்னிலையில் தெலுங்கில் பேசத் தொடங்கினார்.
“ கோவிந்தன் காருவுக்கும் என்னை விட வயதில் மூத்தவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் வணக்கம்.
என்னை விட வயதில் இளையவர்கள் வாழ்வில் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்.
இன்று காலைப் பொழுதை உங்களுடன் செலவிட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
நான் பர்சனல் விஷயங்களை பொது இடத்தில் பேசுவது இல்லை. ஆனால் கே.ஆர்.காரு என்னைப் பேசும்படி வைத்து விட்டார்.
இந்த அன்னபூர்ணா ஆசிரமத்தின் பொறுப்பாளர் பெரியவர் கோவிந்தன் காரு யார் என்றால் சுமங்கலியாக போய்ச் சேர்ந்து விட்ட என்னுடைய அத்தையின் கணவர் .
எங்க அத்தை சென்னையில் பெரிய கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்த போது கோவிந்தன் காருவும் எங்க அத்தையும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
அத்தை, ஆதரவு அற்றவர்களுக்காக ஆசிரமத்தை நடத்த வேண்டும் என்று ரொம்ப வருடங்களாகவே சொல்லிக் கொண்டே இருந்தார்.
தமிழ்க் கவிஞர் பாரதியார் சக்தி தேவியிடம் ‘காணி நிலம் வேண்டும்!’ என்று கேட்டுப் பாடியதாக நான் படித்து இருக்கிறேன்.
அது போல் தான் எங்கள் அத்தை அன்னபூர்ணா காரு அவங்க அண்ணனான எங்கள் அப்பாகிட்ட ஆசிரமத்தை நடத்தும் நோக்கத்திற்காக இந்த வீட்டை கேட்டு வாங்கினார்.
அவருடைய திட்டம் அவருடைய வாழ்நாளில் நிறைவேறவில்லை. ஏன் என்றால் புற்று நோய் அவருடைய வாழ்நாளை முடித்து விட்டது.
பெரியவர் கோவிந்தன் காரு மனைவியின் பிரிவால் மனம் தளர்ந்து போகாமல் எங்கள் அத்தை அன்னபூர்ணா காரு பெயரிலேயே என்னுடைய தந்தையார் கொடுத்த இடத்தில் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.
கே.ஆர்.காரு, இவர்களுக்கு வேறு இடம் கொடுத்து விடலாம். ப்ரைம் லொகேஷனில் இருக்கும் இந்த மாளிகையை பெரியவரிடம் எடுத்துச் சொல்லி கை மாற்றி விட்டால் இடித்து பெரிய காம்ப்ளெக்ஸ் கட்டலாம் என்று கூறுகிறார்.
இந்த ஊரில் கமர்சியல் காம்ப்ளெக்ஸ்கள் நிறைய இருக்கின்றன.
இன்னொரு காம்ப்ளெக்சுக்காக இந்தப் பறவைக் கூட்டை இடம் மாற்ற வேண்டுமா? அலைக்கழிக்க வேண்டுமா?
நான் அப்படி செய்தால் தெய்வம் என்னை சும்மா விடுமா? என் அப்பாவின் ஆன்மாவும் அத்தையின் ஆன்மாவும் என்னை மன்னிக்குமா?
அதனால் கே.ஆர்.காரு இந்த எண்ணத்தை அவருடைய மனதிலிருந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்“
பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினர். பெரியவர் கோவிந்தன் நின்று கொண்டிருந்த அமைச்சரின் அருகில் வந்தார்.
கண்களில் கண்ணீர் துளிர்த்தபடி இருந்த அமைச்சரை ஆரத் தழுவிக் கொண்டார். பார்வையாளர்கள் இந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.
மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!