மகாபாரதத்தில் காண்டவ வன தகனச் சருக்கம் என்ற ஒரு படலம் வருகின்றது.
இந்திரனுக்குரிய காண்டவ வனத்தைத் தீக்கடவுள் உண்ணப் புகுந்தான்.
இந்திரன் மேகங்களை ஏவி தீயை அழித்து விட்டான். தீக்கடவுள் பல முறை முயன்றும் காண்டவ வனத்தை எரிக்க முடியவில்லை.
அக்கினித் தேவன், கண்ணனும், அர்ச்சுனனும் ஒன்றாக இருக்கும் போது அவர்களிடம் சென்று விண்ணப்பித்தான்.
அர்ச்சுனனும் கண்ணனுடைய அருளால் தன்னுடைய அம்புகளைப் பொழிந்து மழையைத் தடுத்து காண்டவ வனத்தை எரிக்க உதவினான்.
இச்செய்தியையும், வீமன் சமையல் சாத்திரம் உரைத்தவன் என்ற செய்தியையும், சங்க இலக்கியமான பதினெண் மேல்கணக்கு நூலாகிய பத்துப்பாட்டில் அடங்கிய சிறுபாணாற்றுப்படையில் காணுகின்றோம். இப்பாடலைப் பார்ப்போம்.
“கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் தன்முன்
பணிவரை மார்பன் பயந்த நுண் பொருட்
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்”
காண்டவ வனத்தை தீத்தேவனை உண்ணச் செய்த புகழோன் அர்ச்சுனன். அம்புகளைத் தாங்கிய துணியை தரித்தவனும், பூவேலைப்பாடுடைய ஆடையை தரித்தவனுமான அர்ச்சுனனுடைய அண்ணன், இமயமலை போன்ற பரந்த மார்பையுடைய வீமசேனன் எழுதிய சமையல் நுண்கலையினின்று பிறழாது சமைத்தப் பலவகைப்பட்ட உணவுகள் என்று வருகின்றதைப் பார்க்கின்றோம்.
அர்ச்சுனனின் அம்பறாத் தூணியை “கவர் கணைத் தூணி” என்று போற்றுவதை வில்லி புத்தூரார் “வடிக்கணை மாளாமல் துன்று தூணியும்” என்று வருணிக்கின்றார்.
வில்லிபுத்துரார் தன் பாரதத்தில் வீமன் சமையற் கலையில் சிறந்தவன் என்பதைக் காட்டுகின்றார்.
மாலைமுன் வணங்கி கங்கை மைந்தனை வணங்கி யாக
சாலையை நோக்கும் வேந்தன் தம்பியை நோக்கி முன்னீர்
வேலையின் மணலிற் சாலும் மிகுசனம் அருந்தத் தேவர்
ஆலயத்து அமுதம் அன்ன அடிசில்நீ அளித்தி என்றான்.
தருமன் கண்ணனை வணங்கி, பின்பு வீடுமனையும் வணங்கி, யாக சாலையைப் பார்த்தான்.
“கடற்பரப்பு மணலினும் அதிகமான மக்கள் நிறைந்துள்ளனர். அவர்களுக்கு அமுதத்திற்கு ஒப்பாக உணவு வகைகளை சமைத்துக் கொடுக்க வேண்டும்” என்று, தன் தம்பியாகிய வீமனிடம் கூறினார்.
மேலும் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் திருநின்றவூர் திவ்விய தேச மங்களாசாசனத்தில்
“காண்டவத்தை கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே” என்று
கண்ணன், காண்டவ வனத்தை எரியூட்ட தீத்தேவனுக்கு உதவிய வரலாற்றை கூறுகின்றார்.
இவ்வாறு நம்முடைய பண்டைய வரலாற்றை சங்க இலக்கியங்களில் செய்திகளாகப் பார்த்துப் படித்துப் பரவசம் அடைகின்றோம்.
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 9444410450