‘மீனாட்சி சுந்தரம் இல்லம்’ என்று பெயரிடப்பட்ட அகலமான வராந்தாவுடன் கூடிய பெரிய வீடு.
மாலை நேரம் மாலை 5-மணி.
வயது அறுபத்து ஐந்தை கடந்த நிலையில், தன் மனைவி மீனாட்சிக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் தன் காதலை வெளிபடுத்த வேண்டும் என்ற ஆசை சுந்தரத்திற்கு நீண்ட நாளாக உள்ளது.
‘அதனை இன்றாவது நிறைவேற்றிட வேண்டும்’ என்ற எண்ணம் சுந்தரத்திற்கு தலைதூக்கியது. அதென்ன இன்று நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம்?
இன்று மீனாட்சியின் பிறந்த நாள் மற்றும் இருவருக்கும் திருமண நாள். மீனாட்சிக்கு பிறந்தநாள் மற்றும் திருமணநாள் பரிசாக இந்த கடிதம் இருக்க வேண்டுமென ஆசை சுந்தரத்திற்கு.
மனைவி மீனாட்சி மீதுள்ள காதலை வெளிபடுத்தும் ஆர்வத்தில், தன் கண்ணாடியை சரி செய்தபடி, பேனா மற்றும் பேப்பருடன் அந்த சாய்மான இருக்கையில் அமர்ந்து தன் நினைவுகளை எழுத ஆரம்பித்தார்.
அடுப்பாங்கரையை நோக்கி, “மீனாட்சி காபி கொண்டு வர்ரீயா?” என்று கேட்ட சுந்தரத்திற்கு பதில் இல்லை.
அதை கண்டு கொள்ளாமல் கடிதம் எழுத ஆரம்பித்தார் சுந்தரம்.
“என்னவளே மீனாட்சி!
தாயுமானவளே!
இன்றுடன் உன் கரம் பிடித்து , நாற்பது வருடம் கடந்து விட்டது. நாற்பது வருடமும் எனக்காகவும், என் பிள்ளைகளுக்காகவும் மட்டும் தானே வாழ்ந்தாய்.
உனக்காகவோ உன் ஆசைக்காகவோ வாழாமல், நம் குடும்ப நலனை கருத்தில் கொண்டு வாழ்ந்தவளே!
உன் ஆசை என்ன என்று இதுவரை கூட நான் கேட்டது இல்லை. காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்க செல்லும் வரை குடும்பத்திற்காகவே ஓடி கொண்டு இருக்கிறாய்.
நான் எஜமானனாகவும், நீ எனக்கு சேவை செய்ய வந்த சேவகியாகவும் தானே நடத்தினேன். உனக்கு ஒரு நாளும் விடுமுறை இல்லை. எந்நாளுமே வேலை தான்.
என் வயது கூட கூட என் மீதான அக்கறை உனக்கு அதிகமானது. நேரத்திற்கு எனக்கு அளவான சாப்பாடு, தகுந்த மருந்து, அளவான உறக்கம் என அலாரம் மாதிரி அந்தந்த நேரத்திற்கு கொடுப்பாய். நீ சோர்வாக இருந்தாலும் அதனை என் கண் முன் காட்டியது இல்லை.
மகன் மற்றும் மகளின் திருமணத்திற்கு பின் வெளிநாடு வேலைக்கு அனுப்புவதில், உனக்கு ஆசை இல்லை என்ற போதிலும் பிள்ளைகளின் ஆசைக்காக ஒத்து கொண்டு, தினமும் அவர்களின் பிரிவை நினைத்து நீ படும் வேதனையை நான் அறிவேன்.
எங்களை கவனிப்பதிலே உன் ஆயுள் முடிந்திடும் போல என்று நான் கூறும் போது , ‘இதைவிட வேறு என்ன சந்தோசம் எனக்கு இருக்கு ‘ என்று நீ சொல்லும்போது, உன்னிடம் தோற்று போனவனாக உன் முன் நிற்பேன்.
இதுவரை உன்னிடம் நான் இதனை சொன்னதும் இல்லை; வெளிபடுத்தியதும் இல்லை.
மீனாட்சி ஐ லவ் யூ ! நான் உன்னை மனதார காதலிக்கிறேன்.
இப்படிக்கு,
உன் மேல் உண்மையான பாசமுள்ள கணவன்
வெட்கத்துடன் கடிதம் எழுதி கொண்டு இருந்த சுந்தரத்தின் காதில் அலாரம் சப்தம்.
அலாரத்திலிருந்து மாலை 6 மணி என்று குரல் ஒலித்தது.
அந்த குரல் தான், மீனாட்சி தன்னுடன் இல்லை என்பதை, சுந்தரத்திற்கு அவ்வப்போது உணர்த்தி கொண்டு இருக்கும்.
மீனாட்சியின் வேலையை, தற்போது இந்த அலாரம் தான் செய்து வருகிறது.
எழுதிய கடிதத்தை, மனைவி மீனாட்சி புகைப்படத்தின் முன் வைத்து கண் கலங்கியவாறு நின்றார் சுந்தரம்.
“நீ என் கூட இருக்கும் வரை உன் அருமை தெரியாமல் இருந்திட்டேன். உன் அருமை தெரியும் போது, நீ என் கூட இல்லை “
கண்களிலிருந்து வந்த கண்ணீர் கடிதத்தை நனைத்து கொண்டு இருந்தது.
இப்படி தான் பலர், தன் காதலை அவர்கள் இருக்கும் வரை வெளிபடுத்தாமலோ, வெளிபடுத்த தெரியாமலோ உள்ளனர்.
அவர்கள் இல்லை என்ற நிலையில் மனம் உருகுவதை தவிர வேறு வழி இல்லை.

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104