காதார் குழையாடப் பைம்பூண் கனலாடக்

காதார் குழையாடப் பைம்பூண் பாடல் விளக்கம்

காதார் குழையாடப் பைம்பூண் கலனாட என்ற இப்பாடல், திருவெம்பாவையின் பதினான்காவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை பாடலை திருவாதவூராராகிய மாணிக்கவாசகர், கொன்றைப் பூவினை அணிந்துள்ள இறைவரான சிவபெருமான் மீது பாடினார்.

கி.பி. 9-ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற பழம்பெரும் பாடலான திருவெம்பாவை பாடல், இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது பாடப் பெறும் சிறப்பினைப் பெற்றுள்ளது.

பாவை நோன்பிருக்கும் பெண்கள், நீராடுகையில் பிறவியின் வெப்பத்தை நீக்க, முதலும் முடிவுமாகவும் இருக்கும் சிவபிரானின் திருவடிகளையும், சிவஞான அமிர்த்தை அளிக்கும் உமையம்மையின் திருவடிகளைகளையும் போற்றுவோம் என்பதாக திருவெம்பாவையின் பதினான்காவது பாடல் கூறுகிறது.

“வேதமாகவும், அதன் பொருளாகவும், முதலும் முடிவும் இல்லாமல் பரஞ்சோதியாகவும் உள்ள இறைவனின் திருவடிகளையும், நம்மீது கருணை கொண்டு ஞானம் அளிக்கும் உமையம்மையின் திருவடிகளையும் போற்றி நீராடுவோம்.” என்று பாவை நோன்பிருக்கும் பெண்கள் கூறுகின்றனர்.

பிறவித்துன்பம் நீங்க முதலும் முடிவும் இல்லாத இறைவனையும், அவனின் கருவியாகிய உமையம்மையையும் நீக்கமற சரணடைதல் வேண்டும் என்று இப்பாடல் விளக்குகிறது.

இனி திருவெம்பாவை பதினான்காவது பாடலைக் காண்போம்.

திருவெம்பாவை பாடல் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாமாடச்

சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்

பாதத் திறம்பாடி ஆடோலோர் எம்பாவாய்

விளக்கம்

பாவை நோன்பிருக்கும் பெண்கள் குளத்தில் நீராட வருகின்றனர். “பெண்களே, நம் காதுகளில் அணிந்துள்ள தோடுகள் ஆடவும், உடம்பில் அணிந்துள்ள பசும்பொன்னால் ஆகிய ஆபரணங்கள் ஆடவும், கூந்தலில் சூடியுள்ள மலர்கள் ஆடவும், அந்த மலர்களில் மொய்க்கின்ற வண்டுகள் ஆடவும் குளிர்ந்த நீரில் நீராடுவோம்.

அவ்வாறு நீராடுகையில் சிற்றம்பலத்தில் உலக உயிர்களின் நன்மைக்காக நடனமாடும் ஆடலரசனைப் போற்றுவோம்.

வேதமாகவும், வேதத்தின் பொருளாகவும் விளங்குகின்ற சிவபெருமானையும், ஒளிவடிவாய் திகழ்கின்ற அவருடைய மேன்மையையும் பாடுவோம்.

மேலும் இறைவனின் அடையாளமாகத் திகழும் கொன்றை மாலையைப் பாடுவோம். எல்லா உயிர்களுக்கும் முதன்மையாகவும், முடிவில்லாத தன்மையுடன் விளங்கும் இறைவனைப் புகழ்ந்து பாடுவோம்.

உலக உயிர்களுக்கு அவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு, சிவஞான அமிர்தத்தை அளித்து பாதுகாக்கும் வளையல்கள் அணிந்த திருக்கரங்களைக் கொண்ட, உமையம்மையின் திருவடிகளை புகழ்ந்து பாடி நீராடுவோம்.” என்று கூறுகின்றனர்.

பிறப்பின்மை வேண்டுமெனில் முதலும், முடிவும் இல்லாமல் பரஞ்சோதியாகத் திகழும் இறைவனையும், சிவஞான அமிர்தத்தை வழங்க வல்ல இறைவியையும் தூய மனத்துடன் வழிபட வேண்டும் என்று இப்பாடல் கூறுகிறது.

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.