காது குத்தியது – மங்கம்மாள் பாட்டி

நான்காவது நாள் காலையில் மங்கம்மாள் பாட்டி மற்றும் கனி என இரு பெண்களும் தனத்தின் வருகைக்காக அம்மையப்புரத்தின் ஆலமரத்தின் அடியில் காத்திருந்தனர்.

தனம் வந்ததும் மூவருமாகச் சேர்ந்து கடலைக் காட்டினை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

அப்போது மங்கம்மாள் பாட்டி தனத்திடம், “யம்மா, இவ என்னோட பக்கத்து வீடு. சின்ன வயசிலேயே நாங்க ரெண்டு பேரும் ஒரே ஊரச் சேர்ந்தவகதான். எங்க ரெண்டு பேரையும் அம்மையப்புரத்துல இருந்தவுகளுக்கு கட்டிக் கொடுத்துட்டாக.” என்றாள்.

“அப்படியா பாட்டி! இவகள ஏற்கனவே எனக்குத் தெரியும். கடலைக் காட்டுக்கு களையெக்க வந்திருக்காக. கடலையெடுக்க நீங்க ஏன் வரல?” என்று கனியிடம் கேட்டாள் தனம்.

“மக ஊர்ல திருவிழான்னு போயிட்டேன்மா. நேத்து சாயங்காலந்தான் வந்தேன். மாடசாமி ராத்திரிதான் தகவல் சொல்லிச்சு. அதான் காலம்பற மங்கம்மாளோட வந்திட்டேன்.” என்றாள் கனி.

“நேத்திக்கு பிடுங்கின கடலைச் செடியில ஒட்டியிருக்கிற கடலைய எடுக்குறதில பாதிய முடிச்சிட்டோம். இன்னிக்கு மீதமுள்ள கடலைய எடுக்கணும்.” என்றாள் தனம்.

“சரிம்மா, நானும் மங்கம்மாளும் சேர்ந்து முடிச்சிடுறோம்” என்றாள் கனி.

அப்ப மங்கம்மாள் பாட்டி சப்பாத்திகள்ளிச் செடியை உற்றுப் பார்த்தாள்.

“என்னத்த அப்படி உத்துப் பாக்குற? சப்பாத்திக் கள்ளிதான அது?” என்றாள் கனி.

“இந்த சப்பாத்திக் கள்ளிய மறக்கவே முடியாதும்மா. இது இல்லனா நாங்க காது குத்திருக்கவே மாட்டோம்.” என்றாள் கனி.

“ஏன் என்னாச்சு?” என்றாள் தனம்.

ம‌ங்கம்மாள் பாட்டி பேசத் தொடங்கினாள்.

“இப்ப எல்லாத்துக்கும் ஒருபுள்ள, ரெண்டு புள்ள தான். அதனால காது குத்தெல்லாம் தடபுடலா வைக்காக. அந்த காலத்துல ஏழு புள்ளைக எட்டு புள்ளைக இருக்கும்.

இப்ப மாதிரி பண வசதியெல்லாம் அப்ப கிடையாது. அதனால அந்த காலத்துல விருந்து விழாக்கள் எல்லாம் ரொம்ப வசதி படைச்சவங்க வீட்ல தான்.

என்கூடப் பிறந்தவக ஏழு பேரு. நாலு பொம்பளை. மூணு ஆம்பிளை. கனிகூடப் பிறந்தது எட்டு பேரு. ஆறு பொம்பளை. இரண்டு ஆம்பிளை.

எனக்கு எட்டு வயசு இருக்கும். கனிக்கு ஆறு வயசு இருக்கும். நம்ம சேத்தூரு வழியாப் போற சிமிண்ட் ரோடு வேல முதன்முதலா அப்பத்தான் நடந்துச்சு. எங்க ஊர்லயிருந்து சிமிண்ட் ரோடு வேலைக்கு போவாக.

நாங்க ரெண்டு பேரும் ரோடு வேலைக்குத் தண்ணி எடுத்து ஊத்துறதுகாகப் போவோம். எங்ககூட நிறையப் பேர் வேலைக்கு வந்தாக. அதுல கனியோட பெரியம்மா மக சொர்ணமும் ஒருத்தி. அவளுக்கு என்னோட ஒரு வயசு அதிகம்.

எங்ககூட வேலைக்கு வந்த நிறைய பேரு வீட்ல வறுமை. அதனால வீட்ல காது குத்தி கம்மல் போட வக்கில்லை. ஆனா எங்களுக்கு காது குத்த ஆசை.

ரோடு வேலைக்குப் போனப்ப எங்ககூட வேலைக்கு வந்த சொர்ணம் ஒருநாள் சப்பாத்திக் கள்ளியில இருந்து பெரிய முள் ஒன்ன ஒடிச்சா. ‘ஏய், கனி இங்க வா’ன்னு கூப்பிட்டா.

கனியும் அவ பக்கத்துல போயி நின்னா. ‘உனக்கு காது குத்தனும்தானே. உன் காத காட்டு. நான் குத்துறேன்னு’ சொன்னா. பிறகு கொண்டு வந்திருந்த வேப்பங் குச்சிய சிறிசா ஒடைச்சி வச்சுக்கிட்டா.

கனியும் ஆசையில காத காட்டினாள்.

முதல்ல வலது காது மடல தடவினா. பின்ன காது மடல்ல தண்ணியத் தொட்டு வைச்சிட்டு சப்பாத்திக் கள்ளி முள்ளால அழுத்தினாள்.

வலியால கனி மூச்ச சுளிச்சா.

‘பொறுத்துக்கோ கனி’ன்னு சொல்லிட்டு இன்னும் அழுத்தினாள்.

காதுல ஓட்டை விழுந்திடுச்சு. உடைச்ச வேப்பங் குச்சியை காது ஓட்டையில சொருகி விட்டா.

இன்னொரு காதுலயும் ஓட்ட போட்டு வேப்பங் குச்சியை சொருகி விட்டா. கனிக்கு ரெண்டு கண்ணுலையும் கண்ணீரு முட்டிக்கிட்டு வந்திருச்சு.

‘அழாத. இன்னைக்கு மட்டும் அடிக்கடி வேப்பங்குச்சி வெளியே வந்திடாம கவனமா லேசா சுத்தி விடு. இல்லையான ரத்தம் உறைஞ்சு வேப்பங்குச்சி காதோட ஒட்டிக்கும்.

நாளைக்கு காலையில காது ஓட்டையில தேங்காய் எண்ணெயைத் தொட்டுப் போடு. புண்ணு இருந்தா ஆறிடும்.

எக்காரணத்தக் கொண்டும் வேப்பங்குச்சியை மட்டும் எடுத்திராத. ஓட்டை தூந்திரும்.’ன்னு சொன்னா சொர்ணம்.

‘நீ ஏற்கனவே வேப்பங்குச்சியை கொண்டு வந்தியா?’ன்னு கேட்டேன்.

அவ அதுக்கு ‘நான் மூனு நாளா சப்பாத்திக்கள்ளி முள்ள கவனிச்சிக்கிட்டுதான் வந்தேன். திடீருன்னு ஒருயோசனை. நம்மளா காது குத்தினா என்னன்னு. அதான் காலையில வேலைக்கு வரயில வேப்பங்குச்சிய பிடுங்கிட்டு வந்தேன்னு சொன்னா.’

கனிக்கு காது குத்தினதப் பார்த்ததும் எங்ககூட வந்த மத்த பொம்பளப் பிள்ளைகளும் அவகளுக்கு காது குத்திவிடச் சொன்னாக. எனக்கு மட்டும் பயமா இருந்திச்சு.

‘இன்னைக்கு முதல் தடவைங்கிறதுனால நாலு வேப்பங்குச்சியத்தான் கொண்டு வந்தேன். தீர்ந்திருச்சு. நாளைக்கு இன்னும் கொஞ்சம் வேப்பங்குச்சியக் கொண்டு வந்திட்டு ரெண்டு ரெண்டு பேருக்கா காது குத்தி விடுறேன்னு’ சொர்ணம் சொன்னா.

சாய்ந்தரம் வீட்டுக்குப் போனதும் கனியிட்ட எங்கம்மா, ‘என்னத்தா இது. யாரு காது குத்தி விட்டா?’ன்னு கேட்டுச்சு. நான் நடந்ததச் சொன்னேன்.

‘இராமாத்தா மவளுக்குத் தைரியம் தான். சரி எப்படியோ செலவு மிச்சம்.’ன்னு எங்கம்மா சொல்லிச்சு.

மறுநாளும் வேலைக்குப் போகையில சொர்ணம் சப்பாத்தி கள்ளியில பெரிய முள்ளா நாலப் பிடுங்கினா.

‘ஏய் கனி, நான் எப்படி இவகளுக்கு காது குத்துறேன்னு பாரு. நீயும் அதே மாதிரி எனக்கு நல்லா காதக் குத்திவிடனும் சரியான்னு?’ கேட்டா.

‘சரி நீ காதக் குத்து. நான் பாத்துக்கிட்டு அதே மாதிரி உனக்கு குத்துறேன்னு’ சொன்னாள் கனி.

குச்சியின் ஒருமுனை லேசா ஊசியா இருக்குறாப்பல வேப்பங்குச்சியை சிறிசா உடைச்சா சொர்ணம்.

முத ஒருத்திக்கு வலது காது மடல கையால தடவினா.

‘பாரு இவ காது ரொம்ப பிஞ்ஞா இருக்கு. காது மடல் மையத்துல ஏதாவது நரம்பு இருக்கான்னு தடவிப் பாக்கனும். அப்படி இருந்தா கொஞ்சம் தள்ளி ஓட்ட போடனும்.

இவ காது மடல் மையத்துல நரம்பு ஏதும் கைக்கு தட்டுப்படல. அதனால மையத்துல கொஞ்சம் தண்ணிய வைச்சிட்டு தண்ணிக்கு மேலே சப்பாத்திக்கள்ளி முள்ல வைச்சு முதல லேசா அழுத்து. அப்புறம் அழுத்தத்த அதிகரிச்சிட்டுப்போ. காதுல ஓட்டை முழுசும் விழுந்திரும்.

காதுல இருந்து சப்பாத்திக்கள்ளி முள்ள முழுசா எடுத்திடாம லேசா முனையில இருக்குறப்போ, ஊசியா இருக்கிற வேப்பங்குச்சியப் பகுதிய காது மடலோட முன்னம்பகுதியில விட்டு அழுத்திக்கிட்டே போயி சப்பாத்திக்கள்ளியோட முள்ள வெளிய தள்ளிரு. கொஞ்சம் கவனமா இதச் செய்யணும். சரியா?’ன்னு கேட்டா.

அதுக்கப்புறம் அவ சொன்ன மாதிரி காதக் குத்தினா. நான் ரொம்ப கவனமா கவனிச்சுக்கிட்டு இருந்தேன்.

‘வர்ற தேர்திருவிழா வரைக்கும் காதுல வேப்பங்குச்சியை பத்திரமாப் பாத்துக்கோங்க. திருவிழாக் கடையில பித்தளை கம்மல் விக்கும். அத வாங்கி காதுல போட்டிட்டா. காதுல ஓட்டை எப்பயும் மறையாது.’ன்னு சொர்ணம் சொன்னா.

‘திருவிழாக் கடையில கம்மல் வாங்க காசுக்கு எங்க போறதுன்னு?’ மங்கம்மா கேட்டா.

அதுக்கு சொர்ணம் ‘நிதம் கூலி வாங்கிக்கிட்டு போய் வீட்ல குடுக்கையில ஒரு ஓட்டைத் துட்டைக் கேட்டு வாங்கி சேத்து வைச்சா திருவிழாக்கடையில கம்மல், வளையல், குப்பி, ரிப்பன்னு வேணுங்குறத வாங்கிக்கலாம்’ சொன்னா.

‘சரி வீட்ல கேட்டுப் பாப்போம். துட்டுக் குடுத்தா நல்லது. அடி குடுத்தா?’ன்னு நான் கேட்டேன்.

அதுக்கு சொர்ணம் ‘கம்மல் போடனும்முன்னு ஆச இருந்தா கேளு.’ன்னு சொன்னா.

அன்னைக்கு ரெண்டுபேத்துக்கு காது குத்தினா சொர்ணம்.

அதுக்கு அடுத்து வந்த ஐந்து நாட்களில் ரெண்டு ரெண்டு பேருக்காக மொத்தம் பத்து பேருக்கு காது குத்திவிட்டா சொர்ணம்.

கடைசியா நானும் சொர்ணமும் மட்டும் காது குத்தாம இருந்தோம். மறுநாள் எனக்கு சொர்ணமும், சொர்ணத்துக்கு கனியும் காது குத்திவிட தீர்மானம் போட்டாச்சு.

மறுநாள் காது குத்துறத நினைச்சாலே எனக்கு ரொம்ப பயமா இருந்திச்சு. ஆனா மத்த எல்லாரும் காது குத்தியதை எண்ணையில எனக்கும் காது குத்த ஆசையா இருந்துச்சு.

கடைசியா ஆசை பயத்தை வெல்ல காது குத்த நான் முடிவு பண்ணினேன்.

காலையில சொர்ணத்துக்கிட்ட ‘மெதுவா குத்திவிடு’ன்னு சொன்னேன்.

‘நீ ஆடாம அசையாம நான் சொல்லறபடி அப்படியே இரு. வலிக்காம நான் குத்திவிடுறேன்னு’ சொர்ணம் சொன்னாள்.

ஒருவழியா சொர்ணம் எனக்கு காது குத்தி வேப்பங்குச்சிய சொருகிவிட்டா.

கனியும் சொர்ணத்துக்கு நல்லபடியா காது குத்தி வேப்பங்குச்சியப் போட்டா.

நான் அன்னைக்கு வேப்பங்குச்சி வெளியே வந்திராம லேசா அடிக்கடி சுத்தி விட்டேன். காலையில தேங்காய் எண்ணைய தொட்டு வேப்பங்குச்சி மேலே போட்டேன். எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்திச்சு.’ன்னு மலரும் நினைவுகளை அசை போட்டாள் மங்கம்மாள் பாட்டி.

( பாட்டி கதை தொடரும்)

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.