காத்திருக்கும் சுகம் – சிறுகதை

அன்று அந்த மேனிலைப் பள்ளி காலை வேளையிலேயே அமர்க்களப்பட்டது.

ப்ளஸ் ஒன் மாணவர்கள், ப்ளஸ் டூ முடிந்து பள்ளியை விட்டுச் செல்லும் மாணவர்களுக்காக பிரிவு உபசார விழா ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ப்ளஸ் டூ தேர்வுகள் துவங்க இன்னும் ஓரிரு தினங்களே இருந்தன.

“அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?” என மாணவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“கல்லூரிப் பட்டப் படிப்பு, பொறியியல், மருத்துவப் படிப்பு” என்றனர் சிலர்.

சிபாரிசின் பலத்தில் வேலை காத்திருப்பதாகக் கூறினர் மேலும் சிலர்.

பெற்றோருக்கு உதவியாக வியாபாரத்தில் ஈடுபடப் போவதாகக் கூறினர் மற்றும் சிலர். ஆனந்தமும் உற்சாகமும் அவர்கள் பதிலில் நிரம்பி வழிந்தன.

பெரும்பாலான மாணவர்கள் தங்கள் எதிர்காலம் பற்றிய கனவு தந்த உற்சாகத்தில் மூழ்கி எழுந்தது கொண்டிருந்தார்கள் என்பதைவிட, பள்ளிப் படிப்பிலிருந்து பெறப் போகும் விடுதலையை நினைத்தத படி, சமுதாயத்தில் இனி தாங்களும் ஓர் முதிர்ச்சி மிக்க ஆள் என்னும் நினைப்பில் மிதந்து கொண்டிருந்தனர்.

தேவேந்திரன் மட்டும் அமைதியாக இருந்தான். அவனிடமும் அதே கேள்வி கேட்கப்பட்டது. அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மௌனம் சாதித்தான். என்ன பதிலைக் கூறுவது?

மற்றவர்களுக்கு அவன் பதில் தராதது மௌனமாக மட்டுமே தெரிந்தது. ஆனால், தேவேந்திரன் மனதிற்குள் அந்த மௌனம், கடல் அலையை மிஞ்சும் விதத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

வசதியற்ற குடும்பச் சூழ்நிலையைச் சொல்வதா?

மேற்படிப்பு என்பது தன்னைப் போன்ற ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு ஒரு எட்டாக் கனியாக இருப்பதையா?

சுயதொழில் தொடங்கவோ, ஏதாவது வேலையில் சேரவோ சிபாரிசுக்கு எவரும் இல்லாமல் இருப்பதையா?

எதிர்பார்ப்புகளை மூலதனமாகக் கொண்டு, ஏதோ நம்பிக்கையுடன் நாட்களை ஓட்டி வந்து கொண்டிருந்ததே மிகப்பெரியதோர் நிம்மதியாக இருந்தது.

‘எதிர்பார்ப்புகள்’ நிறைவேறுகிற நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே உற்சாகமும் ஆரவாரமும், ஆனந்தமும்!

மற்ற மாணவர்களுக்கு ‘அந்த ஏதோ ஓர் எதிர்பார்ப்புக்கும்’ முற்றுப்புள்ளி.

தட்டை வைத்துக் கொண்டு, நாக்கைச் சப்பு கொட்டிக் கொண்டு நிச்சயமாக யாரோ வந்து, ஏதோ ஒன்றை தட்டில் பரிமாறி நம் பசியை ஆற்றப் போகிறார்கள் என்னும் நம்பிக்கையில், எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருப்பதில் ஓர் சுகம்.

திடீரென அந்தத் தட்டையே பிடுங்கிக் கொண்டு போய்விட்டால்…? அந்த நிலைதான் இப்போது தேவேந்திரனுக்கு. பள்ளிப் படிப்பும் முடிந்தபிறகு, இனி என்ன எதிர்பார்ப்பு இருக்கப் போகிறது.

நண்பர்கள் கேட்ட கேள்விக்கு ஓரிரு வினாடிகள் மௌனத்திற்குப் பின் தேவேந்திரனிடமிருந்து பதில் வந்தது.

‘எங்கேயாவது வேலையைத் தேடிக் கொள்ள முயற்சிக்கணும். நிச்சயம் கண்டிப்பாகக் கிடைக்கும்ங்கிற நம்பிக்கை இருக்கிறது.’

வலுக்கட்டாயமாக ஒருவித எதிர்பார்ப்பை மீண்டும் மனதில் அமர்த்திக் கொண்ட திருப்தி அவன் முகத்தில் தெரிய, காத்திருக்கும் சுகத்தை அனுபவிக்கத் தன்னை தயார்ப் படுத்திக் கொண்டான்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.