காத்திருக்கும் வண்ணமயில் – நூல் மதிப்புரை

காத்திருக்கும் வண்ணமயில் என்ற, எழுத்தாளர் ரேணுகா பிரதீப்குமார் குணராசா அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.

மயிலின் தோகைக்குள் விரியும் ஓருலகம் நம்மைக் கவிதைகளால் நிறைத்து விடுகின்றது என்கிறார் அவர்.

இலக்கியம் என்பது நூலாசிரியர்கள் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லவோ, புதுப்பிக்கவோ முயற்சி செய்யும் ஒரு வழக்கமான நடைமுறையாகும்.

இதன் காரணமாக அது எப்போதும் இலக்கியத்தைப் பற்றிய மறைமுகமான சிந்தனை விளக்கமாகவே இருக்கிறது. ஆனால் மற்ற வடிவங்களைப் பற்றியும் இதையே நாம் சொல்லலாம்.

பல்வேறு வடிவங்களில் சிந்தனைகளின் ஒருமித்த கற்பனைகள் உலா வருகின்றன. காலந்தோறும் அதன் மாற்றங்கள் வியப்பைத் தரும். அது இயல்பே.

எழுத்தாளர் ரேணுகா பிரதீப்குமார் குணராசா அவர்களின் ‘காத்திருக்கும் வண்ணமயில்’ கவிதைத் தொகுப்பில் தன்முனைக் கவிதைகளாக அனைத்துக் கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன.

தமிழுக்கு வந்துள்ளதும், வடிவம் மாற்றப் பெற்றதுமான புதுக்கவிதைகளாக இன்று பெருமளவு கவிஞர்களால் எழுதப்படும் சிறப்பிற்குரியது ‘தன்முனைக் கவிதைகளாகும்’.

அவ்வடிவத்தில் வந்துள்ள அள்ள அள்ளக் குறையாதக் கவிதைப் பொதிதான் ரேணுகா பிரதீப்குமார் குணராசா எழுதியுள்ள இத்தொகுதியாகும்.

எழுத்தாளர் ரேணுகா பிரதிப்குமார் குணராசா இலங்கைக் கவிஞர் ஆவார். இலங்கையின் சாகித்திய ரத்னா கலாநிதி க.குணராசாவின் புதல்வியுமாவார்.

குணராசா அவர்கள் சென்ற தலைமுறையின் மாபெரும் இலக்கியவாதி. அவரின் எழுத்துக்களைப் படிப்பதற்கென்றே இலங்கையில் ஒரு பெருங்கூட்டம் இருந்தது. இன்றும் இளையோரால் தேடிப் பிடித்துப் படிக்கப் பெறும் தன்மை வாய்ந்ததும் அவரது எழுத்துக்கள் எனலாம். அத்தகு பரம்பரையில் வந்தவர் தமிழாக அகவுகிறார்.

இவ்வண்ணத்து மயிலாக கவிதைகள் புதியன என்றாலும், மரபின் தாக்கமும், பூர்வீகத்தின் வாசமும், கலாச்சாரப் பின்புலமும், அரசியல் நெடியும், அறிவுசார் வெளிப்பாடும், புராண பாண்டித்யமும், இயற்கை நேசிப்பும், மனம்சார் ஏக்கமும் கவிதைகளில் இளையோடுகின்றன.

ஏக்கம், ரசனை, பயம், உணர்வு, இழப்பு, காதல், நேசம், இரக்கம், ஊக்கம் என எண்ணிடலங்கா கருப்பொருள்களைத் தாங்கி விஸ்வரூபம் எடுத்துக் காட்சி தருகின்றன கவிதைகள்.

எங்குமிலா பரவெளியில் ஆனந்தமும், அடங்கா இன்பமும், அமைதியாய் கிளம்பும் நிம்மதியும் எதிர்பார்ப்பின் உச்சமாக இருப்பதை வாசகநிலையில் நம்மால் அவதானிக்க முடிகிறது.

வெளிப்படையான வார்த்தைப் பயன்பாடும் அதன் உள்ளர்த்தங்களும் சில இடங்களில் எதிர் எதிர் நின்று உரையாடுகின்றன. அந்த முரண் ஆழமான கவிதைகளின் உள்ளர்த்தங்களை மற்றும் வண்ணங்களை மெருகு கூட்டியிருக்கின்றன.

மாறிய காலம்

காலம் அடிப்படையில் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் வேரோடு சாய்த்து புதிய ஒன்றை நியமித்து விட்டுச் சென்று விடுகின்றது. கிராமங்களின் சாயல்கள் கூடத் தன்னளவில் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறிப் போய்க் கிடப்பதைக் காண முடிகின்றது.

உணர்வுகளும் தேவைகளும் பாசமும், பரிதவிப்பும் கூட வளர்ந்து விட்ட பொழுதில், காலத்தால் மறக்கடிக்கப்பட்டிருக்கின்றது.

இது ஒரு புறமொன்றால், மற்றொரு நிலையில், ஒரு தலைமுறையின் வாழ்வியல் அம்சங்கள். அடுத்த தலைமுறையில் காலத்தின் முன்னேற்றத்தால் அடியோடு மாறியிருப்பதைக் காணும் பொழுது வியப்பாக இருக்கிறது.

அந்த இடத்தில் கிடைத்த அந்த சுகம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்காமல் அல்லது அது என்னவென்றே தெரியாமல் இருப்பதைப் பார்க்கும் பொழுது, ஒருவித ஏக்கம் மிஞ்சுகிறது.

வாழ்வை நுண்மையாகக் காண்பவருக்கே இதன் வலியும் சோகமும் தெரியும். இவ்வலியைப் பல கவிதைகளில் கவிஞர் கூறிச் செல்கிறார்.

எனும் கவிதையில் மல்லிகைப்பூவும், அல்வா துண்டும் காசு கொடுத்தால் உடனே கிடைக்கப் போகிறது இதிலென்ன இருக்கிறது என இக்காலக் குழந்தைகள் கேட்கலாம்.

ஆனால், சென்ற தலைமுறையில், ஒரு குறிப்பிட்ட வயது வரை அப்பாவோ, அம்மாவோ வாங்கித் தந்தால் தான் நமக்குப் பொருள். அதுவும் அடம்பிடித்துக் கேட்டாலும் கிடைக்காது. எப்போதாவது தான் நாம் நினைத்தது கிடைக்கும். இன்னொன்று பொருள்களுக்குப் பற்றாக்குறையும் கூட.

ஆனால் இன்று அப்படியல்ல குழந்தைகள் கேட்டதெலாம் கிடைக்கின்றன. அங்காடிகளில் பொருட்களை அவர்களே தேர்வு செய்கின்றனர். எனவே, ஒன்றை எதிர்பார்த்து, அதற்காகக் காத்திருக்கும் சுகமென்பதை இக்காலக் குழந்தைகள் அறிய முடியாத சூழ்நிலையை இக்கவிதை விளக்குகிறது.

உணர்வுகளைப் படம் பிடிப்பது தானே அற்புதமான கவிதை.

இழப்பது எது?

பொருளை முன்வைத்து உணர்வைப் பின்வைக்கும் சமூகம் இழப்பது எது என்பதை நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்கிறது கவிதை.

தன்முனைக் கவிதை

கவிதைகளில், முதலிரு அடியிலிருந்து பொருளால் பிறிதொரு இரண்டடியும் வேறுபட வேண்டுமென்பது தன்முனைக் கவிதை இலக்கணம் என்பதால், பல கவிதைகளில் முதலிரு வரிகளிலிருந்து பொருள் மாறுபாட்டால் மற்ற இரு அடிகளிலும் வந்துள்ளன. அவை சரியாகப் பொருந்தி வாசகரை இரசிக்க வைக்கின்றன.

அவ்வாறான கவிதைகளாக,

இக்கவிதைகளைக் காணலாம். இறைவனைத் தேடிச் செல்கிறோம் ஆனால், அதைச் செய்வதில்லை. லட்டுக்காக அலைகிறோம். அதுவே பிரதானமாகி, கடவுள் காணாமல் போய் விடுகிறார். அதுபோல் யோகாசனம் படுத்திருந்து பார்த்தால் என்ன பயன்?

மலை உச்சிக்கு நடந்து சென்றால் அது உடலுக்கு மருந்து. ஆனால், குளிரை இரசிக்கக் கொடைக்காலுக்குச் சுற்றுலா செல்கின்றோம். இது போன்ற கவிதைகள் ஏராளமாக இக்கவிதைத் தொகுப்பிலுள்ளன.

சமூகப் பிரச்சனைகளைப் பேச வேண்டிய சூழ்நிலைக்குக் கவிஞன் தள்ளப்படுவது உலக இயற்கை, உலகிற்குத் தன் கருத்தைச் சொல்ல நினைக்கும் கவிஞனால் சமூகச் சீர்கேடுகளையும், பிரச்சனைகளையும் பேசாமலிருக்க முடியாது.

சமூக சிந்தனை

அழகியல் கவிதைகள் எழுதுபவர்கள் கூடச் சில கவிதைகளில் சமூக சிந்தனையை எழுதி விடுவது இயற்கையே. அவ்வாறே ரேணுகா பிரதீப்குமார் அறுபது சதவீதக் கவிதைகளைச் சமூகம் சார்ந்தே படைத்துள்ளார்.

இதன்மூலம் இக்கவிஞனின் சமூகப் பிரக்ஞையை அறிந்து கொள்ள முடியும். இலங்கையின் வரலாறுகளில், கரை படிந்த நாட்களின் வலிகளையும். அதன் நீட்சிகளையும், கவனிக்கப்பட வேண்டிய முன்னேற்றங்கள் குறித்தும் கவிதைக்குள் கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கதாகும்.

அவ்வாறான கவிதைகளாக,

இக்கவிதைகள் அமைந்துள்ளன. இவை போன்ற சமூகக் கவிதைகள் மிக நேர்த்தியாக ஆசிரியரால் எழுதப்பட்டுள்ளன. .

நான் யார்?

நான்கு வரிகளுக்குள்ளும் ஒரே பொருள்பட சுய பரிசோதனை மற்றும் தத்துவார்த்தமான பல தத்துவங்கள் இங்கு அலசி ஆராயப்பட்டுள்ளன.

உடல்தான் நானா?

இல்லை வேறொன்றா?

இதை ஆராய்ந்து உண்மையான ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து வருவதே ஞான வாழ்க்கை. இதையே ஆதிசங்கரரின் அத்வைதம் முதலான புத்த கொள்கை உட்பட அனைத்தும் பேசுகின்றன.

புராண மரபுக் கூறுகளும், தொன்மைகளும், சித்த வைத்தியக் கூறுகளும் கவிஞர் ரேணுகா பிரதீப் குமார் எடுத்தாண்டுள்ளார். இதன் மூலம் பல்துறை ஞானத்தைத் தம் கவிதைகளுக்குள் கொண்டு வந்துள்ளது சிறப்பாகும்.

காத்திருக்கும் வண்ணமயில் கவிதை நூலில் ஏராளமான கவிதைகள் உள்ளன. ஒவ்வொரு கவிதையும் தனித்தனியே எடுத்து ஆய்வு செய்யுமளவு பொருளாழம் மிக்கது.

கவிஞரின் கவிபுனையும் ஆற்றலும் எண்ணி வியக்கத் தக்கதாகவே அமைந்துள்ளது.

புதுக்கவிதை வடிவம் எனினும் அதில் இலக்கணப் பிழை இல்லாது, சரியான சமூகத்தை மேம்படுத்த விளைகின்ற காரணிகளை உட்புகுத்தி, இம்மாதிரியான கவிதைகளைப் பலரும் எழுதுவதற்குச் சான்றாக எழுதியிருக்கிறார்.

மயிலின் தோகை விரிப்பு நன்றாகவே இருக்குமெனினும், பொருத்தமான நேரம், இடம், மனவுணர்வு ஒப்பவே மயிலின் ஆட்டம் இரசித்தலுக்கு உட்படும். அவ்வுணர்வு இங்கு முற்றிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது வெற்றியைத் தந்திருக்கிறது.

மயிலின் தோகைக்குள் விரியும் ஓருலகம் நம்மைக் கவிதைகளால் நிறைத்து விடுகின்றது.

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com


பாரதிசந்திரன் அவர்களின் படைப்புகள்

One Reply to “காத்திருக்கும் வண்ணமயில் – நூல் மதிப்புரை”

 1. வண்ணமயில் கவிதைத் தொகுப்பிற்கான விமர்சனங்கள் எளிமையான பாங்கில் அமைந்துள்ளன. தற்கால சமுதாயச்சூழலை விவரிக்கும் கவிதைகளுக்குத் தரும் விளக்கங்கள் வெகு யதார்த்தமாக உள்ளன. சான்றாக,
  “அந்நிய தேசம் சென்ற
  காதல் கணவன்
  விடுமுறையில் வீடு திரும்பினான்
  விடைபெற்ற இளமையுடன்
  என்ற கவிதைக்கு, பொருளை முன்வைத்து உணர்வைப் பின்வைக்கும் சமூகம் இழப்பது எது என்பதை நெற்றிப் பொட்டில் அடித்துச் சொல்கிறது கவிதை” என்று கவிதையும் அதற்கான விமர்சனமும் இதயத்துக்குள் ஊசியை இறக்கியது போல் உள்ளது.

  பாராட்டுகள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.