பெங்களூரு மாநகரின் மல்லேஸ்வரம் பகுதியில் மைய சாலையில் அமைந்து இருந்தது காந்தபுரா ஆதரவற்றோர் காப்பகம்.
திங்கட்கிழமை காலை நேரம். அந்த ஆசிரமத்தின் தலைவர் கனமான தேகம் கொண்ட மூத்த குடிமகன் கனக தாசா, வேட்டி அணிந்து மேலே அங்கவஸ்திரத்தைப் போர்த்திக் கொண்டு காப்பகத்தின் முகப்பில் உள்ள செடிகளுக்கு கன்னட துதிப்பாடல்களைப் பாடிக் கொண்டே பூவாளி மூலம் தண்ணீர் வார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது காப்பகத்தின் கேட்டைத் திறந்து கொண்டு நீலநிற சபாரி உடை அணிந்த பருமனான உடல்வாகு சிவந்த மேனி நபர் உள்ளே வந்தார்.
“பன்னி!” என்று கனக தாசா அவரை வரவேற்றார் . அந்த நபர் தமது பெயர் சரண் – என்ஆர்ஐ. ஆனால் இந்த மண்ணின் மைந்தன். இந்த ஆசிரமத்தை சுற்றிப் பார்க்க விரும்புவதாக ஆங்கிலத்தில் கூறினார்.
கனக தாசா “தாராளமாக உள்ளே சென்று பாருங்கள்.ஆங்கிலத்தில் பேசும் பசங்களும் இருக்காங்க!” என்று கன்னடத்தில் கூறினார்.
உள்ளே நுழைவதற்கு முன்பாக அவர், “இந்த ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு ஏன் காந்தபுரா பெயர்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
பெரியவர் கனக தாசா “அதுவா? இந்திய ஆங்கில எழுத்தாளர்களுள் ஒருவரான ராஜா ராவ், எழுதிய ஆங்கில நாவல் – காந்தபுரா. ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்து எட்டாம் ஆண்டு இந்த நாவலை எழுதினார்.
காந்தபுரா – மாண்டியா அருகில் உள்ள ஒரு கிராமம். அதைப் பற்றிய கற்பனை நாவல். காந்திஜி இந்த கிராமத்திற்கு வந்தார் என்றும் இந்த கதையில் எழுதி இருப்பார். எங்க அப்பா அந்த நாவலைப் பத்தி அடிக்கடி பேசிக் கொண்டு இருப்பாரு . அதனால தான் இந்தப் பெயரை வைத்தேன். நீங்க உள்ளே போங்க“ என்றார் .
“நைஸ்!” என்று கூறிக் கொண்டே சரண் உள்ளே சென்றார்.
சரண் , ஆசிரமத்தில் உள்ள பெரியவர்களிடமும் பெண்களிடமும் சிறுவர் சிறுமியருடனும் உரையாடி விட்டு அவர்கள் கொடுத்த சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார்.
முகப்பில் பெரியவர் கனக தாசாவைத் தேடினார். அங்கிருந்த ஒல்லியான நடுத்தர வயது பெண்மணி “அண்ணா தோட்டத்தில் இருக்கிறார்!” என்று கன்னடத்தில் கூறினார்.
மரங்களும் பூச்செடிகளும் மற்ற செடிகளும் நிறைந்த தோட்டத்தில் கனக தாசா உலவிக் கொண்டிருந்தார் . அவர் அருகில் வந்த சரண், அவரிடம் கன்னடத்தில் உரையாடினார்
“ மன்னிக்கணும் சார். நான் அரசு அதிகாரி. லேபர் டிபார்ட்மென்ட். ஒங்க ஆசிரமத்துல வளர்ற சிறுவர் சிறுமிகளை நாகாங்கற லேபர் கான்ட்ராக்ட்டர்கிட்ட நீங்க அனுப்பி வைக்கறீங்கன்னு புகார் வந்துச்சு… நேர்ல வந்து விசாரிச்சு பார்க்கத்தான் வந்தேன்.“
பெரியவர் கனக தாசா புன்னகை பூத்தார். “தெரியும் ஆபீசர். அதனால தான் விடுதிக்குள்ளே நான் ஒங்களோடு வரலை. ஒங்க கண்ணே நீங்க ஒங்கள அறிமுகம் செஞ்சப்ப உண்மை பேசலைங்கற காட்டிக் கொடுத்திருச்சு. பசங்க கிட்ட விசாரிச்சுட்டிங்க இல்ல. பொய் புகார்ன்னு தெரிஞ்சுடுச்சு இல்ல. அது போதும். போய்ட்டு வாங்க ஆசீர்வாதம்!” என்று அமைதியாகப் பேசினார்.
சரண் ஏதும் பேசாமல் கைகூப்பி அவரிடம் விடை பெற்று விடுதியின் வாசலை நோக்கிச் சென்றார்.
மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!