மதுரை கோவில் ஒன்றில், சாமியை தரிசிக்க வயதான பெரியவர் சுந்தரம் வந்தார்.
அவர் வயது முதிர்ந்தவர். கூடவே அவர் உடுத்திய உடை அவரை எளிமையாய்க் காண்பித்தது.
கோவிலுக்குள் நுழைந்தார் பெரியவர். கோவிலில் இரு பூசாரிகள் அமர்ந்து பேசி கொண்டு இருந்தார்கள்; வேறு ஆட்கள் யாரும் இல்லை.
சுந்தரம் சுவாமியை நோக்கி நகர்ந்தார். இரு பூசாரிகளும் அவரை கண்டு கொள்ளாமல் பேசிக் கொண்டு இருந்தனர்.
பெரியவர் சுவாமியின் முன் நின்று, பூசாரிகளை பார்த்தார். அவர்கள் வருவதாக தெரியவில்லை.
கோவில் பூசாரிகளும் பெரியவர் சுவாமியின் முன் நிற்பதை கண்டு கொள்ளாதவாறு இருந்தனர்.
அப்போது கோவிலுக்குள் மற்றொரு நபர் உள்ளே வந்தார்.
உள்ளே நுழைபவரை பார்த்தாலே நல்ல பணக்காரரைப் போல் தெரிந்தது.
உடனே கோவில் பூசாரிகள் இருவரும் எழுந்து “ வாங்க! வாங்க!” என்று வந்தவரை வரவேற்க, அதனை பார்த்து கொண்டே இருந்தார் பெரியவர்.
உள்ளே நுழைந்தவரின் கையில் தங்க மோதிரம், காப்பு, கழுத்தில் தங்க செயின் என பார்க்க பணக்கார தோற்றம்.
“சார்! வாங்க, யார் பேருக்கு அர்ச்சனை பண்ணனும்னு சொல்லுங்க. சிறப்பா அர்ச்சனை பண்ணிடலாம்!“
என்று கோவில் பூசாரிகள் இருவரும் கேட்டனர்.
அதற்கு அவர் “இன்னைக்கு எங்க முதலாளிக்கு பிறந்த நாள். அவர் பேருக்கு தான் அர்ச்சனை பண்ணனும்!” என்று வந்த நபர் கூறினார்.
“நல்ல விஷயம் தான். சிறப்பா பண்ணிடலாம். உங்க முதலாளி பெயர், ராசி, நட்சத்திரம் சொல்லுங்க!“ என்று பூசாரி கேட்டார்.
அப்போது தொலைபேசி அழைப்பு வர, அந்த நபர் தொலைபேசியில் பேச ஆரம்பித்தார்.
“ஐயா பெரியவரே! கொஞ்சம் இந்த பக்கம் வாரீங்களா? சாமிய பார்த்துட்டா கிளம்ப வேண்டியது தான!“ என்று மற்றொரு பூசாரி கூற,
“நான் சாமிய பார்த்துட்டேன். விபூதி தந்தா கிளம்பிரலாம்னு நிக்கிறேன்!” என்று பெரியவர் பதில் கூறினார்.
“இந்தாங்க விபூதி!“ என்று வேண்டா வெறுப்பாய் பூசாரி கொடுத்து அனுப்ப, பெரியவர் அங்கிருந்து நகர்ந்து சாமியை சுற்றிவர கிளம்பினார்.
தொலைபேசியில் பேசி முடித்து வந்து அந்த நபரிடம் “உங்க முதலாளி பேர் சொல்லுங்க சார்?” என்று பூசாரி ஒருவர் கேட்டார்.
“முதலாளி பேர் மீனாட்சி சுந்தரம். அரிசி மில் வச்சிருக்கார். அவர்கிட்ட நாற்பது பேர் வேலை பார்கிறாங்க!” என்று அந்த நபர் முதலாளியை பற்றி கூறினார்.
“அது சரி தம்பி. உங்க முதலாளியை கூட்டிட்டு வந்திருந்தா, இன்னும் சிறப்பா அர்ச்சனை பண்ணிருக்கலாம்!“ என்று பூசாரி ஒருவர் கூற ,
“இங்க நின்று இருந்தாரே வயசான பெரியவர், அவர் தான் எங்க முதலாளி மீனாட்சி சுந்தரம்! “ என்று அந்த நபர் பதில் கூறினார்.
“அந்த பெரியவர் தான் உங்க முதலாளியா? நீங்க தம்பி?” என்று ஆச்சரியமாக பூசாரி இருவரும் கேட்டனர்.
“நான் அவரோட கார் டிரைவர். காரை ஓரமாக நிப்பாட்டி வர கொஞ்சம் லேட் ஆயிடிச்சு“ என்று அந்த நபர் கூறினார்.
வாய் பேச முடியாமல் இரு பூசாரிகளும் நின்ற நேரம், சுவாமியை சுற்றி வந்தார் மீனாட்சி சுந்தரம்.
அவரை பார்த்ததும் சங்கடமான சூழலில் முகத்தை வைத்து அவரின் ராசி, நட்சத்திரம் என்று அவரின் விபரங்களை பெற்று கொண்டு அர்ச்சனையை துவக்கினார் பூசாரி ஒருவர்.
மீனாட்சி சுந்தரம் தன் டிரைவரை அழைத்து, அர்ச்சனை தட்டில் 500 ரூபாய் நோட்டை போட சொன்னார்.
அந்த ஐநூறு நோட்டை பார்த்ததும் இரு பூசாரிகளுக்கும் சற்று தலை குனிந்தனர்.
“ பணம் தான் ஒவ்வொருவருக்கும் மரியாதையை பெற்று தருமா? உடுத்தும் உடை அல்லது பணம் தான் ஒரு மனிதனின் தரத்தை நிர்ணயிக்குமா?“ என்று கடவுளை நோக்கி மீனாட்சி சுந்தரம் கேட்டுவிட்டு அங்கிருந்து நகன்றார்.
இந்த மாதிரி நிகழ்வுகள் அரசு அலுவலகம், மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
பணம் மட்டும் தான் வாழ்க்கையா?
பணமும் தான் வாழ்க்கை. ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை!
ஏழையிடத்தில் இருந்தாலும் பணக்காரனிடத்தில் இருந்தாலும், பணத்தில் இருக்கும் மகாத்மா காந்தியின் சிரிப்பு என்னமோ ஒரே மாதிரி தான் இருக்கிறது.
ஆனால் நாம் தான் பணத்தை பொறுத்து மாறிக்கொண்டு இருக்கிறோம்.
அது பணத்தின் தப்பு இல்லை; நம்முடைய தப்பு.
இனியாவது மனிதனைப் பார்ப்போம்!
மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104