காஃபி சாப்பிடலாம்! வர்றீங்களா? – ஜானகி எஸ்.ராஜ்

பதினோராம் நூற்றாண்டில் காபி பானம் ஐரோப்பாவில் அறிமுகமானபோது அது சர்ச்சைக்குரிய ஓர் பானமாகவே கருதப்பட்டு வந்தது.

மருத்துவர்களில் பலர் காபியை விஷத்தன்மை கொண்ட ஓர் பானம் என அறிவிக்க, இன்னும் சிலரோ அதை ஓர் நல்ல டானிக் என்றனர்.

நாளடைவில் காபி ‘டானிக்’காகவே கருதப்பட்டு பிரபலமடைய ஆரம்பித்தது.

‘காபி பார்’ பல தோன்ற ஆரம்பித்தன. காபி விளம்பரங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. மக்கள் காபியை விரும்பி அருந்த ஆரம்பித்தனர். எந்த ஒரு விழாவோ, வைபவமோ ‘காபி’ இடம் பெறத் தவறவில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் காபியுடன் ஐக்கியமாகி விட்டோம்!

‘காபி பானம்’ உண்மையிலேயே உடலுக்கு நல்லதா? நன்மை பயக்குமா? அல்லது தீங்கு விளைவிக்குமா?

தீங்குகளை விட நன்மைகளே அதிகம் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மூளையிலுள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக நடைபெற்று, ரத்த நாளங்களில் சேரும் விஷத்தன்மை பொருட்களை அழிக்கும் வல்லமை பெற்றதாம் காபி! இது மட்டுமா?

நாடித்துடிப்பைத் தூண்டி விடுவதின் மூலம் இதயத்தைச் செயல்பட வைக்கிறது. தசைகளை முறுக்கேற்றி வலுப்படுத்துகிறது.

மலமிளக்கும் தன்மை கொண்டதாம் காபி. குடலைத் தளர்த்தி மலத்தை வெளியே தள்ளத் துணை புரிகிறது.

ஜீரண சுரப்பிகளை முறையாகச் செயல்பட வைத்து, வாயுக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது.

உடல் ஆரோக்கியத்துடன் விளங்குபவர்கள் காபியை உணவருந்திய பின் உட்கொண்டால் எவ்விதக் கெடுதலும் இல்லை. ஆனால், ஆரோக்கியமற்று காணப்படுபவர்களுக்கு நெஞ்சரிச்சல் ஏற்படும்.

உடலிள்ள உப்பைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. காபியை வெவ்வேறு நேரங்களில் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

காலையில் அருந்தும் காபி சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்துமாம்! இரவில் சேரும் அசுத்தப் பொருட்களை உடலிலிருந்து நீக்க காபி உதவுவதாகச் சொல்லப்படுகிறது.

மதிய உணவுக்குப் பின் அருந்தப்படும் காபி, உணவு ஜீரணிக்க வழி செய்கிறது. வாயுக் கோளாறு ஏற்படாவண்ணம் சுரப்பிகளைப் பாதுகாக்கிறது.

பிற்பகலில் அருந்தப்படும் காபி களைப்பைப் போக்கி உற்சாகத்துடன் செயல்பட வைக்கிறது.

மாலை நேரத்தில் காபி அருந்தினால் மனதுக்குத் தெம்பை ஏற்படுத்தி, கற்பனை சக்தி அதிகரிக்க உதவுகிறது.

காபியிலுள்ள ‘காஃபின்‘ என்னும் பொருள், காபியைப் பாலுடன் சேர்த்து அருந்துவதால் வீரியம் குறைந்து செயலற்றுப் போய் விடுகிறதாம்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998