காபி டேபிள் புக் என்பது என்ன?

கண்ணுக்கு விருந்தாக அமையும் வண்ணப் படங்களுடனும் மிகச் சிறிய அளவிலான செய்திக் குறிப்புகளுடனும் படைக்கப்படும் புத்தகங்களே காபி டேபிள் புக் என்று அழைக்கப்படுகின்றன.

எந்த அளவில் வேண்டுமானானலும் பெரிய புத்தகமாக இருக்கும் இதனை ஆங்கிலத்தில் Visual Treat என்று கூறுவார்கள் .

மிகுந்த பொருட் செலவில் அச்சிடப்படும் இந்தப் புத்தகங்கள், பார்ப்பவரை வசீகரிக்கும். கனமாக இருந்தாலும், வடிவமைப்பாலும் வண்ணத்தலும் எழுத்தாலும் எடுப்பவர்கள், கீழே வைக்க மாட்டார்கள் .

சரி. இது அச்சுடன் டிஜிட்டல் தொழில்நுட்பம் கோலோச்சும் காலத்தில் இத்தகைய காபி டேபிள் புக்கிற்கான ஈர்ப்பும் வரவேற்பும் படைத்தலும் எப்படி இருக்கின்றன என்ற கேள்வி எழலாம். அந்தக் கேள்விக்கு விடை காண முயன்ற போது கிடைத்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில், நான் கூறியது போல், அச்சு வடிவில் உள்ள காபி டேபிள் புத்தகங்கள் தரும் அலாதியான வாசிப்பு அல்லது பார்க்கும் அனுபவத்தால், அச்சு வடிவில் காபி டேபிள் புத்தகங்கள் வழக்கொழிந்து விடாமல் இன்னும் அச்சிடப்பட்டு வருகின்றன.

சில மிகப்பெரிய புத்தக அங்காடிகளில் காபி டேபிள் புக் என்பற்காக தனி அடுக்கும் வைத்துள்ளனர். அதனால் , வீடுகள், அலுவலகங்களில் மற்ற புத்தகங்களுடன் காபி டேபிள் புத்தகங்களும் இடம் பெறுகின்றன.

நாம் மேலே குறிப்பிட்ட நோக்கங்கள் தவிர, பின்வரும் வகையினங்களில் காபி டேபிள் புக் உலக அளவில் படைக்கப்பட்டு வரவேற்பைப் பெறுகின்றன. அந்த தலைப்புகள் –

  1. கலை மற்றும் வடிவமைப்பு
  2. பயணம் மற்றும் புகைப்படங்கள்
  3. பேஷன் & ஸ்டைல்
  4. உணவு மற்றும் பானங்கள்
  5. இசை மற்றும் பொழுதுபோக்கு
  6. விளையாட்டு மற்றும் சாகசங்கள்
  7. வரலாறு மற்றும் பண்பாடு
  8. இயற்கை மற்றும் வனவளம்

இவ்வாறாக பிசிக்கல் வடிவம் எனப்படும் அச்சுப் புத்தகங்கள், அதற்கு என்று உள்ள வாசகர்கள் இடையே சற்றும் குறையாத வரவேற்பைக் கொண்டுள்ளதால் இப்படிப்பட்ட தலைப்பிலான காபி டேபிள் புத்தகங்கள் விற்பனையிலும் சாதனை படைக்கின்றன.

பிறந்த நாள், திருமண நாளில் வேண்டியவர்களுக்குப் பரிசு அளிக்க சிலர் சில குறிப்பிட்ட காபி டேபிள் புத்தகங்களை வாங்கித் தருகின்றனர். (வித்தியாசமான புத்தகங்களைத் தேடிப்பிடித்துப் படிக்கும் காதலிக்கு காதல் பரிசாகவும் கொடுக்கின்றனர்)

இனி, டிஜிட்டல் உலகில் காபி டேபிள் புக்கின் நிலை என்று பார்ப்போம்.

அச்சிட வேண்டாம் என்று நினைத்து விடும் நிறுவனங்களும் தனிநபர்களும் மிகுந்த பிரயாசைப்பட்டு வடிவமைத்து உருவாக்கும் காபி டேபிள் புத்தகங்களை பி.டி.எப். கோப்பு வடிவில் தங்கள் சுற்றுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

‘சரி ஒரு வாசகனாக காபி டேபிள் புத்தகங்களை டிஜிட்டல் வெளியில் காண்பது எப்படி?’ என்று உங்கள் மனக் குரல் எனக்கு கேட்கிறது.

  1. இ – புக்ஸ் – பல காபி டேபிள் புத்தகங்கள், உங்கள் டேப்லட் அல்லது இ – ரீடரில் படிக்க ஏதுவாக கிடைக்கின்றன.
  2. Issuu, Scribd, Flipboard ஆகிய தளங்களில் டிஜிட்டல் வடிவில் காபி டேபிள் புத்தகங்களைக் கண்டு மகிழலாம்.
  3. சமூக வலைதளங்களில் – குறிப்பிட்ட புகைப்படக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை சமூக வலைதளல்களில் பின்பற்றி அவர்களை கைவண்ணத்தில் உருவான காபி டேபிள் புத்தகங்களைக் காணலாம்.
  4. சிலர், சமூக வலைதளங்களில், பயனருக்கு புதுவிதமான Interactive Experience என்பதை நல்கும் வகையில், வீடியோ, அனிமேஷன், ஹைப்பர் லிங்க் ஆகியவற்றுடன் கூடிய டிஜிட்டல் காபி டேபிள் புத்தகங்களைக் காட்சிப்படுத்தி இருப்பார்கள் .

இப்படியாக டிஜிட்டல் யுகத்திலும் காபி டேபிள் புத்தகங்கள், ஆவியும் மணமும் மாறாமல் உள்ளன.

எஸ். மதுரகவி
கைபேசி :9841376382
மின் அஞ்சல் :mkavi62@gmail.com