காமப்பாழி குறும்படம் விமர்சனம்

காமப்பாழி குறும்படம், திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாத தம்பதியினர் அடையும் பிரச்சனைகள் பற்றியது.

நடு நடுங்க வைக்கும், பதைபதைக்க வைக்கும், தீராது மலைக்க வைக்கும் உணர்வுகள் என்று சில உண்டு. அதில் ஒன்றைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறது இக்குறும்படம்.

குழந்தைக்காக ஏங்கும் ஒரு குடும்பத்தினரின் மன ஓட்டத்தை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கின்றனர்.

சமூகம் கேட்கும் கேள்விக்குப் பயந்து, எப்படியாவது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று துடிக்கும் துடிப்பு எவ்வளவு கொடூரமானது என்பதை இதை விட யாரும் விளக்கி விட முடியாது.

குறும்படத்தின் கதை

நெஞ்சை வருடும் சோகம், இழையோடும் துன்பம், வேதனை மேல் வேதனை என ஒருமித்து மனதை வெடிக்க வைக்கும் பாரத்தைச் சுமந்து கொண்டு திரிகிறார்கள் குழந்தை இல்லாத தம்பதியினர். சமூக நெருக்கடி, மனப்போராட்டம் இவை தான் குறும்படம்.

படத்தின் முடிவில் மிகச் சரியான உறுதியான முடிவையும் அவர்கள் மூலமாகவே நமக்குத் தந்திருக்கிறார். அதாவது, காதல் + காமம் = கடவுள் என்பதுதான் அது.

கதையின் வலி

சதா காலமும் சகல செயல்களையும் முடக்கி, எண்ணங்களைக் குத்திக் கிழிக்கும் இந்த இயலாமையின் நிலை, சொல்ல முடியாத துயரை உடையது. அந்தத் துயரின் வலியைப் படம் முழுக்கத் தெளித்து விட்டிருக்கிறார்கள்.

மிக முக்கியமாக, குழந்தையின்மைக்காக நம்மை நாமே இயல்பில் இருந்து செயற்கைக்கு மாறியிருக்கும் தன்மையைத் தக்க முறையில் பல கேள்விகள் தனக்குள்ளும், பிறர் இடத்திலும் கேட்டு அதற்குச் சரியான முடிவையும் தந்திருக்கும் பாங்கு குறும்படத்தின் சிறப்பாக அமைந்திருக்கிறது.

குறும்படத்தின் சிறப்புகள்

நான்கு கதாபாத்திரங்கள், நச்சென்று வசனம், முகபாவனையில் ஓராயிரம் வெளிப்பாடு, மனம் வருடும் இசை என எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

வசனம் மிக ஆழமான வசனமாக அமைந்து நெஞ்சைக் குளமாக்கி விடுகிறது.

தர்க்க முறையில் வாழ்க்கைக்கான அர்த்தம் தேடுவதும், யார் மீதும் குற்றம் சுமத்தாமலும், எல்லாவற்றிற்கும் நியதி கற்பிக்கும் படத்தினுடைய நடை மிகப்பெரிதாகும்.

சமூகம் கேள்வி கேட்கத் தான் செய்யும். எனவே, அதையும் ஏற்றுக் கொள்வதுதான் இயற்கை என்பதாகட்டும், பறவை விலங்குகள் எல்லாம் குழந்தை பெத்துக்க யார் சொல்லிக் கொடுத்தது? நமக்குத்தான் ஆயிரம் அட்வைஸ் என்பதாகட்டும், அது பலமான வாழ்வியல் தேடலின் உண்மையாகும். அதைத் தெளிவாகக் கூறியிருக்கிறது படம்.

”சாராயம் குடிப்பவன், சிகரெட் அடிப்பவன் இவர்களுக்கு எல்லாம் குழந்தை பிறப்பது கஷ்டம் என்கிறார்கள் டாக்டர்கள். ஆனால், மூன்று நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளுகிறார்கள் அவர்கள்.

எனக்கு எந்தப் பழக்கமும் இல்லை. டாக்டர் சொன்னபடி எல்லாத்துலயும் நடந்துக்கிறேன் எனக்கு ஏன் குழந்தை இல்லை” எனக் கதாநாயகன் உள்ளம் தடுமாறி நண்பனிடம் பேசுவது உலகியலைச் சந்தேகிக்க வைக்கிறது.

”எந்த நிலைக்குக் கீழே இறங்கிப் பேசினாலும் பேசுவேன், ஆனால், எனக்குப் பேரனோ, பேத்தியோ வேண்டும்” எனும் தொனியில் பேசும் மாமியாரின் எதிர்பார்ப்பு.

மாமியாரின் ஆசையை ஈடு செய்ய முடியவில்லையே என வருந்தும் மருமகள். தன் கணவன் குழந்தையின்மையால் தன்னை விட்டு நீங்கி விடுவானோ எனப் பயந்து வாடும் மனைவி.

நண்பனாகச் சரியாக வெளிப்படுத்தும் நண்பன், இந்த நான்கு முனைகளிலும் நெருடல் இல்லாமல், பெரும்பகுதி குடும்பத்தினரின் மனங்களை அப்படியே விளக்கியுள்ளார் இக்குறும்படத்தின் இயக்குனர்.

காட்சிகளின் அனைத்து பின்புல இடங்களிலும் குழந்தைகளுக்கான பொம்மைகளும், காதலர்களாக நிற்கும் சிலைகளும் என இவ்வாறு கனகச்சிதமாக, ஒவ்வொரு இடத்திலும் பின்புறம் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது படத்தின் கதையை அழகாகக் கூறும் ஒரு உத்தியாகும்.

குறும்படத்தின் வெற்றியில் மற்றொன்று, அந்தக் குறும்படத்திற்கு எழுதியிருக்கிற விமர்சனங்கள்.

இப்படத்திற்கு விமர்சனம் எழுதியவர்களில் 90 சதவீதத்திற்கு மேல், இக்கதை போல் தான் கஷ்டப்பட்டு நாங்கள் இருக்கின்றோம் என்பதைக் கூறியிருக்கின்றார்கள். இவ்வாறு எல்லோரும் அழுகை தழும்பக் கூறுகின்றனர். இதைவிட இயக்குனருக்கு வேறு என்ன விமர்சனம் வேண்டி இருக்கும்.

ஒரு பெண் இக்குறும்படத்தைப் பார்த்துவிட்டு ஒரு விமர்சனம் எழுதுகிறார்.

அதில் ”நானும் ஆறு ஆண்டுகளாக இதைப்போல் தான் கஷ்டப்படுகிறேன். அந்தப் பிஞ்சுக் கைகள் என்னை எப்பொழுது வந்து தொடும்” என்று ஏக்கத்தோடு விமர்சனத்தை எழுதி இருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு மனம் சார்ந்த ஊடாட்டத்திற்குப் பதில் கூறும் விதமாக, ஆறுதல் கூறும் விதமாகக் கிட்டத்தட்ட 86 பேர்கள் ஆறுதல் மொழிகளைப் பதிலாகத் தந்திருந்தார்கள். விமர்சனத்திற்கு விமர்சனமாக இது அமைந்திருந்தது.

இக்குறும்படம் குறித்த எதிர்மறை விமர்சனங்களும், குறும்படத்தை இப்படி எடுத்து இருக்கலாம் என்கிற மாதிரியானக் கருத்துக்களும் விமர்சனங்களில் இல்லை என்பதே சிறப்பிலும் சிறப்பு.

ஏழுகோடி மக்களைப் பிஹைண்ட்வுட்ஸில் இதுவரைச் சென்றடைந்திருக்கிறது.

குறும்படத்தின் முடிவு

மனைவியிடம் குழந்தை வேண்டுமெனச் சேரும்பொழுது, அந்தப் பாக்கியம் கிடைக்காமலும் போகும். ஆனால், மனைவியைக் காதலுடன் நேசித்து அந்தக் காதல் மலரும்பொழுது ஏற்படும் காமத்தில் கட்டாயம் அது குழந்தையைத் தரும்.

எனவே வெறும் எந்திரத்தனமாய், மாத்திரைகளில், டாக்டர்களின் அறிவுரைகளில், வெறுமையாகக் குழந்தை வருவதில்லை. நேரம், காலம், முறை பார்த்துக் குழந்தை உருவாவது இல்லை. அது, காதலின் புனிதத்தில் இருக்கிறது.

மனைவியும் கணவனும் எந்த அளவிற்குக் காதலோடு வாழ்கிறார்களோ, அந்த இடத்தில் இப்பிரச்சனை இல்லாது போய்விடும் என்பதாகத் தாரகமந்திரம் கூறிப் படம் முடிகிறது. படம் முடிந்தும் நீண்ட நேரங்களுக்குச் சோகம் நம் மனதை விட்டு விலகவில்லை.

குழந்தை வேண்டும் என மருத்துவர்களை நாடுபவர்களைப் பார்த்து, மருத்துவர்கள் சர்க்கரை நோயைப் பெரிதாக்கிப் பணம் பார்ப்பதைப் போல், இன்று இதையும் செய்கின்றனர்; மனைவியைக் காதல் செய்யுங்கள்; கட்டாயம் குழந்தை பிறக்கும் என இப்படக்குழு சமூகத்திற்குத் தெரிவிக்கிறது.

படக்குழு

நடிப்பு – நிவாஸ் ஆதித்தன், சித் பாத்திமா

அலங்காரம் – கே.பி.எஸ்.சசிகுமார்

இசை – ஜெய கே டாஸ்

தயாரிப்பாளர் – எஸ்.வெங்கிட்டு குமார்

தயாரிப்பு – வாவ் மீடியாஸ்

எழுத்து மற்றும் இயக்கம்: மலைமன்னன்

பட விமர்சனம்

ஒரு ஒருத்தரையும் செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி…. இது தான் உண்மை; குழந்தை என்பது கடவுள் குடுத்த வரம் அவ்வளவு தான்.

காமப்பாழி குறும்படம் பாருங்கள்

காமப்பாழி குறும்படத்தைக் காண கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்.

(குறும்படம் விரியும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@admin

One Reply to “காமப்பாழி குறும்படம் விமர்சனம்”

  1. தமிழக நிலப்பரப்பில் ஒரு வீட்டிற்கு 10 12 குழந்தைகள் இருந்தது ஆனால் இன்று சில குடும்பங்களில் ஒரு குழந்தை பெறுவதற்கு சிக்கலான சூழ்நிலையை இந்த சமூகம் உருவாகிவிட்டது. காரணம் உலகமயமாக்கல் காரணமாக நாகரீகத்தின் உச்சத்தை தொட்டு உணவு முறை மாற்றமே இதற்கு காரணம் சிறப்பான விமர்சனம் வாழ்த்துகள் ஐயா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.