காமராஜர் அவர்களை நாம் என்றும் மறக்கக் கூடாது என்று சொல்வது, அவர் இந்தியாவின் பிரதமர்களை உருவாக்குபவராக இருந்தார் என்பதாலா?
இல்லை. இந்தியாவின் மிக அதிகாரம் பெற்ற அரசியல் தலைவராக இருந்த போதும்கூட, பதவியின் பின் செல்லாமல் இருந்தவர் என்பதற்காக அவரை நாம் என்றும் நினைக்க வேண்டும்.
தனக்கு எது நன்மை தருகின்றது என்பதைவிட, நாட்டுக்கு எது நன்மையானது என்று எண்ணிச் செயல்பட்டவர் காமராஜர்.
காமராஜரை நாம் மறக்கக் கூடாது என்பது, அவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார் என்பதாலா?
இல்லை. தமிழகம் கல்வி, விவசாயம், தொழில் மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக மாற அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து உழைத்ததற்காக அவரை நாம் என்றும் நினைக்க வேண்டும்.
தான் முதல்வராக இருந்தபோதும், தன் வயதான அம்மாவின் வீட்டிற்கு அருகில் தெருக்குழாய் வசதி அமைத்துக் கொடுக்காத நடுநிலை மனதிற்காக, அவரை நாம் என்றும் நினைக்க வேண்டும்.
காமராஜரை நாம் மறக்கக் கூடாது என்பது, நேருவுக்குப் பின் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்ததாலா?
இல்லை. தன்னை யாரும் வற்புறுத்தாத போதும், தனது முதலமைச்சர் பதவியைத் தூக்கி வீசிவிட்டு, காமராஜர் திட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து, பதவியில் இல்லாமலும் மக்கள் பணியாற்றலாம் என மற்ற அரசியல் தலைவர்களுக்கு முன்மாதிரியாக இருந்ததற்காக, அவரை நாம் என்றும் நினைக்க வேண்டும்.
பதவி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு என்ற வாக்கியத்திற்கு சரியான உதாரணமாய் வாழ்ந்தவர் காமராஜர்.
காமராஜரை நாம் மறக்கக் கூடாது என்பது, அவர் தமிழர் என்பதாலா?
இல்லை. இந்தியன் என்ற அடையாளமும் தமிழன் என்ற அடையாளமும் முரண்பட்டவையல்ல என்பதை நிரூபித்ததற்காக அவரை நாம் என்றும் நினைக்க வேண்டும்.
மத்திய அரசிடம் தனக்கு இருந்த நட்பின் மூலம் துண்டுபடாமல் இந்தியாவைக் காத்தார். அதே நேரத்தில் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மையில் இருக்குமாறும் செய்தார்.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம், தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், தமிழ்ப் பாடநூல் வெளியீட்டுக் கழகம், கலைச்சொல் அகராதி, தமிழில் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றைக் கொண்டுவந்தது காமராஜர் ஆட்சிக்காலத்தில் தான்.
காமராஜரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை என்ன?
சுயநலமின்மை
எளிமை
நேர்மை
தைரியம்
தலைமைப் பண்பு
நாட்டுப்பற்று
மொழிப்பற்று
ஏழைக்கு இரங்குதல்
இந்தக் குணங்களை நாம் காமராஜரிடமிருந்து கற்றுக் கொள்வோம். நம்மால் முடிந்தவரை நாட்டுக்கு உழைப்போம்.