தான் படிக்காவிட்டாலும் நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் படிக்க வேண்டி உழைத்தவர் காமராஜர். அந்த படிக்காத மேதையிடம் இருந்து நாம் படிக்க வேண்டிய ஐந்து விசயங்கள்.
1.தன்னலமின்மை
நாம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்; மற்றவர்களை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று நினைக்கக் கூடாது. அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணியே நாம் செயல்பட வேண்டும். அதுவே காமராசர் வாழ்வு தரும் முதல் செய்தி.
2.தைரியம்
எந்த பிரச்சினையும் பார்த்துப் பயப்படாமல் அதனை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். சாதாரண நிலையிலிருந்து வாழ்வைத் துவக்கிய அவர் பல தடைகள் தாண்டி முன்னேற உதவியது அவரது தைரியமே.
3.திட்டமிடல்
மற்ற மாநிலங்கள் எல்லாம் சமூக நலத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கிய போது காமராசர் தொலை நோக்கு பார்வையுடன் மின்சாரத்திற்கு அதிகம் செலவிட்டார்.
இன்றும் இந்திய அளவில் அதிகம் தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளதற்கு அதுதான் காரணம். நீண்ட காலத் திட்டமிடல் என்பதுதான் மூன்றாவது செய்தி
4. குழுமனப்பான்மை
காமராசர் தன்னைவிட அதிகம் படித்தவர்களைத் தம்முடைய குழுவில் இருக்க வைத்தார். அவர்களோடு தாமும் இணைந்து நல்ல பல செயல்கள் செய்தார். நான் அல்ல நாம் என்ற சிந்தனையே வெற்றி தரும் என்பது நான்காவது செய்தி
5.மாற்றத்தை உருவாக்கும் தன்மை
சட்டங்களுக்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே சட்டங்கள் என்று சொன்னவர். நல்ல விசயங்களை விரைவாகச் செய்ய வேண்டும் என்று செயல்பட்டவர் காமராஜர். நாமும் அவரைப் போல் மாற்றங்களை உருவாக்கத் தயங்காமல் செயல்பட வேண்டும்.
தன்னலமின்மை, தைரியம், திட்டமிடுதல், குழுமனப்பான்மை மற்றும் மாற்றத்தை உருவாக்குதல் என அருங்குணங்களை செயல்வீரர் காமராஜரிடமிருந்து கற்றுக் கொள்வோம்.