காய்கறிகள், பழங்களின் நிறங்கள், பலன்கள்

நாம் உணவுப்பொருட்களாக தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உட்கொள்கிறோம். நாம் ஆரோக்கியமாக இருக்க சரிவிகித உணவினை உட்கொள்ள வேண்டும்.

நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதின் மூலம் பெறலாம்.

காய்கறிகள், பழங்களில் இருந்து நமக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்களான‌  பாஸ்பரஸ், கால்சியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் கிடைக்கின்றன.

ஒரே வகையான காயையோ பழத்தினையோ சேர்த்துக் கொள்ளாமல் எல்லா வகையான காய்கறிகள் மற்றும் பழங்களையும் நாம் உட்கொள்ள வேண்டும்.

நாம் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சிவப்பு, ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை ஆகிய நிறங்களில் உள்ளன.

ஒவ்வொரு வகை நிறத்திலும் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் குறிப்பிட்ட பண்பினையும், குறிப்பிட்ட நோய்களை தடுக்கும் அல்லது குறைக்கும் தன்மையையும் பெற்றுள்ளன.

இந்த நிறங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை. இவற்றிற்கான இந்த நிறங்கள் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கப் பெறுகின்றன.

 

சிவப்பு

சிவப்பு ஆப்பிள், மாதுளை, தக்காளி, வெங்காயம், தர்பூசணி, பீட்ரூட், ஸ்டாபெர்ரி, செர்ரி போன்றவை சிவப்பு வண்ணத்தில் உள்ளன.

இவற்றில் லைக்கோபீன் என்ற சிவப்பு நிறத்திலான கரோட்டினாய்ட் உள்ளது. இது மிக முக்கியமான ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும்.

இது உடலில் உள்ள எல்டிஎல் என்ற கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். சூரியக் கதிர்வீச்சால் தோலில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும்.

சில வகையான புற்று நோய் பாதிப்பைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 

நீலம் மற்றும் ஊதா

ஊதா கத்தரிக்காய், திராட்சை, நாவல்பழம், பிளம்பழம் போன்றவை நீலம் மற்றும் ஊதா வண்ணத்தில் உள்ளன.

இவற்றில் வைட்டமின் சி, நார்சத்து, பிளேவனாய்ட் ஆகியவை உள்ளன. இவை துவர்ப்பு சுவை மிகுந்தவை.

இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. மூளையின் செல்களைத் தூண்டி புத்துணர்வு பெறச் செய்கின்றன. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

கெட்ட கொழுப்புகளைக் குறைக்கின்றன. சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாக உதவுகின்றன.

நுரையீலைப் பயன்படுத்தி சுவாசத்தை எளிதாக்கின்றன. கால்சியம் போன்ற தாது உப்புகளை உடல் உட்கிரகிக்க உதவுகின்றன. வழக்கத்திற்கு மாறான செல்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

இதயம் நன்கு இயங்க இதில் உள்ள பிளேவனாய்டுகள் உதவுகின்றன. இவை மறதி நோய்க்கு அருமருந்தாகும்.

 

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு

மாம்பழம், எலுமிச்சை, பூசணி, ஆரஞ்சுப்பழம், அன்னாசிப்பழம், மக்காச்சோளம் ஆகியவை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ளன.

இவற்றில் பீட்டா கரோட்டின், பினேவனாய்டுகள், பொட்டாசியம், வைட்டமின் பி3, சி, டி, இ, கே ஆகியவை உள்ளன. கால்சியம், வைட்டமின் ஏ, போலிக் அமிலம் ஆகியவை அதிகம் உள்ளன.

இவை புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. எலும்புகளைப் பலப்படுத்துகின்றன. சிறுநீரகப் பாதிப்புகளை குணப்படுத்துகின்றன. இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு நரம்பு தளர்ச்சியைப் போக்குகின்றன.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகமாகக் கொடுக்கின்றன. உடலின் திசுக்களுக்கிடையே தொடர்பினை வலுப்படுத்துகின்றன.

ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் மிகுந்துள்ளது. எனவே இவை மனஅழுத்தத்தைப் போக்குகின்றன.

சீரண சக்தியை அதிகப்படுத்துகின்றன. மலச்சிக்கலைப் போக்குவதோடு குடலில் ஏற்படும் புண்களை ஆற்றுகின்றன. கண்களின் பார்வையைத் தெளிவாக்குகின்றன.

இரத்த அழுத்தத்தை குறைகின்றன. இதயத்தைப் பலப்படுத்துவதோடு புற்று நோய் வராமல் தடுக்கின்றன.

முதல் நாள் இரவில் உண்ட உணவு செரிக்காமல் இருந்தால் மறுநாள் காலையில் இவ்வண்ணப்பழங்களை உண்ணுவதால் உணவானது செரிமானமாகிறது. எனவே இவ்வண்ணப்பழங்கள் காலையில் உண்பதற்கு ஏற்றவை.

 

பச்சை

பச்சைநிறக் காய்கறிகள், கீரைகள், பச்சை திராட்சை, பேரிக்காய், பச்சை வாழைப்பழம், முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்றவை பச்சை நிறத்தில் உள்ளன.

இவற்றில் குளோரஃபில், நார்சத்து, கால்சியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளன. குளோரஃபில்கள் இவற்றிற்கு பச்சை நிறத்தைக் கொடுப்பதோடு பாக்டீரியா வளர்ச்சியையும் குறைக்கின்றது.

நம் உடலில் புதிய திசுக்கள் வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன. நோய்கள் குணமாகும் வேகத்தை அதிகப்படுத்துவதோடு எலும்புத்தசைகள் மற்றும் மூளை வலுவாக உதவுகின்றன.

பச்சைநிற காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிபங்கல் ரசாயனம் உள்ளன. இவை புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. கெட்ட கொழுப்பைக் குறைப்பவை.

பச்சை திராட்சை, கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுஉப்புகள் உள்ளன.

இதயத்தையும் எலும்புகளையும் இந்த தாதுஉப்புகள் பலப்படுத்துகின்றன. இவை இதயம் சிறப்பாக இயங்கவும் தூண்டிக் கொண்டே இருக்கின்றன.

மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறத்தில் உள்ள பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் எளிதில் பலம் பெறும்.

பச்சை நிறத்தில் உள்ளவை மதிய வேளையில் உண்ண ஏற்றவை.

 

வெள்ளை

பழங்கள் மற்றும் காய்கறிகள் இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும்.

வெள்ளை நிற பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு அதிக கொழுப்பைக் குறைக்கும்.

பொட்டாசியம், வைட்டமின் சி, போலேட், நியாசின், ரிபோப்ளோவின் போன்றவை இதன் மூலம் கிடைக்கும்.

வெள்ளை நிற பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

மண் நிறம்

சப்போட்டாப்பழம், விளாம்பழம் ஆகியவை மண் நிறத்தில் உள்ளவை. இவை உடலுக்கு ஊக்கம் கொடுக்கும்.

கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். சீரண சக்தியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடல்புண்களை ஆற்றும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தினமும் குறைந்தது மூன்று நிறம் உள்ள காய்கள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும். ஐந்து நிறம் உள்ள காய்கள் மற்றும் பழங்களை உட்கொள்வது மிகவும் நல்லது.

பலவித நிறங்கள் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் சரிவிகித ஊட்டத்தைப் பெறலாம்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.