காராமணி / தட்டைப்பயறு குழம்பு

காராமணி / தட்டைபயறு குழம்பு செய்வது எப்படி?

காராமணி / தட்டைபயறு குழம்பு எளிதில் செய்யக்கூடிய சுவையான குழம்பு ஆகும். இதற்கு காராமணி எனப்படும் தட்டைப் பயறு பயன்படுத்தப்படுகிறது.

நார்ச்சத்து நிறைந்த இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

இதனை சாதம், சப்பாத்தி உள்ளிட்டவைகளுக்கு தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும். காரடையான் நோன்பின் போது அம்மனுக்குப் படைக்கப்படும் இனிப்பு அடை, உப்பு அடை இரண்டிலும் காராமணி சேர்த்து செய்யப்படுகிறது.

இனி எளிதான முறையில் சுவையான காராமணி / தட்டைபயறு குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

காராமணி / தட்டைப்பயறு – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 10 எண்ணம்

வெள்ளைப் பூண்டு – 5 பற்கள் (பெரியது)

தக்காளி – 2 எண்ணம் (பெரியது)

பச்சை மிளகாய் – 1 எண்ணம்

கத்தரிக்காய் – 3 எண்ணம் (சிறியது)

புளி – நடுத்தர எலுமிச்சை அளவு

கொத்த மல்லி இலை – 2 கொத்து

உப்பு – தேவையான அளவு

மசால் அரைக்க

தேங்காய் – 1/4 மூடி

மசாலா பொடி – 2 1/2 ஸ்பூன்

கொத்த மல்லிப் பொடி – 1 ஸ்பூன்

தாளிதம் செய்ய

சின்ன வெங்காயம் – 1 எண்ணம்

கடுகு – 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

நல்ல எண்ணெய் – 1 1/2 குழிக்கரண்டி

செய்முறை

காராமணியை கழுவி 1/2 நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் குக்கரில் காராமணி, ஊற வைத்த தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து 5 விசில் வரும் வரை வைத்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து பயறினை எடுத்து, கையால் நசுக்கி வெந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு தண்ணீரை வடித்து விடவும்.

பயறு வேக வைத்த தண்ணீரையும், பயறினையும் தனித்தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோலுரித்து சதுரங்களாக்கிக் கொள்ளவும்.

கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

தக்காளியை அலசி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.

புளியை 1/2 மணி நேரம் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை அலசி கீறிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை அலசி நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

தேங்காய் துருவலுடன், கொத்த மல்லிப் பொடி, மசாலாப் பொடி சேர்த்து மசாலாவாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

அதனுடன் நறுக்கிய சின்னவெங்காயம், வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம், பூண்டு வதக்கும்போது
வெங்காயம், பூண்டு வதக்கும்போது

ஒரு நிமிடம் கழித்து அதனுடன் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பச்சை மிளகாயைச் சேர்த்ததும்
பச்சை மிளகாயைச் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

தக்காளியைச் சேர்த்ததும்
தக்காளியைச் சேர்த்ததும்

அதனுடன் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

கத்தரிக்காயைச் சேர்த்ததும்
கத்தரிக்காயைச் சேர்த்ததும்

காய்கறிகள் நன்கு வதங்கியதும் வேகவைத்த காராமணியைச் சேர்த்துக் கிளறவும்.

காராமணியைச் சேர்த்ததும்
காராமணியைச் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவை, பயறு வேக வைத்த தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

தேவைப்பட்டால் அதனுடன் தண்ணீர் சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி இலையை மேலே தூவவும்.

மசாலாவைச் சேர்த்ததும்
மசாலாவைச் சேர்த்ததும்
குக்கரை மூடும் முன்பு
குக்கரை மூடும் முன்பு

பின்னர் குக்கரை மூடி விடவும்.

குக்கரில் ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் 10 நிமிடங்கள் வைத்துவிட்டு அணைத்து விடவும்.

ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து ஒரு சேரக் கிளறவும்.

குக்கரை திறந்ததும்
குக்கரை திறந்ததும்

சுவையான காராமணி / தட்டைபயறு குழம்பு தயார்.

குறிப்பு

குக்கரைத் திறந்து பார்க்கும்போது குழம்பு நீர்த்துப் போய் இருந்தால், குக்கரின் விசிலை எடுத்துவிட்டு மூடியால் மூடி அடுப்பில் ஐந்து நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்