காரி நாயனார் – தமிழ்பாக்காளால் கிடைத்த பொருளைக் கொண்டு திருகோவிலை கட்டியவர்

காரி நாயனார் தம்முடைய தமிழ் அறிவுத் திறத்தால் காரிக் கோவை என்னும் நூலை இயற்றி, அதன் மூலம் பெற்ற பொருட்களைக் கொண்டு சிவாலயங்களை கட்டித் தொண்டு புரிந்த மறையவர்.

இவர் சொல் வளம் பொருந்தி பொருள் வளம் மறைந்த பாடல்களைத் தொகுத்ததோடு,, அவற்றிற்கு உரைநடை விளக்கமும் தந்து தமிழ் தொண்டு ஆற்றினார்.

காரி நாயனார் எமனை சிவபெருமான் வதம் செய்த திருத்தலமான திருக்கடவூரில் மறையவர் குலத்தில் அவதரித்தார்.

சிவனாரின் மீதும் அவர்தம் அடியவர் மீதும் பேரன்பு கொண்டிருந்த இவர் தமிழில் பெரும் புலமை வாய்ந்தவராக விளங்கினார்.

அக்காலத்தில் பழைய பாடல்களுக்கு சொற்கள் தெளிவாக இருப்பினும் பொருள் விளக்கம் இல்லாததால் மக்கள் அவற்றை விரும்பவில்லை. அதனால் அவை வழக்கு இழந்து வந்தன.

இதனை அறிந்த காரியார் அவற்றை எல்லாம் தொகுத்து ஒரு கோவை ஆக்கினார். அக்கோவை அவருடைய பெயரால் காரிக் கோவை என வழங்கப்பட்டது.

எதனையும் புதிதாகச் செய்வதைவிட ஏற்கனவே உள்ளவற்றை அழிந்துவிடாமல் பாதுகாப்பது சிறந்தது. காரி நாயனார் பொருள் மறைய சொல் வளம் நிரம்பிய பழைய பாடல்களைத் தொகுத்தார்.

அத்தோடு பொருள் வளம் மறைய நின்றதால் மக்கள் நாளடைவில் அப்பாடல்களை மறக்கத் தொடங்கியதை அறிந்து, அப்பாடல்களுக்கு பொருள் விளக்கம் தந்தார் காரியார்.

தாம் தொகுத்து பொருள்விளக்கம் தந்த பழம்பெரும் பாடல்களை சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் எடுத்து நயமாக உரைத்தார் காரியார்.

அவற்றைக் கேட்டு மகிழ்ந்த அம்மன்னர்கள் காரியாருக்கு பொருட்கள் பல வழங்கினர். பெரும் நிதியையும் அளித்தனர்.

தமக்குக் கிடைத்த பரிசுப்பொருட்களும் பெரும் நிதியும் இறைவனின் கருணையால் தமக்கு கிடைத்தது என்பதை உணர்ந்த காரியார், அதனை தக்க வழியில் பயன்படுத்த எண்ணினார்.

ஆங்காங்கே சிவனாருக்கு திருக்கோவில்கள் பல கட்டினார். பல சிவாலயங்களை புதப்பித்தார். சிவனடியார்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்து முறையாகத் தொண்டு செய்தார்.

பழைய பாடல்களுக்கு உயிரூட்டி யாவருக்கும் பயன்பெறச் செய்த புலமைத் தொண்டோடு கற்கோவில்களையும் கட்டி அன்பர்கள் பயனடையச் செய்தார்.

இவ்விரண்டு தொண்டுகளினாலும் மக்கள் அனைவரின் பேரன்புக்கும் உரியவரானார் காரி நாயனார்.

தமிழுக்கும் இறைவருக்கும் தொண்டுகள் பலபுரிந்த காரி நாயனாருக்கு நீங்காத இன்பமான வீடுபேற்றினை இறைவனார் வழங்கினார்.

காரி நாயனார் குருபூஜை மாசி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

பழந்தமிழ் பாடல்களுக்கு பொருள் விளக்கம் தந்து பெற்ற ஊதியத்தைக் கொண்டு திருக்கோவில் பணிகளை மேற்கொண்டு தமிழுக்கும் இறைவனுக்கும் தொண்டுகள் புரிந்த காரி நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்காரிக்கு அடியேன்‘ என்று புகழ்கிறார்.