கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம் என்பது பண்டையக் காலம் முதல் இன்று வரை கொண்டாடப்படுகின்ற தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாகும். கார்த்திகை தீபம் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளை திருக்கார்த்திகை என்றும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் என்றும் அழைக்கின்றனர்.

 

கார்த்திகை தீபம் பற்றிய கதைகள்

சூரபத்மன் என்னும் அசுரனை வதைக்கும் பொருட்டு, சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து பொறிகளை உருவாக்கினார். பொறிகள் கங்கை நதியின் சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின.

ஆறு குழந்தைகளையும், கார்த்திகைப் பெண்கள் தாலாட்டி சீராட்டி, பாலூட்டி வளர்த்தனர். பார்வதி தேவி ஆறு சிறுவர்களையும் ஒன்றாக அனைத்து ஒரே குழந்தையாக மாற்றினாள். குழந்தையும் ஆறுதலைகள், பன்னிரெண்டு கைகள் ஒரே உடலுடன் காட்சியளித்தது. இக்குழந்தையை கந்தன், ஆறுமுகன், கடம்பன் மற்றும் முருகன் ஆகிய பெயர்களில் பார்வதி தேவி  அழைத்தாள்.

 

முருகன்
முருகன்

 

முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு சிவபெருமான் வான மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரமாக ஜொலிக்கும் அந்தஸ்தும், அவர்களைப் போற்றும் விதமாக கார்த்திகை தீப வழிபாட்டையும் அருளினார் என்று இவ்விழா கொண்டாடப்படுகிறது.

 

மகாவிஷ்ணு மற்றும் பிரம்மதேவர் ஆகியோருக்கிடையே யார் பெரியவர் என்ற போட்டியில், சிவபெருமான் அவர்களுக்குகிடையே ஜோதி பிழம்பாகத் தோன்றி யார் ஜோதியின் அடி, முடியைக் காண்கிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார்.

பின் மாகவிஷ்ணு வராகமாகவும், பிரம்மா அன்னப்பறவையாகவும் மாறி அடி முடியை தேடிச் சென்றனர். ஜோதிப் பிழம்பின் அடியைக் காணாது மகாவிஷ்ணு திரும்பினார். முடியைத் தேடிச்சென்ற பிரம்மா வழியில் தாழம்பூவைச் சந்தித்தார். தாழம்பூ சிவனின் முடியிலிருந்து வருவதாகக் கூறியது. தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு சிவனின் முடியைக் கண்டதாக பிரம்மா கூறினார்.

தாழம்பூ, பிரம்மா ஆகியோரின் பொய்யுரைக்காக தாழம்பூ சிவ பூஜையில் இடம் பெறாது எனவும், பிரம்மாவுக்கு பூலோகத்தில் தனிகோயில் கிடையாது என்கின்ற தண்டனையையும் சிவபெருமான்விதித்தார்.

சிவபெருமான் ஜோதிப் பிழம்பாக காட்சியளித்த நாளே கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

கார்த்திகை தீப வழிபாடு பற்றி சங்ககால நூலான அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒளவையார், திருஞான சம்பந்தர் ஆகிய புலவர்களும் கார்த்திகை தீப வழிபாடு பற்றி தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

 

கார்த்திகை தீபம் கொண்டாடும் விதம்

கார்த்திகை தீபத்திற்கு மக்கள் தங்கள் வசிப்பிடங்களை தூய்மைப்படுத்துகின்றனர். மாலை நேரத்தில் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் இடுகின்றனர். பின் மண், பீங்கான் மற்றும் உலோகத்தினான சிறிய அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு விளக்கேற்றுகின்றனர்.

விளக்குகளை வாயிற்படிகள், ஜன்னல்கள், பால்கனிகள், முற்றம் ஆகியவற்றில் வைத்து அலங்கரிக்கின்றனர். வீடுகளில் மட்டுமல்லாது அலுவலகங்கள், பணிபுரியும் இடங்கள், கோவில்கள் ஆகியவற்றிலும் விளக்குகள் ஏற்ற‌ப்படுகின்றன.

சிறுவர்கள் கார்த்திகை தீபத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். கார்த்திகை தீப  வழிபாட்டில் பொரி உருண்டை முக்கிய இடம் பெறுகின்றது.

கார்த்திகை தீப வழிபாடு மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணிதீபம் என்றும், கார்த்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் என்றும் மறுநாள் சுடலைக் கார்த்திகை என்றும் மூன்று நாட்கள் கார்த்திகை விளக்குகள் ஏற்படுகின்றன.

ஒரு சிலர் கார்த்திகை மாதம் முழுவதும் சிறிய அகல்விளக்குகள் இரண்டை மட்டும் தலைவாயில் ஏற்றி வைக்கின்றனர்.

மகிழ்ச்சியான திருமண வாழ்வு வேண்டியும், தங்கள் குழந்தைகளின் நலன் வேண்டியும் பெண்கள் கார்த்திகைத் திருநாளன்று விரதம் மேற்கொள்கின்றனர்.

 

திருவண்ணாமலை மகாதீபம்

திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி பிழம்பாக மகாவிஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு காட்சியளித்தார் என்று நம்பப்படுகிறது. அதன்காரணமாக கார்த்திகை தீபத்தன்று மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபத்தை தரிசனம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த மகாதீபத்தை ப‌ல கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் காணமுடியும்.

 

சொக்கப்பனை

கார்த்தகை தீபம் அன்று சொக்கப்பனை எல்லா சிவன்கோவில்களிலும் ஏற்றப்படுகிறது. பனை ஓலையானது பச்சையாக இருந்தாலும் தீபற்றக்கூடியது. பனை ஓலைகளை கோபுர வடிவில் செய்து சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. இது சொக்கர்பனை, சொக்கப்பனை எனவும் அழைக்கப்படுகிறது.

சிவபெருமான ஜோதிப் பிழம்பாக காட்சியளித்ததை குறிப்பிடும் வகையில் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. மனதில் உள்ள‌ இருளாகிய அறியாமை, பொறாமை ஆகியவற்றை ஒளியாகிய ஞானத்தைக் கொண்டு இறைவன் போக்குகின்றனார் என்பதே சொக்கப்பனை ஏற்றுவதன் தத்துவமாகும்.

Comments are closed.