கார்பன் அடிச்சுவடு அதிகம் கொண்ட நாடுகள் 2018 பட்டியலில் உலகின் தொழிற்சாலை என்றழைக்கப்படும் சீனா முதலிடம் பெற்றிருக்கிறது என்பதில் ஆச்சர்யமில்லை.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நாடுகளுக்கான இந்த பட்டியலில் அமெரிக்கா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது; இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
கார்பன் அடிச்சுவடு என்பது (Carbon FootPrint) ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களின் மொத்த அளவு ஆகும்.
பசுமை இல்ல வாயுக்கள் என்பவை கார்பன்-டை-ஆக்சைடு, ஓசோன், நைட்ரஜன், மீத்தேன், கந்தக-டை-ஆக்சைடு, ஈத்தீன் மற்றும் ஃப்ரியான்கள் ஆகியவை ஆகும்.
பசுமை இல்ல வாயுக்கள் புவியில் உயிரினங்கள் வாழத் தேவையான வெப்பத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
அதாவது இவ்வாயுக்களின் இயற்கையாக வெப்பத்தை உள்ளிழுத்து வெப்பத்தை வெளியே அனுப்புவதில்லை.
ஆனால் பசுமை இல்ல வாயுக்களின் அளவுகள் அதிகரிக்கும்போது உலக வெப்பமயமாதல் நிகழ்விற்குக் காரணமாகின்றன.
இதனால் இயற்கையாகவே நிகழும் கார்பன் சுழற்சியிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
புவியின் வெப்பநிலை உயருவதால் பருவநிலை மாறுபாடு, துருவப்பனி உருகுதல், கடல் மட்டம் உயருதல் மற்றும் பயிர்விளைச்சல் குறைவு ஆகியவை நிகழ்கின்றன.
கார்பன் அடிச்சுவடினைக் குறைத்தல்
கார்பன் அடிச்சுவடு கூடக் கூட உலகம் அதிகம் பாதிக்கப்படும். மிகக் குறைந்த கார்பன் அடிச்சுவடை நிலை நிறுத்த நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
கார்பன் அடிச்சுவடின் அளவானது வளர்ந்த நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. உலகின் சில நாடுகள் கார்பன் அடிச்சுவடின் அளவினைக் குறைக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில
மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்தல்
போக்குவரத்தில் உயிரி எரிபொருட்களைப் பயன்படுத்துதல்
வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவினைக் குறைத்தல்
ப்ளோரின் வாயுக்களின் பயன்பாடுகளைக் குறைத்தல்
தனிநபர் ஒவ்வொருவரும் கார்பன் அடிச்சுவடினை தங்களின் செயல்பாடுகளின் மூலம் கீழ்க்கண்டவாறுக் குறைக்கலாம்.
தனிநபர் போக்குவரத்தான கார் மற்றும் இருசக்கர வாகனங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்தை மேற்கொள்ளல்
மிதிவண்டியைப் பயன்படுத்துதல்
பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து மீண்டும் பயன்பாடு உள்ள பொருட்களைப் பயன்படுத்துதல். எடுத்துக்காட்டாக கடைகளுக்குச் செல்லும்போது துணிப்பைகள், பாத்திரங்கள் கொண்டு செல்லல்.
கூடியளவு அசைவ உணவுப் பொருட்களைத் தவிர்த்தல்
கார்பன் அடிச்சுவடு அதிகம் கொண்ட நாடுகள் 2018 பட்டியல்
கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு அதிகமாக இருந்தால் அந்த நாட்டு மக்கள் சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தி வருகின்றனர் என்று பொருள்.
அதாவது இந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள வரிசையில்தான் நாடுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகின்றன.
கார்பன் அடிச்சுவடு அதிகம் கொண்ட நாடுகள் 2018 பட்டியலில் சீனா முதலிடத்தையும், அமெரிக்கா இரண்டாவது இடத்தையும், இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
உலகின் மொத்த கார்பன் உமிழ்வு 2018-ல் சீனா 28%, அமெரிக்கா 15%, இந்தியா 7% பங்களிப்பினைக் கொடுத்துள்ளன.
ஒரு ஜிகா டன் என்பது 100,000 கோடி கிலோகிராம் ஆகும்.
வ.எண் | நாடுகள் | கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு (ஜிகா டன்) |
1 | சீனா | 10.06 |
2 | அமெரிக்கா | 5.41 |
3 | இந்தியா | 2.65 |
4 | ருஷ்யா | 1.71 |
5 | ஜப்பான் | 1.16 |
6 | ஜெர்மனி | 0.75 |
7 | ஈரான் | 0.72 |
8 | தென் கொரியா | 0.65 |
9 | சௌதி அரேபியா | 0.62 |
10 | இந்தோனேசியா | 0.61 |
11 | கனடா | 0.56 |
12 | மெக்ஸிகோ | 0.47 |
13 | தென் ஆப்பிரிக்கா | 0.46 |
14 | பிரேசில் | 0.45 |
15 | துருக்கி | 0.42 |
16 | ஆஸ்திரேலியா | 0.42 |
17 | ஐக்கிய ராச்சியம் | 0.37 |
18 | போலந்து | 0.34 |
19 | பிரான்ஸ் | 0.33 |
20 | இத்தாலி | 0.33 |
21 | கஜகஸ்தான் | 0.32 |
கார்பன் அடிச்சுவடு தனிநபர் உமிழ்வு 2018 பட்டியல்
ஒரு நாட்டின் கார்பன் அடிச்சுவடு அளவை அந்நாட்டின் மக்கள்தொகையால் வகுக்ப்பதால் கிடைப்பதே கார்பன் அடிச்சுவடு தனிநபர் உமிழ்வு ஆகும். அதாவது அந்த நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் எவ்வளவு தூரம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறான் என்பதை இதன் மூலம் அறியலாம்.
இதன் மதிப்பு அதிகமாக இருந்தால் அந்த நாட்டு மக்கள் சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தி வருகின்றனர் என்று பொருள்.
கார்பன் அடிச்சுவடு தனிநபர் உமிழ்வு 2018 பட்டியலில் சௌதி அரேபியா முதலிடத்தையும், கஜகஸ்தான் இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
சௌதி அரேபியாவில் சராசரியாக ஒவ்வொரு குடிமகனும் ஒரு வருடத்தில் 18.48 டன் அதாவது 18,480 கிலோ கார்பன் அடிச்சுவடு அளவில் சுற்றுச்சூழலை மாசு படுத்தி உள்ளனர்.
ஒரு டன் என்பது 1000 கிலோகிராம் ஆகும்.
வ.எண் | நாடுகள் | கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு (டன்) |
1 | சௌதி அரேபியா | 18.48 |
2 | கஜகஸ்தான் | 17.60 |
3 | ஆஸ்திரேலியா | 16.92 |
4 | அமெரிக்கா | 16.56 |
5 | கனடா | 15.32 |
6 | தென் கொரியா | 12.89 |
7 | ருஷ்யா | 11.74 |
8 | ஜப்பான் | 9.13 |
9 | ஜெர்மனி | 9.12 |
10 | போலந்து | 9.08 |
11 | ஈரான் | 8.82 |
12 | தென் அமெரிக்கா | 8.12 |
13 | சீனா | 7.05 |
14 | ஐக்கிய ராச்சியம் | 5.62 |
15 | இத்தாலி | 5.56 |
16 | துருக்கி | 5.21 |
17 | பிரான்ஸ் | 5.19 |
18 | மெக்ஸிகோ | 3.77 |
19 | இந்தோனேசியா | 2.3 |
20 | பிரேசில் | 2.19 |
21 | இந்தியா | 1.96 |
இனி வரும் காலங்களில் கார்பன் அடிச்சுவடின் அளவைக் குறைத்து உலகைக் காப்போம்.