காரிலோ ஆட்டோவிலோ ஏறி உட்கார்ந்தால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களையும் படித்துக் கொண்டே வருவான் விஜய்.
“இதைச்செய்வதற்கு ‘காயத்ரி ஜபம்’ சொன்னால் புண்ணியமாவது கிடைக்கும்” என்று அலுத்துக் கொள்வாள் அவன் மனைவி கீதா.
விஜய் சற்று வித்தியாசமான புத்திசாலி.
அவன் ” இங்கிலீஷில் 26 எழுத்துக்கள் இருக்கு! அதைக் கொண்டு நாம் ஆயிரக்கணக்கான வார்த்தைகள் பேசுகிறோம், எழுதுகிறோம். ஆனால் சைபரிலிருந்து ஒன்பது வரை உள்ள ஒன்பது எண்களைக் கொண்டு நம் டெலிபோன் நம்பரைக்கூட நம்மால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதற்கு ஒரே வழி! ஆங்கில எழுத்துக்களை கூட்டி கூட்டி படிப்பது போல நாம் எல்லா நம்பர்களையும் விடாமல் படிக்கணும் ” என்றான் விஜய்.
அவன் சொல்லிக் கொண்டிரும் போதே ஒருவெள்ளை கலர் மெர்சிடிஸ் பென்ஸ் கார் அவர்களை கடந்து வேகமாக சென்றது.
கத்தாரில் வேலை செய்யும்போது ஒரு நாள் மானேஜரின் பென்ஸ் காரை ஓட்டியது விஜய்க்கு ஞாபகம் வந்தது.
கத்தார் நாட்டு வாழ்க்கையின் நினைவலைகளில் இருந்து அவன் மீண்டபோது , வழியில் ஒரு கோர விபத்து.
யாரோ ஒருத்தன் பள்ளிக்கு செல்லும் சிறுமியை ரத்த வெள்ளத்தில் சாய்த்து விட்டு தப்பித்து விட்டான் . ஆம்புலன்ஸ், கூட்டம், அழுகுரல், போலீஸ் என்று ஒரே பரபரப்பான போர்க்களம்.
ஒரு குடிகார டிரைவர் வெள்ளை கலர், கப்பல் மாதிரியான காரில், அந்த சிறுமியை இடித்து நசுக்கிவிட்டு தப்பித்து விட்டான் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிந்தது.
சிறுமியின் ‘ரத்தக் களரி’ உடம்பை பார்த்து கதி கலங்கிய விஜய், சமூக கோபத்துடன் ஆட்டோவை விட்டு இறங்கி போலீஸிடம் சென்றான்
அங்கிருந்த பூக்காரியின் ” வெள்ளை கப்பல் கார்’ என்ற வார்த்தையை கேட்ட விஜய், ” சார்! இப்பத்தான் சார் ஒரு வெள்ளை மெர்சிடிஸ் பென்ஸ் கார் எங்களை தாண்டி வேகமாக போனது” என்று டிராபிக் இன்ஸ்பெக்டரிடம் சொன்னான்.
நம்பிக்கையில்லாமல் சம்பிரதாயமாக இன்ஸ்பெக்டர், அவனிடம் ” வண்டி நம்பர் தெரியுமா?” என்று வினவினார்.
“தெரியும் சார்! 1729” என்று பட்டென்று பதில் சொன்னான் விஜய்.
விஜய்யின் தயக்கமில்லா தடாலடி பதிலால் ஆச்சரியம் அடைந்த டிராஃபிக் போலீஸ் செயலில் இறங்கினார். உடனடியாக அனைத்து டிராபிக் கண்ட்ரோல் ரூம்களுக்கும் செய்தி பறந்து, அடுத்த சில மணி நேரங்களிலேயே பென்ஸ் கார் டிரைவரை குடிபோதையுடனேயே பிடித்து விட்டனர்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்ட விஜயிடம் சாட்சியம் பெற்றவுடன், இன்ஸ்பெக்டர் “எப்படி சார் அந்த கார் நம்பர் ஞாபகம் இருந்தது?” என்று கேட்க,
“சார்! அது கணித மேதை ராமானுஜம் நம்பர்!
நீங்கள் கூகிளில் தேடினால் அந்த நம்பரின் அருமையும் அந்த நம்பரால் ராமனுஜம் உலக அளவில் அடைந்த பெருமையும் புகழும் உங்களுக்கு தெரிய வரும்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டான் விஜய்.
அதை கேட்டுக் கொண்டு இருந்த கீதாவுக்கு முதன் முறையாக விஜய்யின் விசாலாமான அறிவின் மேல் பெருமை பொங்கியது.
ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 9884251887