காற்றுவெளி என்ற கலை இலக்கிய இதழ், எழுத்தாளர் முல்லை அமுதன் அவர்களின் பெருமுயற்சியால், சோபா அவர்கள் ஆசிரியராக இருந்து 09-ஜூன்-2010 அன்று லண்டனில் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் புகழேந்தி என்பவரும், ஜெர்மனியில் மூனா என்பவரும் இவ்விதழ் நடைபெற அனைத்துப் பணிகளையும் செய்து உதவினர்.
மொத்தம் நூற்றி ஒன்பது (109) இதழ்கள் இதுவரை வெளியிடப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் பக்க அளவிலும் சரி, படைப்புகள் அளவிலும் சரி, வடிவமைப்பிலும் சரி, மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று இருக்கின்றன என்றே கூறலாம்.
உலகளாவியத் தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு வெளியாகக் காற்றுவெளி காணப்படுகிறது.
கவிதை, கட்டுரை, துணுக்குச்செய்திகள், மொழியாக்கம் போன்ற பல படைப்புகள் இவ்விதழில் வெளியிடப்படுகின்றன.
தரம் மிக்கதான படைப்பாளர்களான, உலகம் அறிந்திருக்கிற படைப்பாளர்கள் பலரும், அறிமுக எழுத்தாளர்கள் சிலரும் இவ்விதழில் தொடர்ந்து எழுதுகின்றனர். இதனால் நயமான விமர்சனங்கள் நியாயமான முறையில் இங்கு காணப்படுகின்றன.
ஒவ்வொரு இதழின் அட்டைப்படமும் நவீன ஓவிய வெளிப்பாட்டு முறைகளால், புதிய புதிய நுணுக்கத்துடன் கூடிய வடிவமைப்பால், வண்ணங்களால், கற்பனைத் திறத்தால் மாறுபட்டு, ஓவியக் கலையை வளர்ப்பதாக அமைந்திருக்கின்றது.
ஒவ்வொரு படைப்பிற்கும், கூடுமானவரை நவீன ஓவியங்கள் வரைகலை ஓவியங்களாகத் தரப்பட்டிருக்கின்றன. அது அந்தப் படைப்பின் புரிதலை இன்னும் ஆழப்படுத்தி அழகுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாகக் காற்றுவெளி இணைய இதழினுடைய வடிவமைப்பு மிக நேர்த்தியான வடிவில் படிப்பவரைப் படிக்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றது.
தொடர்ந்து முன்னேற்றத்தை மட்டுமே எண்ணமாகக் கொண்டு இவ்விதழ் பயணித்துக் கொண்டிருக்கிறது. நவீனத்தின் வாசல்களில் வேகமாக ஓடிவரும் சிற்றிதழ்களில், சரியாகச் சொல்லப்போனால் முதன்மையான இடங்களில் இவ்விதழும் ஒன்றாகவே இருக்கும்.
இதை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கும் கவிஞர், சிறுகதையாளர், படைப்பாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட ”முல்லை அமுதன்” அவர்கள் பல வலைப்பூக்களையும் நிர்வகித்து வருகிறார். அதில் அவர் தம் படைப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதேபோல சிற்றிதழ்களினுடைய தொகுப்பையும் தொகுத்து, ஒரு நூலகம் செய்ய வேண்டிய அரிய பணியையும் செய்து வருகிறார்.
உலகத் தமிழ்எழுத்தாளர்கள் எல்லாம் ஒன்றிணையும் முறையில், அனைவரையும் மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்டு, மேலும், பல இலக்கிய இதழ்கள் மூலமாகத் தொடர்பு கொண்டு, படைப்புகளைக் கேட்டு, அதை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு இதழையும் குறைந்தது 150 பக்கங்கள் வரைத் தரமான படைப்புகளாக உருவாக்கிச் சேகரித்து வெளியிடும் பணியை முல்லை அமுதன் அவர்கள் செய்து வருகிறார். இவ்வாறு தமிழுக்காக உழைக்கும் இவரைத் தமிழ் இனம் கட்டாயம் பாராட்ட வேண்டும்
21 ஆம் நூற்றாண்டில் தமிழ் வளர்வதற்குக், காற்றுவெளி இணையப் பத்திரிக்கையும் ஒரு மிகச் சிறந்த அடித்தளமாக அமைந்திருக்கும் என்பதில் வியப்பில்லை.
எழுத்தாளர் முல்லை அமுதன் குறித்துக் கூறுவதானல்,
”முல்லைஅமுதன் எனும் பெயரில் 80களில் இருந்து எழுதி வரும் மகேந்திரன் இரத்தினசபாபதி அவர்கள் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.
நித்தியகல்யாணி, புதிய அடிமைகள், விடியத் துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத் தொடும், ஆத்மா, யுத்த காண்டம், விமோசனம் நாளை, பட்டங்கள் சுமக்கின்றான், சிநேகம், யாகம், இசைக்குள் அடங்காத பாடல்கள், இலக்கியப்பூக்கள் போன்ற நூல்களுடன், தாமரைதீவானின் மொழிநூறு,சுதந்திரன் கவிதைகள் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
வருடந்தோறும் ஈழத்து நூல் கண்காட்சிகளை நடத்துவதுடன், ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் வருகிறார்.
இவருக்கு இங்கிலாந்து ரூட்டிங் முத்துமாரியம்மன் கோவில் அறங்காவர் குழுவினரால், முதமிழ் விழாவில் (14/04/2012) ‘பைந்தமிழ்க் காவலர்’ எனும் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
காற்றுவெளியில் எழுதியும் படித்தும் தமிழோடு நாமும் உயர்வோம். அவ்வாறு உயர… https://issuu.com/kaatruveli எனும் சொடுக்கியைச் சொடுக்குவோம்.
(இணையம் அறிவோமா? தொடரும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
தமிழ் இணையதளங்களை சல்லடையாக சலித்து, எங்களுக்கு அமுதூட்டி கொண்டிருக்கும் முனைவர் பாரதிசந்திரன் ஐயா அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி!
மு த